தாய்லாந்து பாங்காக் பேராலயத்தில் கூடியிருக்கும் இளையோர் தாய்லாந்து பாங்காக் பேராலயத்தில் கூடியிருக்கும் இளையோர் 

தாய்லாந்து இளையோரிடம் - கீழே விழுந்தால், எழுந்து நடங்கள்

உங்கள் வாழ்வுப் பயணத்தைத் தொடர சக்தி கொடுக்கும் கடவுளுக்கு உங்கள் இதயங்களைத் திறந்து வையுங்கள்

மேரி தெரேசா: வத்திக்கான்

நவம்பர் 20, இப்புதன் பகல் ஒரு மணியளவில், பாங்காக் விமான நிலையத்திலிருந்து திருப்பீடத் தூதரகம் சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த நீண்ட பயண களைப்பையும் பொருட்படுத்தாமல், இத்திருத்தூதுப் பயணத்திற்காக, இப்புதன் இரவில் சிறப்பு வழிபாடுகளில் கலந்துகொண்ட அந்நாட்டு கத்தோலிக்க இளையோர்க்காக, ஸ்மார்ட் போனில் செய்தி ஒன்றைப் பதிவு செய்தார். இஸ்பானிய மொழியில் பதிவு செய்த இச்செய்தியே, பாங்காக் சென்றவுடன் திருத்தந்தை இளையோருக்குக் கூறிய முதல் செய்தியாகும். இளையோரே, நீங்கள் இறைவனிடம் மன்றாடிக் கொண்டிருக்கின்றீர்கள். இன்னும் பலர், இச்செபத்தில் இணைவதற்குப் பயணம் மேற்கொண்டுள்ளீர்கள். செபிப்பதும், பயணம் மேற்கொள்வதும் அழகான செயல்கள் ஆகும். உங்கள் வாழ்வுப் பயணத்தைத் தொடர சக்தி கொடுக்கும் கடவுளுக்கு உங்கள் இதயங்களைத் திறந்து வையுங்கள். ஏனெனில், வாழ்வில், எவரும் ஒருபோதும் தேங்கி இருக்க இயலாது. ஓர் இளையவர் தனது இருபதாவது வயதில் ஓய்வு பெற முடியாது. வெறுமனே படுக்கையில் இருப்பதுபோன்று, உங்கள் வாழ்வைச் செலவழிக்காதீர்கள். வாழ்வைக் கட்டியெழுப்புங்கள், தொடர்ந்து முன்னோக்கிச் செல்லுங்கள். இளைஞனோ, இளைஞியோ, யாராயிருந்தாலும், கீழே விழுந்தால், எழுந்து நடங்கள். கடவுள் இதற்கு சக்தி தருகிறார் என்று திருத்தந்தை, இளையோரை ஊக்கப்படுத்தினார். அதற்குப் பின் திருப்பீட தூதரகத்தில் ஓய்வெடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். திருத்தந்தையின் பயண களைப்பை இவ்வியழனன்றும் காண முடிந்தது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 November 2019, 15:33