தேடுதல்

Vatican News
டோக்கியோ அரங்கில் திருப்பலி நிறைவேற்ற வந்த திருத்தந்தை டோக்கியோ அரங்கில் திருப்பலி நிறைவேற்ற வந்த திருத்தந்தை  (ANSA)

டோக்கியோவில் திருத்தந்தை திருப்பலி

ஆசியாவிலுள்ள சகோதரர், சகோதரிகளோடு ஒன்றுசேர்ந்து நடந்து, வாழ்வெனும் கடவுளின் கொடையைப் பாதுகாப்போம், கடவுளின் இரக்கமும், குணமாக்கும் நற்செய்தியை அறிவிப்போம்

மேரி தெரேசா: வத்திக்கான்

இத்திங்கள், உள்ளூர் மாலை 4 மணிக்கு, டோக்கியோ அரங்கத்தில், மனித வாழ்வு ஒரு கொடை எனும் தலைப்பில், இலத்தீனில் திருப்பலி நிறைவேற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ். ஹாங்காக் முன்னாள் ஆயர் கர்தினால் John Tong Hon, லக்சம்பர்க் பேராயரும், ஜப்பானில் பல ஆண்டுகள் மறைப்பணியாற்றியவருமான இயேசு சபை கர்தினால் Jean-Claude Hollerich போன்றோர், திருத்தந்தையுடன் கூட்டுத் திருப்பலியாற்றினர். ஐம்பதாயிரத்துக்கு அதிகமான விசுவாசிகள் கலந்துகொண்ட இத்திருப்பலியில் திருத்தந்தை ஆற்றிய மறையுரையில், வாழ்வின் நற்செய்தியை அறிவிப்பது என்பது, நாம் ஒரு குழுமமாக, மருத்துவமனையாக மாற வேண்டும், அதாவது, காயங்களைக் குணப்படுத்தவும், ஒப்புரவு மற்றும், மன்னிப்பின் பாதையை எப்போதும் வழங்குபவர்களாகவும் மாற வேண்டும் என வலியுறுத்துகின்றது என்று கூறினார். இத்திருப்பலியின் இறுதியில், டோக்கியோ பேராயர் Isao Kikuchi அவர்கள், ஜப்பான் கத்தோலிக்கர் பெயரால், திருத்தந்தையின் ஜப்பான் திருத்தூதுப் பயணத்திற்கு நன்றி தெரிவித்தார். அனைத்து உயிர்களையும் பாதுகாக்க வேண்டுமென்பது, இன்றைய ஜப்பான் சமுதாயத்திற்கு முக்கியமானது. சூழலியல், பொருளாதாரம், அண்டை நாடுகளுடன் நல்லிணக்கத்துடன் வாழ்தல், மனித வாழ்வின் மாண்பு போன்றவை சார்ந்த பல சவால்களை இன்று ஜப்பான் எதிர்கொள்கிறது. திருத்தந்தையே, தங்களின் வார்த்தைகள் ஊக்குமூட்டுகின்றன. ஆசியாவிலுள்ள சகோதரர், சகோதரிகளோடு ஒன்றுசேர்ந்து நடந்து, வாழ்வெனும் கடவுளின் கொடையைப் பாதுகாப்போம், கடவுளின் இரக்கமும், குணமாக்கும் நற்செய்தியை அறிவிப்போம். இவ்வாறு, டோக்கியோ பேராயர் Kikuchi அவர்கள் திருத்தந்தையிடம் கூறினார். அனைவரையும் ஆசீர்வதித்த திருத்தந்தை, ஜப்பான் பிரதமர் வாழும் மற்றும், அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள Kantei மாளிகைக்குச் சென்றார்.

25 November 2019, 15:31