தேடுதல்

Vatican News
ஜப்பான் திருத்தூதுப் பயணத்தில் திருத்தந்தை ஜப்பான் திருத்தூதுப் பயணத்தில் திருத்தந்தை 

தாய்லாந்து, ஜப்பான் மக்களை ஆசீர்வதிக்கும் டுவிட்டர் செய்தி

"தாய்லாந்து மற்றும் ஜப்பானில் நான் மேற்கொண்ட திருத்தூதுப் பயணத்திற்காக, இறைவனுக்கு நன்றி கூறுகிறேன். இந்நாடுகளைச் சார்ந்த மக்களை, இறைவன், வளமையிலும், அமைதியிலும் அபரிமிதமாக ஆசீர்வதிப்பாராக" – திருத்தந்தை டுவிட்டர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தாய்லாந்து, ஜப்பான் ஆகிய இரு நாடுகளில் மேற்கொண்ட 32வது திருத்தூதுப் பயணத்தை, நவம்பர் 26, இச்செவ்வாய் மாலை 5 மணியளவில் நிறைவு செய்து, நவம்பர் 27, இப்புதன் காலை, புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் வழங்கிய மறைக்கல்வி உரையில், இப்பயணத்தின் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

தன் மறைக்கல்வி உரையின் தொடர்ச்சியாக, திருத்தந்தை, இப்புதனன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியிலும், இவ்விரு பயணங்களைக் குறித்தும், அந்நாட்டு மக்களைக் குறித்தும் தன் கருத்துக்களைப் பதிவு செய்திருந்தார்.

"தாய்லாந்து மற்றும் ஜப்பானில் நான் மேற்கொண்ட திருத்தூதுப் பயணம், எனக்கு வழங்கப்பட்ட ஒரு கொடையாதலால், நான் இறைவனுக்கு நன்றி கூறுகிறேன். இந்தப் பயணம் இந்நாடுகளைச் சார்ந்த மக்கள் மீது என் நெருக்கத்தை அதிகரித்துள்ளது: இறைவன் அவர்களை, வளமையிலும், அமைதியிலும் அபரிமிதமாக ஆசீர்வதிப்பாராக" என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

ஒவ்வொரு நாளும் @pontifex என்ற வலைத்தள முகவரியில், திருத்தந்தை வழங்கிவரும் டுவிட்டர் செய்திகள், இத்தாலியம், ஆங்கிலம், பிரெஞ்சு, இஸ்பானியம், போர்த்துகீசியம், ஜெர்மன், போலந்து, இலத்தீன் மற்றும் அரேபியம் ஆகிய ஒன்பது மொழிகளில் வெளியாகின்றன.

நவம்பர் 27, இப்புதன் முடிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்திகள், 2,225 என்பதும், அவரது டுவிட்டர் பதிவுகளை, ஆங்கில மொழியில் பின்பற்றுவோரின் எண்ணிக்கை மட்டும், 1 கோடியே 81 இலட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கன.

இத்துடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் செயல்பாடுகளை மையப்படுத்தி, @franciscus என்ற பெயரில் இயங்கிவரும் instagram தளத்தில், தாய்லாந்து மற்றும் ஜப்பானில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கலந்துகொண்ட நிகழ்வுகளின் புகைப்படங்கள் உட்பட, இதுவரை வெளியான புகைப்படங்கள், மற்றும், காணொளிகள், 798 என்பதும், அவற்றைப் பின்பற்றுவோரின் எண்ணிக்கை 63 இலட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கன.

27 November 2019, 15:10