சோஃபியா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் இயேசு சபையினருடன் திருத்தந்தை பிரான்சிஸ் சோஃபியா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் இயேசு சபையினருடன் திருத்தந்தை பிரான்சிஸ் 

சோஃபியா பல்கலைக்கழகம் மிகவும் மகிழ்கின்றது

ஆசியக் கலாச்சாரங்கள், இயற்கையை அன்புகூர்பவை. எனவே, இப்பூமியின் வருங்காலம் பாதுகாக்கப்பட போராடுங்கள் - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

நவம்பர் 26, இச்செவ்வாய் காலையில் டோக்கியோ நகரிலுள்ள சோஃபியா பல்கலைக்கழகத்திற்குச் சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அங்குள்ள சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றினார். அந்த பல்கலைக்கழகத்தின் இயேசு சபை குழுவிலிருந்த வயது முதிர்ந்த மற்றும், நோயாளி இயேசு சபை அருள்பணியாளர்களைச் சந்தித்துப் பேசினார். தனது இயேசு சபை சகோதரர் குழுவுடன் கலந்துரையாடி, காலை உணவும் அருந்தினார். அக்குழுவினருக்குப் பணியாற்றும் 15 பேரையும் சந்தித்தார். பின்னர், அந்தப் பல்கலைக்கழக வேந்தர் இயேசு சபை அருள்பணி Sakuma Tsutomu அவர்களும், ஜப்பான் இயேசு சபை மாநில தலைவரான அருள்பணி ரென்ஸோ தே லூக்கா அவர்களும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, பல்கலைக்கழகத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு, பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும், பணியாளர்களைச் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இந்நிகழ்வில் முதலில், பல்கலைக்கழக வேந்தர் அருள்பணி Sakuma Tsutomu அவர்கள் திருத்தந்தையை வரவேற்று உரையாற்றினார். அதற்குப்பின் திருத்தந்தை ஆற்றிய உரையில், தொழில்நுட்பம், மனிதம் மிக்க மற்றும், எளிமையான சமுதாயத்தைக் கொணர்வதற்குப் பயன்படாவிடில், அது மதிப்பற்றது. ஆசியக் கலாச்சாரங்கள், இயற்கையை அன்புகூர்பவை. எனவே, இப்பூமியின் வருங்காலம் பாதுகாக்கப்பட போராடுங்கள் என்று இளையோரிடம் கூறினார். சோஃபியா பல்கலைக்கழகத்திற்கு, முழுவதும் வெள்ளியால் செய்யப்பட்ட அன்னை மரியா உருவம் பதிக்கப்பட்ட ஒரு படத்தை அன்பளிப்பாக அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சோஃபியா பல்கலைக்கழக நிகழ்வை நிறைவு செய்து அங்கிருந்து டோக்கியோ விமான நிலையம் சென்றார் திருத்தந்தை. ஜப்பான் ஆயர்கள் விமான நிலையத்தில் திருத்தந்தையை வழியனுப்பி வைத்தனர். இரு பெண்கள் மலர்களை திருத்தந்தையிடம் கொடுத்து ஆசீர் பெற்றனர். அதற்குப்பின், உரோம் நகருக்கு நிப்போன் விமானத்தில் புறப்பட்டார் திருத்தந்தை பிரான்சிஸ். அப்போது இச்செவ்வாய் உள்ளூர் நேரம் பகல் 11 மணி 43 நிமிடங்களாகவும், இந்திய-இலங்கை நேரம் இச்செவ்வாய் காலை 8 மணி 13 நிமிடங்களாகவும் இருந்தது. இத்துடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின், ஆறு நாள்கள் கொண்ட 32வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணமும்,  ஜப்பானில், இளம் இயேசு சபை அருள்பணியாராக, மறைப்பணியாற்ற வேண்டுமென்ற திருத்தந்தையின் ஆவலும் நிறைவுற்றன. தன்னோடு பயணம் மேற்கொண்ட பன்னாட்டு செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் திருத்தந்தை பதில் கூறினார். சூரியன் உதயமாகும் நிலம் என அழைக்கப்படும் ஜப்பானில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கால்பதித்தவேளையில் கன மழை மற்றும் பலத்த காற்று வீசிக்கொண்டிருந்தது, ஆனால் திருத்தந்தை புன்முறுவலுடன் காணப்பட்டார். இந்த மகிழ்வு, ஜப்பான் சமுதாயத்தின் பல்வேறு துறையினரைச் சந்தித்தபோது திருத்தந்தையிடம் தெளிவாகத் தெரிந்தது. அணு ஆயுதங்கள் ஒழிக்கப்பட வேண்டும், அனைத்து உயிரினங்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று ஜப்பான் மக்களிடம் திருத்தந்தை கேட்டுக்கொண்டவை, உலகினர் எல்லாருமே செயல்படுத்த வேண்டியவையாகும். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 November 2019, 14:37