தேடுதல்

சிறைகளில்  மேய்ப்புப்பணியாற்றுவோருக்கு,  திருத்தந்தை உரையாற்றுகிறார் சிறைகளில் மேய்ப்புப்பணியாற்றுவோருக்கு, திருத்தந்தை உரையாற்றுகிறார்  

முன்னாள் கைதிகள் மாண்புடன் நடத்தப்பட அழைப்பு

தங்களின் குற்றங்களுக்காக ஏற்கனவே தண்டனைகளை அனுபவித்த முன்னாள் கைதிகள் மீது புறக்கணிப்பைக் காட்டுவதன் வழியாக, அவர்கள், புதிய சமுதாயத் தண்டனையை மீண்டும் அனுபவிக்க வேண்டுமா?

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

தண்டனை காலம் முடிந்து சிறையிலிருந்து வெளியே வருபவர்கள், சமுதாயத்தில் மாண்புடன் வாழ்வதற்கு உதவுவதற்கு, இக்காலத்தில் சிறப்பான முறையில் நம் சமுதாயங்கள் அழைக்கப்பட்டுள்ளன என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நவம்பர் 08, இவ்வெள்ளியன்று கூறினார்.

ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவை, நவம்பர் 7, 8 ஆகிய நாள்களில் உரோம் நகரில் நடத்திய பன்னாட்டு கருத்தரங்கில் கலந்துகொண்ட, சிறைகளில்  மேய்ப்புப்பணியாற்றுவோரை, திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாறு கூறினார்.

சிறைகள், தன்னலம் மற்றும், புறக்கணிப்புக் கலாச்சாரத்தின் எதிர்விளைவுகளை, தொடர்ந்து பிரதிபலித்துக்கொண்டிருக்கின்றன என்று, ஏற்கனவே பலமுறை கூறியுள்ளேன் என்று கூறியத் திருத்தந்தை, கற்றுக்கொடுப்பதைவிட அடக்கிவைப்பதும், சமுதாயத்தில் நிலவும் அநீதியை மறுப்பதும், இக்காலத்தில் எளிதாகத் தெரிகின்றது என்று கூறினார்.

அனைத்து குடிமக்களின் முன்னேற்றத்திற்கு சம வாய்ப்புக்களை வழங்குவதைவிட, குற்றம்புரிந்தவர்களை மறப்பதற்குரிய தருணங்களை உருவாக்குவதும் எளிது என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முன்னாள் கைதிகள், சமுதாயத்தில் மீண்டும் ஒருங்கிணைக்கப்படும் நடவடிக்கைகளை முன்னேற்றுவதற்கு சிறைகள் அடிக்கடி முயற்சிகள் எடுப்பதில்லை என்றும் தெரிவித்தார்.

கைதிகளுக்கு மறுவாழ்வு

தங்களின் குற்றங்களுக்கு ஏற்கனவே தண்டனைகளை அனுபவித்த முன்னாள் கைதிகள் மீது புறக்கணிப்பைக் காட்டுவதன் வழியாக, அவர்கள், மீண்டும் புதிய சமுதாயத் தண்டனையை அனுபவிக்க வேண்டுமா என்று சிந்திக்குமாறு, கிறிஸ்தவ குழுமங்களை திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.

சிறைகளில் மேய்ப்புப்பணியாற்றுவோர், பெருந்துன்ப சோதனைகளை எதிர்கொள்ளும் கைதிகளின் குடும்பங்களுக்கு ஆற்றிவரும் பணிகளுக்கு நன்றி தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வாழ்வின் இறுதியில், இறைத்தந்தையால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக, கிறிஸ்துவால் அவர்கள் வரவேற்கப்படுவார்கள் என்றும்    ஊக்கப்படுத்தினார்.

இக்கருத்தரங்கில், அமெரிக்க, ஆப்ரிக்கா, ஆசியா, ஐரோப்பா, ஓசியானியா ஆகிய அனைத்துக் கண்டங்களில், சிறைகளில் மேய்ப்புப்பணியாற்றுவோர் கலந்துகொண்டனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 November 2019, 15:06