ஜப்பானின் டோக்கியோ விமானநிலையத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் ஜப்பானின் டோக்கியோ விமானநிலையத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் 

டோக்கியோ விமானத்தளத்தில் வரவேற்பு

சீனாவின் அரசுத்தலைவர் Xi Jinping, தாய்வான் அரசுத்தலைவர் Tsai Ing-Wen ஆகிய இருவருக்கும் திருத்தந்தை அனுப்பிய தந்திச் செய்திகளில், அமைதி மற்றும், நன்மைத்தனத்தின் இறையாசீர் நிரம்பப் பொழியப்படுமாறு செபிக்கின்றேன் என்று எழுதியுள்ளார்

மேரி தெரேசா: வத்திக்கான்

நவம்பர் 23, இச்சனிக்கிழமையன்று, ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவுக்கு, ஆறு மணி நேரம் மேற்கொண்ட விமானப் பயணத்தில், தான் கடந்து சென்ற லாவோஸ், வியட்நாம், சீனா, ஹாங்காக், தாய்வான் ஆகியவற்றின் தலைவர்களுக்கு, அந்தந்த நாடுகளுக்குமேல் விமானம் பறந்து சென்றபோது, செபமும், ஆசீரும் நிறைந்த தந்திச் செய்திகளை அனுப்பினார், திருத்தந்தை பிரான்சிஸ். தாய்லாந்து அரசர் 10ம் இராமா அவர்களுக்கு அனுப்பிய தந்திச் செய்தியில், தனக்கு அளித்த இனிய வரவேற்பிற்கும், தாராளமிக்க உபசரிப்பிற்கும், அரசர், அரச குடும்பத்தினர் மற்றும், அன்புக்குரிய தாய்லாந்து மக்கள் எல்லாருக்கும் நன்றி, இந்நாட்டில் அமைதியும் நல்லிணக்கமும் நிலவச்  செபிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். ஹாங்காக் நிர்வாகத்தலைவர் Carrie Lam அவர்களுக்கு அனுப்பிய தந்திச் செய்தியில், எல்லாம்வல்ல கடவுள், நன்மைத்தனத்தையும், அமைதியையும் ஹாங்காக்கிற்கு அருளுவாராக என்றும், சீனாவின் அரசுத்தலைவர் Xi Jinping, தாய்வான் அரசுத்தலைவர் Tsai Ing-Wen ஆகிய இருவருக்கும் அனுப்பிய தந்திச் செய்திகளில், அமைதியின் இறையாசீர் நிரம்பப் பொழியப்படுமாறு செபிக்கின்றேன் என்றும் திருத்தந்தை எழுதியுள்ளார். மதிய உணவை விமானப் பயணத்திலே முடித்து, நவம்பர் 23, இச்சனிக்கிழமை உள்ளூர் நேரம், மாலை 5 மணி 26 நிமிடத்தில் டோக்கியோ Haneda பன்னாட்டு விமானத்தளம் சென்றிறங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ். அப்போது  இந்திய இலங்கை நேரம், இச்சனிக்கிழமை பகல் 1 மணி, 56 நிமிடமாகும். விமானப்படிகளில் இறங்கிவந்த திருத்தந்தையை, ஜப்பான் உதவி பிரதமர் Tarō Asō அவர்கள் வரவேற்க, மரபு ஆடைகளிலிருந்த இரு சிறார், திருத்தந்தைக்கு மலர்கள் கொடுத்தனர். கத்தோலிக்கப் பள்ளிகளிலிருந்து ஏறத்தாழ நூறு மாணவர்களும் திருத்தந்தையை வரவேற்றனர். திருத்தந்தைக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது. டோக்கியோ விமான நிலையத்தில் பிரமுகர்கள் அறையில் ஜப்பான் உதவி பிரதமரும், திருத்தந்தையும் சிறிதுநேரம் தனியே கலந்துரையாடினர். அதற்குப்பின், அங்கிருந்து 20 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள திருப்பீடத் தூதரகம் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 November 2019, 14:26