தேடுதல்

Vatican News
மூன்று பேரிடர்களால் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவருடன் திருத்தந்தை பிரான்சிஸ் மூன்று பேரிடர்களால் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவருடன் திருத்தந்தை பிரான்சிஸ்  (Vatican Media)

மூன்று பேரிடர்களால் பாதிக்கப்பட்டோருக்கு திருத்தந்தையின் ஆறுதல்

பேரழிவுகளின் பாதிப்புகளால் துன்புறும் மக்கள் மறக்கப்படவில்லை என்பதை உணர்த்தும் நோக்கத்தில், நம் உதவும் கரங்கள் ஒன்றிணையவேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இந்த சந்திப்பு என் இத்திருத்தூதுப் பயணத்தில் மிகவும் முக்கியமான ஒன்று. பேரழிவு நிகழ்வுகள் குறித்த தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட Toshiko, Tokuun, Matsuki ஆகிய மூவருக்கும் என் நன்றியைத் தெரிவிக்கிறேன். நிலநடுக்கம், சுனாமி, அணுஉலை விபத்து என, மூன்று பேரிடர்களால் பாதிக்கப்பட்ட 18,000க்கும் மேற்பட்ட மக்கள், அவர்களின் குடும்பங்கள், மற்றும், காணாமல் போனவர்களுக்காக சிறிது நேரம்  அமைதியில் செபிப்போம். இந்த செபம் நம்மை ஒன்றிணைப்பதோடு, வருங்காலத்தை நம்பிக்கையுடன் காண்பதற்குரிய சக்தியையும் வழங்கட்டும்.

மற்றவர்களால் மறக்கப்பட்டு வாழ்வோர்

இந்த அழிவுகளால் பாதிக்கப்பட்டு இன்னும் தற்காலிக குடியிருப்புகளில் வாழ்ந்து வரும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் நடுவே பணியாற்றிவரும் அரசு அதிகாரிகள், தனியார் அமைப்புகள், மற்றும், நல்மனம் கொண்ட தனியார்களின் சேவைக்கு நன்றியை வெளியிடுகிறேன். சுற்றுச்சூழல் அழிவாலும், அணுக்கதிர் வீச்சினாலும் பாதிக்கப்பட்ட மக்கள் பலர், இன்று, மற்றவர்களால் மறக்கப்பட்டுள்ள நிலையில் வாழ்கிறார்கள். இந்த மக்களுக்குத் தேவைப்படும் உதவிகளை அவர்கள் பெற, நல்மனம் கொண்ட அனைவரும் உதவுமாறு, இக்கூட்டத்தின் வழியாக ஒன்றிணைந்து விண்ணப்பிப்போம். இதற்கு சமூகத்தின் ஒருமைப்பாடு தேவைப்படுகிறது. எந்த ஓர் இடரையும், எவ்வாறு, ஒருமைப்பாட்டுணர்விலும், பொறுமையிலும், உறுதிப்பாட்டிலும் வெற்றிக்கொள்ள முடியும் என்பதற்கு, ஜப்பான் மக்கள் சாட்சிகளாக உள்ளார்கள்.  இந்நேரத்தில், போர்கள், புலம்பெயர்ந்தோர், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், சுற்றுச்சூழல் சவால்கள் ஆகியவை குறித்தும் சிந்திப்போம். இவற்றிக்கு தனித்தனியாகத் தீர்வு காணமுடியாது. இவை ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. குடும்பத்தின் ஓர் அங்கத்தினர் துன்புற்றால், அக்குடும்பமே துன்புறும் என்ற உள்ளுணர்வை, சமுதாயத்தில் வளர்க்க, நாம் ஒவ்வொருவரும் உழைக்கவேண்டும்.

ஜப்பான் ஆயர்களின் அழைப்பு

Fukushima அணுசக்தி உலையில் நிகழ்ந்த விபத்து குறித்தும், அதன் பின்விளைவுகள் குறித்தும் இப்போது குறிப்பிட விரும்புகிறேன். அறிவியல், மற்றும், மருத்துவ அக்கறையின் மத்தியில், சமூக ஒருங்கிணைப்பு எனும் சிக்கலை மீட்டெடுப்பது குறித்த  பெரும் சவாலும் நம் முன் உள்ளது. இந்தப் பின்னணியில்தான், அணுசக்தி நிலையங்கள் மூடப்படவேண்டும் என, ஜப்பான் நாட்டின் சகோதர ஆயர்கள் அழைப்பு விடுத்து வருகின்றனர்.

மனிதகுல வளர்ச்சியின் அளவுகோலாக, தொழில்நுட்ப வளர்ச்சியை எடுத்துக்கொள்ளும் சோதனையில் இக்காலம் சிக்கியுள்ளது. தனிமனிதர்களின் வாழ்வையும், சமூகத்தின் செயல்பாடுகளையும் வடிவமைக்கும் இன்றையத் தொழில்நுட்ப முன்னேற்றங்கள், தனிமனித வாழ்வு, மற்றும், சமூகத்தின் பல கூறுகளில் பாதிப்பைக் கொண்டுள்ளன. ஆகவே, நாம் யார் என்றும், நாம் என்னவாகப் போகிறோம் என்றும் அவ்வப்போது அமைதியில் அமர்ந்து சிந்திப்பது நலம். எத்தகைய ஓர் உலகை நாம் வருங்காலத் தலைமுறைகளுக்கு விட்டுச் செல்லப்போகிறோம்?. இங்கு நாம் சுயநல முடிவுகளை எடுக்கமுடியாது, ஏனெனில், வருங்காலம் குறித்த பொறுப்புணர்வு நமக்கு உள்ளது. ஒவ்வொரு மனிதரையும், இவ்வுலக இயற்கையையும் உள்ளடக்கிய வருங்கால பாதையை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும்.

அழிவுகளின் பாதிப்புகளால் துன்புறும் மக்கள் மறக்கப்படவில்லை என்பதை உணர்த்தும் நோக்கத்தில் நம் உதவும் கரங்கள் ஒன்றிணையவேண்டும். பாதிக்கப்பட்ட மக்களின் துயர்துடைக்க பணியாற்றிவரும் அனைவருக்கும் மீண்டுமொருமுறை நன்றியைத் தெரிவிக்கிறேன். இவர்கள் காட்டும் இந்த இரக்கத்தின் பாதை வழியாக, அனைவரும், வருங்காலம் குறித்த நம்பிக்கை, நிலையான தன்மை, பாதுகாப்பு என்ற நன்மைகளைப் பெறுவார்களாக.

எனக்காகச் செபியுங்கள். உங்கள் மீதும், உங்களால் அன்புகூரப்படும் அனைவர் மீதும்,  ஞானம், திறன், மற்றும், அமைதியின் ஆசீரை இறைவன் பொழிவாராக.

25 November 2019, 15:32