சோஃபியா பல்கலைக்கழகத்தின் வேந்தர், அருள்பணி Tsutomu அவர்கள் வரவேற்புரை வழங்குதல் சோஃபியா பல்கலைக்கழகத்தின் வேந்தர், அருள்பணி Tsutomu அவர்கள் வரவேற்புரை வழங்குதல் 

அருள்பணி Tsutomu அவர்களின் வரவேற்புரை

சோஃபியா பல்கலைக்கழகம், ஜப்பானில், உயர்கல்வி நிறுவனம் ஒன்று அமைக்கப்பட வேண்டுமென்று புனித பிரான்சிஸ் சவேரியாரின் கண்ட கனவின் நிறைவாகும்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்

திருத்தந்தையே, தங்களின் பிரசன்னத்தால், சோஃபியா பல்கலைக்கழகம் இன்று மிகவும் சிறப்படைந்துள்ளது. ஜப்பானில், உயர்கல்வி நிறுவனம் ஒன்று அமைக்கப்பட வேண்டுமென்பது 1549ம் ஆண்டு இந்நாட்டிற்கு மறைப்பணியாளராக வந்த புனித பிரான்சிஸ் சவேரியாரின் கனவாகும். அந்தக் கனவு, 1913ம் ஆண்டில் நனவானது. அதாவது 1908ம் ஆண்டில், திருத்தந்தை 10ம் பயஸ் அவர்கள், மூன்று இயேசு சபை அருள்பணியாளர்களை, ஜப்பானுக்கு அனுப்பியதன் வழியாக இந்தக் கனவு உயிர்பெற்றது அந்த வருகை, இயேசு சபையினர், ஜப்பானுக்கு, இரண்டாவது முறை வந்ததாகவும் உள்ளது. திருத்தந்தையே, தாங்கள் கத்தோலிக்கத் திருஅவையின் தலைமைப் பணியை ஏற்ற 2013ம் ஆண்டில்தான், இந்த பல்கலைக்கழகமும் தனது நூற்றாண்டைச் சிறப்பித்தது. புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், சோஃபியா பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்த 38 ஆண்டுகளுக்குப்பின், இப்போது தங்களது வருகையால், நாங்கள் பேறுபெற்றவர்கள் ஆகியுள்ளோம். இப்பல்கலைக்கழகத்தில் தற்போது, அரசின் அங்கீகாரம் பெற்ற, ஓர் இளங்கலை கல்லூரி, ஒரு சமுதாயப்பணி பள்ளி, கூட்டுறவுப் பள்ளிகளாக, நான்கு உயர்நிலைப் பள்ளிகள் ஆகியவை உள்ளன. மேலும், திருஅவையின் இறையியல் மற்றும் மெய்யியல் துறைகளும் உள்ளன. இந்தப் பணியை எமக்கு அளித்ததற்காக, இவ்வேளையில் தங்களுக்கு நாங்கள் நெஞ்சார்ந்த நன்றி சொல்கிறோம். இக்காலச் சூழலில், எல்லா இடங்களிலும் கத்தோலிக்க கல்வி, சவாலாக உள்ளது. உண்மையில், இறையழைத்தல் குறைந்துவரும் ஜப்பானியச் சூழலில், இது சிறப்பான விதத்தில் சவாலாக உள்ளது. எனினும், இயேசு சபை நிறுவனம் என்ற முறையில், இவ்வாண்டின் துவக்கத்தில், இயேசு சபை அறிவித்து, தங்களின் ஒப்புதல் பெற்ற, தூதுரைப் பணியில் முக்கியத்துவம் செலுத்த வேண்டிய நான்கு அம்சங்கள் பற்றி நாங்கள் நன்றாக அறிந்திருக்கிறோம். இந்த அம்சங்களில் ஒன்றான, இளையோர்க்கு நம்பிக்கை நிறைந்த வருங்காலத்தை உருவாக்குவதற்கு, சோஃபியா பல்கலைக்கழகம், ஒரு பொறுப்புள்ள கல்வி நிறுவனமாக தன்னை அர்ப்பணித்துள்ளது. அதோடு, செபத்தில் தெளிந்துதேர்தலை ஊக்குவித்தல், நலிந்த மக்களுக்குப் பணியாற்றுதல், நம் பொதுவான இல்லமாகிய இப்பூமியைப் பாதுகாத்தல் ஆகிய மற்ற மூன்று அம்சங்களைச் செயல்படுத்துவதிலும் சோஃபியா பல்கலைக்கழகம் முனைப்புடன் செயல்படுகிறது.

இவ்வாறு, வரவேற்புரையாற்றிய சோஃபியா பல்கலைக்கழக வேந்தர் இயேசு சபை அருள்பணி Tsutomu அவர்கள், அப்பல்கலைக்கழக பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும், பணியாளர்கள் எல்லாருக்கும் திருத்தந்தையின் ஆசீரையும் இறைஞ்சினார். இவ்வுரைக்குப்பின் திருத்தந்தையும் தன் கருத்துக்களை வழங்கினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 November 2019, 14:50