தேடுதல்

Vatican News
வறியோர் உலக நாள் திருப்பலி 171119 வறியோர் உலக நாள் திருப்பலி 171119   (Vatican Media)

வறியோர் உலக நாள் திருப்பலியில் திருத்தந்தையின் மறையுரை

வறியோர், இறைவனின் கண்களில் விலைமதிப்பற்றவர்கள், நற்செய்தியின் வழியில் நாம் எவ்விதம் நடக்கவேண்டும் என்பதை நமக்கு நினைவூட்டுபவர்கள் - திருத்தந்தை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஏழைகளோடு இணைந்து நிற்பதன் வழியாகவும், அவர்களுக்குப் பணியாற்றுவதன் வழியாகவும், இயேசுவைப்போல் நாமும் இவ்வுலகைக் காண்கிறோம் என்றும், இவ்வுலகில் எது நிலைத்திருக்கும், எது கடந்து போகும் என்பதையும் நாம் காண்கிறோம் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறு வழங்கிய மறையுரையில் கூறினார்.

2016ம் ஆண்டு திருஅவையில் சிறப்பிக்கப்பட்ட இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் இறுதியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உருவாக்கிய வறியோர் உலக நாளின் மூன்றாவது ஆண்டு கொண்டாட்டம் இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்டதையொட்டி, புனித பேதுரு பெருங்கோவிலில், வறியோருடன் இணைந்து திருப்பலி நிறைவேற்றினார், திருத்தந்தை.

இத்திருப்பலியில் வழங்கிய மறையுரையில், இன்றைய உலகில், ஒரு சில மனிதரின் பேராசையால், பல்லாயிரம் ஏழைகளின் வறுமை அதிகரித்துள்ளது என்பதை வருத்தத்துடன் சுட்டிக்காட்டினார்.

இன்றைய உலகின் அவசரச் சூழல், அயலவர் குறித்த நம் அக்கறைகளை அகற்றிவருகின்றன என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உதவித் தேவைப்படுவோரை நாம் பயனற்ற மக்களாகவும், தொல்லை தருபவர்களாகவும் கண்ணோக்கும் நிலை அதிகரித்து வருகிறது என்று கூறினார்.

வறியோர், இறைவனின் கண்களில் விலைமதிப்பற்றவர்கள், அவர்கள், பிறரின் வழிநடத்துதலைச் சார்ந்திருப்பவர்கள், நற்செய்தியின் வழியில் நாம் எவ்விதம் நடக்கவேண்டும் என்பதை நமக்கு நினைவூட்டுபவர்கள் என்று, திருத்தந்தை தன் மறையுரையில் எடுத்துரைத்தார்.      

சுயநலம் என்ற சோதனைக்குள்ளாக்கப்பட்டுள்ள இன்றைய உலகில், இயேசுவின் மொழியை நாம் பேசவேண்டுமெனில், 'நான்' என்ற சொல்லை முற்றிலும் நீக்கி, நமக்குள்ளிருந்து வெளியேறவேண்டும் என்ற அழைப்பையும் தன் மறையுரையில் முன்வைத்தார், திருத்தந்தை.

18 November 2019, 16:13