தேடுதல்

Vatican News
புதன் மறைக்கல்வி உரை 271119 புதன் மறைக்கல்வி உரை 271119  (Vatican Media)

திருத்தந்தையின் மறைக்கல்வியுரை: அண்மை திருத்தூதுப் பயணம்

அணுகுண்டின் தாக்கத்தாலும் அண்மையப் பேரழிவுகளாலும், துயர்களை அனுபவித்துள்ள ஜப்பான் நாட்டுப் பயணத்திற்கு, 'அனைத்து உயிர்களையும் பாதுக்காத்தல்’ என்ற தலைப்பு பொருத்தமானதே

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

தாய்லாந்து மற்றும், ஜப்பான் நாடுகளில் தன் ஏழு நாள் திருத்தூதுப் பயணத்தை நிறைவுசெய்து, இச்செவ்வாய்க்கிழமை மாலை உரோம் நகர் திரும்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்த களைப்பையும் பொருட்படுத்தால், இப்புதன் காலை திருப்பயணிகளுக்கு மறைக்கல்வி உரை வழங்கினார். வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் ஆயிரக்கணக்கான திருப்பயணிகள் குழுமியிருக்க, தன் அண்மையத் திருத்தூதுப் பயணம் குறித்த சிந்தனைகளை அவர்களோடு பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அன்பு சகோதரர், சகோதரிகளே, தாய்லாந்து மற்றும், ஜப்பான் நாடுகளில் என் திருத்தூதுப் பயணத்தை நிறைவுசெய்து, நேற்று நான் வத்திக்கான் திரும்பினேன். எனக்கு இன்முகத்துடன் வரவேற்பு வழங்கியதற்காக, இவ்விரு நாடுகளின் அரசு அதிகாரிகள், என் சகோதர ஆயர்கள், குறிப்பாக, இவ்விரு நாடுகளின் மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். மதங்களிடையே மதிப்பையும் ஒத்துழைப்பையும் ஊக்குவிக்கவேண்டியதன் முக்கியத்துவம், மற்றும், அவர்களுக்குரிய உயரிய இடத்தின் அடையாளமாக தாய்லாந்தில் நான் புத்தமத முதுபெரும்தந்தையை சந்தித்தேன். புனித லூயிஸ் மருத்துவமனை சந்திப்பின்போது, ஏழைகள், மற்றும், நோயாளிகளுக்கு திருஅவை வழங்கவேண்டிய ஆதரவை ஊக்கப்படுத்தினேன். என் திருப்பயணத்தின் முக்கிய நிகழ்வுகளில்  அருள்பணியாளர்கள், ஆண் பெண் துறவிகள் ஆகியோரைச் சந்தித்தது, ஆயர்களைச் சந்தித்தது, இறுதியாக, இளையோரைச் சந்தித்தது ஆகியவைகளை குறிப்பிட்டுச் சொல்லலாம். தாய்லாந்தில் நிறைவேற்றப்பட்ட இரு திருப்பலிகளிலும், நற்செய்தி எவ்வாறு தாய்லாந்து மண்ணில் பண்பாட்டுமயமாகியுள்ளது என்பதைத் தெளிவாகக் காண முடிந்தது. ஜப்பான் நாட்டில் என் திருத்தூதுப் பயணத்தின் தலைப்பாக, 'அனைத்து உயிர்களையும் பாதுகாத்தல்’ என்பது இருந்தது. அணுகுண்டின் தாக்கத்தாலும் அண்மையப் பேரழிவுகளாலும் துயர்களை அனுபவித்துள்ள அந்நாட்டிற்கு இத்தலைப்பு மிகவும் உயிரூட்டமுடைய ஒன்று. நாகசாகி மற்றும், ஹிரோஷிமாவில், சிறிது நேரத்தை செபத்தில் செலவழிக்க என்னால் இயன்றது. இவ்விடங்களில் நான் அணுகுண்டு வீச்சால் பாதிக்கப்பட்டவர்களையும், அவர்களின் குடும்பங்களையும் சந்தித்தேன். அதுமட்டுமல்ல, அணு ஆயுதங்கள் ஒழிக்கப்படுவதற்கான அழைப்பையும் மீண்டும் முன்வைத்தேன். இளையோரைச் சந்தித்தபோது, அவர்கள் இறைவனின் அன்பிற்கு, செபத்திலும் மற்றவர்களுக்கு உதவுவதிலும் தங்கள் இதயங்களைத் திறப்பதன் வழியாக, வருங்காலத்தை எவ்வித பயமும் இன்றி, துணிச்சலுடன் எதிர்கொள்வதற்கு ஊக்கமூட்டினேன். தாய்லாந்து, மற்றும், ஜப்பான் நாடுகளின் மக்களை இறைவனின் அன்புநிறை வழிகாட்டுதலில் ஒப்படைக்க என்னுடன் இணையுமாறு உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். அனைத்து வளங்களாலும் அமைதியாலும் இறைவன் அவர்களை ஆசீர்வதிப்பாராக. 

இவ்வாறு, தாய்லாந்து, மற்றும், ஜப்பானில் இம்மாதம் 20ம் தேதி முதல், 26ம் தேதி வரை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மேற்கொண்ட திருத்தூதுப்பயணம் குறித்து தன் எண்ணங்களை திருப்பயணிகளோடு பகிர்ந்துகொண்டார். பின்னர் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

27 November 2019, 14:55