தாய்லாந்தில் சிறுவர், சிறுமியருடன் திருத்தந்தை பிரான்சிஸ் தாய்லாந்தில் சிறுவர், சிறுமியருடன் திருத்தந்தை பிரான்சிஸ் 

தாய்லாந்தில் திருத்தந்தையின் திருத்தூதுப் பயணம்

திருத்தந்தையை முகமுமாய்ப் பார்ப்பது, வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கிடைப்பது, திருத்தந்தையை மிக அருகில் பார்த்தது, ஒரு புதுமையாக இருந்தது – பாங்காக்கில் 23 வயது நிரம்பிய இளைஞர் Ai

மேரி தெரேசா: வத்திக்கான்

தாய்லாந்து நாடு, தென்கிழக்கு ஆசியாவின் மத்திய பகுதியில், சியாம் வளைகுடா என முற்காலத்தில் அழைக்கப்பட்ட தாய்லாந்து வளைகுடாவில் அமைந்துள்ளது. 13ம் நூற்றாண்டிலிருந்து பல்வேறு மன்னர்களால் உருவாக்கப்பட்ட இந்நாடு, மியான்மார், கம்போடியா ஆகிய அண்டை நாடுகளின் வல்லசுகளால் அடிக்கடி தாக்கப்பட்டது. தாய்லாந்தில், 1932ம் ஆண்டுவரை மன்னராட்சியே நடைபெற்றது. அவ்வாண்டில் அரசர், அரசியலமைப்பை ஏற்க வேண்டுமென கட்டாயப்படுத்தப்பட்ட புரட்சியால் முடியாட்சி வீழ்ந்தது. துவக்கத்திலிருந்து சியாம் என அழைக்கப்பட்டு வந்த இந்நாடு, 1939ம் ஆண்டு ஜூன் மாதம் 23ம் தேதி, தாய்லாந்து என பெயர் சூட்டப்பட்டது. இரண்டாம் உலகப் போரில் ஜப்பானால் ஆக்ரமிக்கப்பட்டிருந்த தாய்லாந்து, 1946ம் ஆண்டு முதல், 1948ம் ஆண்டு வரை, மீண்டும் சியாம் எனவும், அதற்குப்பின் தாய்லாந்து எனவும் பெயர் மாற்றப்பட்டது. தாய்லாந்து என்றால் “அயலவர் ஆட்சிக்கு உட்படாத நிலம்”, தன்னுரிமையுடைய நிலம் என்று பொருள். ஏனெனில் தென்கிழக்கு ஆசியாவில் இந்நாடு மட்டுமே, ஐரோப்பியர்களின் காலனி ஆதிக்கத்திற்கு உட்படாமல் உள்ளதாகும். அழகிய வெப்பமண்டல கடற்கரைகளையும், செல்வமிக்க அரண்மனைகளையும், சிதைவுற்ற பழங்கால கட்டடங்களையும், புத்தர் திருவுருவத்தைக் கொண்ட பகட்டான கோவில்களையும் தாய்லாந்தில் காணலாம். தலைநகர் பாங்காக்கின் அடையாளங்களாக, Wat Arun, Wat Pho உட்பட பச்சைக்கல் மரகத (Wat Phra Kaew) புத்தமத கோவில்கள் கவினுற காட்சி தருகின்றன. இத்தகைய அழகான தாய்லாந்திற்கு, நவம்பர் 20, இப்புதன்கிழமை உள்ளூர் நேரம் பகல் 12 மணியளவில் சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அடுத்த இரு நாள்களும் அந்நாட்டில் திருத்தூதுப் பயண நிகழ்வுகளை நிறைவேற்றினார்.

திருத்தந்தையின் தாய்லாந்து பயணம் பற்றி...

திருத்தந்தையின் இந்தப் பயணம் பற்றி ஆசியச் செய்தியிடம் பேசிய, 23 வயது நிரம்பிய கணனி தொழில்நுட்ப மாணவர் Thidarat ‘Ai’ Taneame அவர்கள், இப்பயணம், தாய்லாந்தில் கத்தோலிக்கருக்கு மட்டுமல்லாமல், அனைத்து மக்களுக்கும் நம்பிக்கையைக் கொணர்ந்துள்ளது என்று தெரிவித்தார். திருத்தந்தையை முகமுமாய்ப் பார்ப்பது, வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கிடைப்பது, திருத்தந்தையை மிக அருகில் பார்த்தது, ஒரு புதுமையாக இருந்தது என்றும் Ai அவர்கள் கூறினார். தாய்லாந்தில் நாங்கள் சிறிய சமுதாயமாக இருந்தாலும், இளம் கத்தோலிக்கர் பாங்காக் நகரில், பெரும்பாலும் ஞாயிறு தினங்களில் சந்திக்கிறோம், நேரம் கிடைக்கும்போது ஒருவருக்கொருவர் ஆதரவான செய்திகளைப் பகிர்ந்து கொள்கிறோம், இது, ஓர் உண்மையான குடும்ப உணர்வை ஏற்படுத்துகின்றது. நாங்கள் குறுகிய வட்டத்திற்குள் வாழவில்லை, எமக்கு நிறைய புத்த மற்றும் இஸ்லாம் மதங்களின் நண்பர்களும் உள்ளனர் என்றும், தாய்லாந்து இளையோர் பகிர்ந்துகொண்டுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 November 2019, 14:14