தேடுதல்

Vatican News
கான்ஸ்தாந்திநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு ஆர்த்தடாக்ஸ் சபை முதுபெரும்தந்தை முதலாம் பர்த்தலோமேயு கான்ஸ்தாந்திநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு ஆர்த்தடாக்ஸ் சபை முதுபெரும்தந்தை முதலாம் பர்த்தலோமேயு 

முதுபெரும்தந்தை முதலாம் பர்த்தலோமேயுவுக்கு வாழ்த்து செய்தி

கீழை வழிபாட்டுமுறை மற்றும், இலத்தீன் வழிபாட்டுமுறை கிறிஸ்தவர்கள் மத்தியில் முழு ஒன்றிப்பை மீண்டும் ஏற்படுத்துவதற்கு, கத்தோலிக்கத் திருஅவை, தளரா நோக்கம் கொண்டுள்ளது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கான்ஸ்தாந்திநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு ஆர்த்தடாக்ஸ் சபை, நவம்பர் 30, இச்சனிக்கிழமையன்று, தன் பாதுகாவலரான திருத்தூதர் அந்திரேயாவின் விழாவைச் சிறப்பிக்கும்வேளை, அச்சபையின் முதுபெரும்தந்தை முதலாம் பர்த்தலோமேயு அவர்களுக்கு, நல்வாழ்த்து செய்தியை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கான்ஸ்தாந்திநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு ஆர்த்தடாக்ஸ் சபையுடன் சேர்ந்து, இவ்விழாவைச் சிறப்பிப்பதற்காக, இஸ்தான்புல் நகரில் நான்கு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள திருப்பீட பிரதிநிதி குழு வழியாக, இச்செய்தியை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கீழை வழிபாட்டுமுறை மற்றும், இலத்தீன் வழிபாட்டுமுறை கிறிஸ்தவர்கள் மத்தியில் முழு ஒன்றிப்பை மீண்டும் ஏற்படுத்துவதற்கு, கத்தோலிக்கத் திருஅவையும், தானும், தளரா நோக்கம் கொண்டுள்ளதை, தன் பிரதிநிதிகள் குழு வழியாக மீண்டும் உறுதிப்படுத்துகிறேன் என்றும், திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.

கத்தோலிக்கத் திருஅவைக்கும், ஆர்த்தடாக்ஸ் சபைக்கும் இடையே, பன்னாட்டு இறையியல் உரையாடல் குழு உருவாக்கப்பட்டதன் நாற்பதாம் ஆண்டு நிறைவு, இந்த ஆண்டில் நினைவுகூரப்படுவதைக் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, இந்த குழுவினர், மிகுந்த  அர்ப்பணத்துடன் பணியாற்றுவதற்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.

கத்தோலிக்கத் திருஅவைக்கும், ஆர்த்தடாக்ஸ் சபைக்கும் இடையே, முழு ஒன்றிப்பை மீண்டும் உருவாக்குவது, இறையியல் உரையாடலோடு மட்டும் நின்றுவிடுவதில்லை, மாறாக, இது திருஅவை வாழ்வின் வழிகள் வழியாகவும் இடம்பெற வேண்டியதாகும் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  கூறியுள்ளார்.

ஒருவரையொருவர் மதிப்பது, மற்றும், ஒருவர் மீது ஒருவர் நல்லெண்ணம் கொண்டிருப்பதன் உண்மையான அடையாளங்கள் வழியாக நம் உறவுகள் பேணப்படுகின்றன என்றும், இத்தகைய செயல்கள், நம் ஆண்டவரின் வார்த்தைக்குப் பிரமாணிக்கமாய் இருப்பதைக் காட்டுகின்றன, இவ்வாறு நடப்பது, தூய ஆவியார் வழங்கும் கனியாகும் என்றும், திருத்தந்தை  கூறியுள்ளார்.

நற்செய்தியை அறிவிப்பதிலும், தேவையில் இருப்போர்க்கு உதவுவதிலும், கத்தோலிக்கத் திருஅவையும், ஆர்த்தடாக்ஸ் சபையும் ஏற்கனவே, நம்பிக்கைதரும் பயணத்தை மேற்கொண்டுள்ளது, இவ்விரு சபைகளும் இணைந்து ஆற்றும் பணிகள், அந்தந்த இடங்களில் மேலும் வளரும் என்ற நம்பிக்கையையும் திருத்தந்தை தெரிவித்துள்ளார்.

புனிதர்கள் பேதுரு, பவுல் விழாவன்று கான்ஸ்தாந்திநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு ஆர்த்தடாக்ஸ் சபை பிரதிநிதிகள் குழு வத்திக்கான் வருவதும், திருத்தூதர் அந்திரேயா  விழாவன்று, திருப்பீட பிரதிநிதி குழு, இஸ்தான்புல் செல்வதும் வழக்கத்தில் இருந்து வருகிறது.

30 November 2019, 15:36