தேடுதல்

Vatican News
திருத்தந்தையின் மறைக்கல்வியுரை 131119 திருத்தந்தையின் மறைக்கல்வியுரை 131119  (Vatican Media)

மறைக்கல்வியுரை: உண்மையான இல்லத் திருஅவை

கிறிஸ்தவ திருமண வாழ்வின் எடுத்துக்காட்டாக திருத்தூதர்கள் பணி நூலில் காணப்படும் அக்கிலா, மற்றும், பிரிஸ்கில்லா தம்பதியர், நற்செய்தியை பறைசாற்றும் பல குடும்பங்களை நமக்கு நினைவூட்டி நிற்கின்றனர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

கடந்த இரண்டு நாட்களாக உரோம் நகரம் மழையில் நனைந்துகொண்டிருக்க, இப்புதன் காலையும் மழை அவ்வப்போது இலேசாக தூறிக்கொண்டிருந்தது. இருப்பினும், இப்புதனன்று மழை இல்லை என்ற வானிலை அறிக்கையையும், மறைக்கல்வியுரைக்கு செவிமடுக்க குழுமியிருந்த மக்கள் கூட்டத்தையும் மனதில்கொண்டு, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்திலேயே திருத்தந்தையின் புதன் மறைக்கல்வியுரை இடம்பெற்றது. இப்புதன் பொது மறைக்கல்வியுரையை, காலநிலை காரணமாக, புனித திருத்தந்தை 6ம் பவுல் அரங்கத்தில் பெரிய திரையில் காண அமர்ந்திருந்த நோயாளிகளையும், முதியோரையும் முதலில் சென்று சந்தித்து ஆசீர் வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ். அதன்பின்னர் திருத்தந்தை வளாகத்திற்கு வந்தார். அங்கு ஆயிரக்கணக்கான திருப்பயணிகள் அமர்ந்திருந்தனர். திருத்தூதர் பணிகள் நூலில் காணப்படும் துவக்ககால மறைப்பணிகள் குறித்த மறைக்கல்வியுரையின் தொடர்ச்சியாக இன்று, புனித பவுலின் பணிகள் குறித்து கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார் திருத்தந்தை.

முதலில், திருத்தூதர் பணிகள் நூலின் பிரிவு பதினெட்டின் முதல் மூன்று வாக்கியங்கள் வாசிக்கப்பட்டன.

இவற்றுக்குப் பின்பு பவுல் ஏதென்சை விட்டுக் கொரிந்துக்குப் போய்ச் சேர்ந்தார். அங்கே போந்துப் பகுதியில் பிறந்த அக்கிலா என்னும் பெயருடைய ஒரு யூதரையும் அவர் மனைவி பிரிஸ்கில்லாவையும் கண்டு அவர்களிடம் சென்றார். அவர்கள், “யூதர் அனைவரும் உரோமை நகரத்தை விட்டு வெளியேற வேண்டும்” என்ற கிலவுதியு பேரரசருடைய கட்டளைக்கு இணங்கி இத்தாலிய நாட்டைவிட்டு அண்மையில் அங்கு வந்திருந்தார்கள். கூடாரம் செய்வது அவர்களது தொழில். தாமும் அதே தொழிலைச் செய்பவராதலால் பவுல் அவர்களிடம் தங்கி வேலை செய்துவந்தார் (தி.ப., 18, 1-3 )

பொது மறைக்கல்வியுரை

அன்பு சகோதரர் சகோதரிகளே, திருத்தூதர் பணிகள் குறித்த நம் தொடர் மறைக்கல்வியுரையில் இன்று நாம், புனித பவுல் கொரிந்து நகரில், மிகவும் பக்தியுடைய தம்பதியரான அக்கிலா, மற்றும்,  அவர் மனைவி பிரிஸ்கில்லாவால் வரவேற்கப்படுவதைக் காண்கிறோம். புனித பவுலைப் போலவே இத்தம்பதியரும் கூடாரம் செய்வதை தங்கள் தொழிலாகக் கொண்டிருந்தனர். இத்தம்பதியர் இருவரும், கடவுளில் மிகுந்த நம்பிக்கைக் கொண்டவர்களாகவும், மற்றவர்பால் தாராள மனதுடையவர்களாகவும் செயல்பட்டதன் வழியாக, கிறிஸ்தவ விருந்தோம்பலின் எடுத்துக்காட்டாக இருந்தனர். புனித பவுலுக்கு தங்கள் வீட்டின் கதவுகளைத் திறந்ததன் வழியாக,  புனித பவுல் கொணர்ந்த நற்செய்தியை இவர்களும் ஏற்றுக்கொண்டனர். கொரிந்தின் ஆதிகால கிறிஸ்தவ சமூகம் சந்திக்கும் இடமாக இவர்களின் வீடு மாறியதன் வழியாக, அது உண்மையான இல்லத் திருஅவையானது. கொரிந்தை விட்டு எபேசுக்கு புனித பவுல் பயணமானபோது, இத்தம்பதியரும் மறைப்பரப்பு பணியில் அவரோடு இணைந்து சென்று, பின் அங்கிருந்து உரோம் திரும்பினர். கிறிஸ்தவ திருமண வாழ்வின் எடுத்துக்காட்டாக இருக்கும் அக்கிலா, மற்றும், பிரிஸ்கில்லா தம்பதியர், நற்செய்தியை பறைசாற்றும் பல குடும்பங்களை நமக்கு நினைவூட்டி நிற்கின்றனர். இத்தகையக குடும்பங்கள், தங்கள் விசுவாசத்தாலும், நற்செய்தி அறிவிப்பிற்குரிய முயற்சிகளாலும், தங்கள் இதயத்தை இயேசுவுக்குத் திறந்தவர்களாக, தங்கள் இல்லங்களை நட்புறவின் இடமாகவும், விசுவாசம், நம்பிக்கை, மற்றும், பிறரன்பில் இறைவனை வழிபடும் இடமாகவும் மாற்றியதை பல தலைமுறைகளில் கண்டுள்ளோம். இவ்வாறு மறைக்கல்வியுரையை வழங்கி, இறுதியில், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசிரையும் அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்

13 November 2019, 14:43