தேடுதல்

Vatican News
வறியோருடன் மதிய உணவு அருந்திய திருத்தந்தை பிரான்சிஸ் - கோப்புப் படம் 2017 வறியோருடன் மதிய உணவு அருந்திய திருத்தந்தை பிரான்சிஸ் - கோப்புப் படம் 2017  (AFP or licensors)

வறியோரின் அழுகுரலுக்குச் செவிசாய்ப்போம்

இஞ்ஞாயிறு காலை 10 மணிக்கு, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில், வறியோர் உலக நாள் திருப்பலியை நிறைவேற்றும் திருத்தந்தை, அன்று, ஏறத்தாழ 1,500 ஏழைகளுடன், புனித திருத்தந்தை 6ம் பவுல் அரங்கத்தின் முன்பக்கம் மதிய உணவு அருந்துவார்.

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

“வறியோரின் அழுகுரலுக்குச் செவிசாய்க்கும் சக்தியை நாம் பெறுவதற்காக, கடவுளின் அருளை மன்றாடுவோம், வறியோரின் அழுகுரல், திருஅவையின் நம்பிக்கையின் அழுகுரல்” என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சனிக்கிழமையன்று கூறியுள்ளார்.

நவம்பர் 17, இஞ்ஞாயிறன்று, மூன்றாவது வறியோர் உலக நாள் கடைப்பிடிக்கப்படும்வேளை, ஏழைகளின் அழுகுரலுக்கு நாம் செவிமடுக்க வேண்டும் என்று, நவம்பர் 16, இச்சனிக்கிழமையன்று தன் டுவிட்டர் செய்தி வழியாக, திருத்தந்தை கேட்டுக்கொண்டுள்ளார்.

வறியோர் உலக நாள்

இஞ்ஞாயிறு காலை பத்து மணிக்கு, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில், வறியோர் உலக நாள் திருப்பலியை நிறைவேற்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்று, ஏறத்தாழ 1,500 ஏழைகளுடன், புனித திருத்தந்தை 6ம் பவுல் அரங்கத்தின் முன்பக்கம் மதிய உணவு அருந்துவார். ஏழைகளுக்கு 150 மேஜைகளில் உணவு பரிமாறப்படும்.

வறியோர் உலக நாளை முன்னிட்டு, ஏழைகளின் அன்னை மரியாவைச் சித்தரிக்கும் மூன்று திருவுருவங்களை, பெல்ஜியம் நாட்டின் Banneaux திருத்தலம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு வழங்கவுள்ளது.

"வறியவரின் நம்பிக்கை ஒருபோதும் வீண்போகாது" (தி.பா.9,18) என்ற தலைப்பில், மூன்றாவது வறியோர் உலக நாள், நவம்பர் 17, இஞ்ஞாயிறன்று கடைப்பிடிக்கப்படுகிறது.

வறியோர் உலக நாள், 2017ம் ஆண்டிலிருந்து, பொதுக்காலம் 33ம் ஞாயிறன்று கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

16 November 2019, 14:58