பெர்லின் சுவர் இடிக்கப்பட்டதன் முப்பதாம் ஆண்டு நிறைவு நாள் கொண்டாட்டங்கள் பெர்லின் சுவர் இடிக்கப்பட்டதன் முப்பதாம் ஆண்டு நிறைவு நாள் கொண்டாட்டங்கள் 

நமக்கு சுவர்கள் அல்ல, பாலங்களே தேவை

வீழ்த்தப்பட்ட சுவர்களின் கற்களை எடுத்து, நம் பொதுவான இல்லத்தை ஒன்று சேர்ந்து கட்டுவதற்கு காலம் கனிந்துள்ளது - புனித திருத்தந்தை 2ம் ஜான் பால்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

பெர்லின் சுவர் இடிக்கப்பட்டதன் முப்பதாம் ஆண்டு நிறைவு நாளான, நவம்பர் 09, இச்சனிக்கிழமையன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டர் செய்தியில், இறைவேண்டலின் வல்லமை பற்றி எழுதியுள்ளார்.

இறைவேண்டல், உடன்பிறந்தநிலை உணர்வுகளை எப்போதும் எழுப்புகின்றது, அது தடைகளை உடைக்கின்றது, எல்லைகளைக் கடந்துசெல்கின்றது, காணமுடியாதவற்றை உருவாக்குகின்றது, ஆனால், உண்மையான மற்றும், ஆற்றல்வாய்ந்த பாலங்களாக உள்ளது, நம்பிக்கையின் எல்லைகளைத் திறக்கின்றது என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.  

பெர்லின் சுவர் - மூன்று திருத்தந்தையர்

மேலும், பெர்லின் சுவர் பற்றி, மூன்று திருத்தந்தையர் கூறியிருப்பதை, நவம்பர் 09, இச்சனிக்கிழமையன்று கத்தோலிக்கர் நினைவுகூர்கின்றனர்.

விடுதலை உணர்வில் ஐரோப்பாவை ஒன்றிணைப்பதில் முக்கிய பங்காற்றியுள்ள புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், இப்போதும், வருங்கால ஐரோப்பாவிலும், தங்களின் சொந்த இடங்களாக உள்ளவற்றை முழுமையாகத் திரும்பப் பெறுவதற்கு, மேற்கத்திய ஐரோப்பியர்கள் தங்கள் சகோதரர்களுக்கு உதவுவதற்கு நேரம் வந்துள்ளது என்று கூறினார்.

ஆம், வீழ்த்தப்பட்ட சுவர்களின் கற்களை எடுத்து, நம் பொதுவான இல்லத்தை ஒன்று சேர்ந்து கட்டுவதற்கு காலம் கனிந்துள்ளது என்றும், பெர்லின் சுவர் பற்றி, புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் கூறினார். 1979ம் ஆண்டு ஜூன் மாதத்தில், தனது தாயகமான போலந்து நாட்டிற்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொண்ட புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், கம்யூனிசத்தால் பிரிக்கப்பட்டிருந்த ஐரோப்பிய கண்டத்தில் மாபெரும் நல்தாக்கத்தை உருவாக்கியவர்.

திருத்தந்தை 16ம் பெனடிக்ட்

பெர்லின் சுவர் பற்றிக் கூறிய, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், பல ஆண்டுகளாக எங்கள் தாயகத்தையும், எங்கள் குடும்பங்கள், உறவுகள் மற்றும், நண்பர்களையும் கட்டாயமாகப் பிரித்து வைத்திருந்த அந்த மரணத்தின் எல்லையை நினைத்துப் பார்க்கின்றோம் என்று கூறினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பெர்லின் சுவர் பற்றிக் கூறுகையில், எங்கே சுவர்கள் உள்ளனவோ அங்கே, இதயங்கள் மூடப்பட்டுள்ளன, நமக்கு சுவர்கள் அல்ல, பாலங்களே தேவை என்று கூறினார்.

1961ம் ஆண்டு முதல், 1989ம் ஆண்டு வரை, பெர்லின் நகரை, எல்லா நிலைகளிலும் பிரித்து வைத்திருந்த சுவர், 1989ம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி இடிக்கப்பட்டது. இதன் வழியாக, மேற்கு மற்றும், கிழக்கு ஜெர்மனிகளாக பிரிந்திருந்த ஜெர்மனி, 1990ம் ஆண்டு அக்டோபர் 3ம் தேதி, மீண்டும் ஒரே ஜெர்மனியாக உருவானது.    

162 கிலோ மீட்டர் தூரம் கொண்டிருந்த பெர்லின் சுவர், 28 ஆண்டுகளாக, இரு ஜெர்மனிகளையும் பிரித்திருந்தது. 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 November 2019, 14:55