தாய்லாந்து பிரதமர் மாளிகையில் திருத்தந்தை தாய்லாந்து பிரதமர் மாளிகையில் திருத்தந்தை 

தாய்லாந்து அரசு, சமய, தூதரக அதிகாரிகள் சந்திப்பு

தாய்லாந்தின் 3 இலட்சத்து 80 ஆயிரத்திற்கு அதிகமான கத்தோலிக்கர் உட்பட, அரசும், மக்களும், திருத்தந்தையே தங்களின் இப்பயணம் வெற்றிபெற எங்களால் இயன்ற எல்லா முயற்சிகளையும் எடுத்து வருகிறோம்

மேரி தெரேசா: வத்திக்கான்

தாய்லாந்து பயணத்தின் அதிகாரப்பூர்வ நிகழ்வுகள்,  நவம்பர் 21, இவ்வியாழன் உள்ளூர் நேரம் காலை 8.45 மணிக்கு ஆரம்பமாயின. முதலில், தாய்லாந்து அரசு மாளிகைக்குச் சென்ற திருத்தந்தைக்கு அரசு மரியாதையுடன்கூடிய அதிகாரப்பூர்வ வரவேற்பு வழங்கப்பட்டது. அம்மாளிகையில், விருந்தினர் புத்தகத்தில், “நான் பெற்ற நல் வரவேற்பிற்கு மிக்க நன்றி. பொது நலனைத் தேடும் முயற்சியில், நல்லிணக்கம் மற்றும், ஒத்துழைப்பில், தாய்லாந்து மக்கள் எப்போதும் மலர்ந்து மணம்பெற, எல்லாம்வல்ல கடவுளிடம் மன்றாடுகிறேன்” என்ற வார்த்தைகளை எழுதி கையெழுத்திட்டார் திருத்தந்தை. பின்னர், தாய்லாந்து பிரதமர் அதிபர் Prayuth Chan-ocha அவர்களை, தனியே சந்தித்துப் பேசியபின், பாப்பிறை பதக்கம் ஒன்றையும் பிரதமருக்குப் பரிசாக அளித்தார், திருத்தந்தை பிரான்சிஸ். இச்சந்திப்பிற்குப் பின், அம்மாளிகையின் புனித மறைசாட்சிகள் அறையில், தாய்லாந்து அரசு, சமுதாய, சமயக் குழுக்கள், மற்றும், தூதரக அதிகாரிகளைச் சந்திக்கச் சென்றார், திருத்தந்தை பிரான்சிஸ்.

தாய்லாந்து பிரதமரின் வரவேற்புரை

பாங்காக் அரசு மாளிகையில், முதலில் தாய்லாந்து பிரதமர் Prayut Chan-o-cha அவர்கள் திருத்தந்தையை வரவேற்று உரையாற்றினார். தாய்லாந்தில் கத்தோலிக்க மறைப்பணித்தளம்  நிறுவப்பட்டதன் 350ம் ஆண்டு நிறைவு, திருப்பீடத்திற்கும், தாய்லாந்திற்கும் இடையே தூதரக உறவுகள் உருவானதன் ஐம்பதாம் ஆண்டு நிறைவு ஆகிய இரு நிகழ்வுகளை முன்னிட்டு இத்திருத்தூதுப் பயணம் நடைபெறுகின்றது. திருத்தந்தையே, மனித சமுதாயத்தில் நல்லிணக்கத்தை ஊக்குவித்தல், மனித வள வளர்ச்சிக்கு, குறிப்பாக, இளையோர் வளர்ச்சி, வறுமை ஒழிப்பு, சமுதாய சமநிலை, சூழலியல் பாதுகாப்பு, உலகின் ஒவ்வொரு மூலையிலும் படைப்புப் பாதுகாக்கப்படல், அமைதி போன்றவற்றிற்கு, தாங்கள் சமய, இன வேறுபாடின்றி எடுத்துவரும் சிறந்த பணிகளைப் பார்த்து வியப்படைகிறேன். தாய்லாந்து அரசும், சமய உரிமைகள் மற்றும் ஏனைய உரிமைகளுக்கு உறுதி வழங்குதல் உட்பட, அடிப்படை மனித உரிமைகளை ஊக்குவித்து வருகின்றது. இயற்கை வளங்களையும், சுற்றுச்சூழலையும் பாதுகாப்பதற்கும், குடும்ப அமைப்பை உறுதிப்படுத்தவும், சமுதாயத்தில் அனைவருக்கும் சம வாய்ப்புகள் கிடைப்பதை உறுதிசெய்யவும், நலவாழ்வைப் பேணவும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இவையனைத்திலும், தாய்லாந்து அரசர் Bhumibol Adulyadej அவர்களின் பொருளாதார மெய்யியல் கோட்பாடு செயல்படுத்தப்படுகின்றது. ASEAN அமைப்பின் தலைவராகவுள்ள தாய்லாந்து, அனைத்துப் பகுதிகளிலும், நீடித்த நிலையான வளரச்சி இடம்பெற முயற்சித்து வருகிறது. தாய்லாந்தின் 3 இலட்சத்து 80 ஆயிரத்திற்கு அதிகமான கத்தோலிக்கர் உட்பட, அரசும், மக்களும், திருத்தந்தையே தங்களின் இப்பயணம் வெற்றிபெற எங்களால் இயன்ற எல்லா முயற்சிகளையும் எடுத்து வருகிறோம். உண்மையில், திருத்தந்தையே, தங்களின் இப்பயணம், தாய்லாந்திற்கும் திருப்பீடத்திற்கும், இடையே நிலவும் தூதரக உறவுகளை மேலும் உறுதிப்படுத்தும். இவ்வாறு தாய்லாந்து பிரதமர் வரவேற்புரையாற்றிய பின்னர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் அந்நாட்டுக்கு தனது முதல் உரையை வழங்கினார். புலம்பெயர்ந்தோரை அதிகமாகக் கொண்டிருக்கும் தாய்லாந்து நாட்டை ஊக்கப்படுத்திய திருத்தந்தை, பாங்காக், அரசு மாளிகையிலிருந்து, புத்தமத முதுபெரும்தந்தை 9ம் Ariyavongsagatanana (Somdej Phra Maha Muneewong) அவர்களைச் சந்திக்கச் சென்றார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 November 2019, 15:34