தேடுதல்

Vatican News
தாய்லாந்து அருள்பணியாளர், துறவியர், மறைக்கல்வி ஆசிரியர்களுடன் திருத்தந்தையின் சந்திப்பு தாய்லாந்து அருள்பணியாளர், துறவியர், மறைக்கல்வி ஆசிரியர்களுடன் திருத்தந்தையின் சந்திப்பு  (AFP or licensors)

அருள்பணியாளர், துறவியருக்கு திருத்தந்தையின் உரை

உலகெங்கும் சென்று, மற்றவர் மீது இன்னும் அதிகச் சுமைகளை சுமத்த இறைவன் நம்மை அழைக்கவில்லை. மாறாக, இறைவன் தரும் மகிழ்வை, வியப்பை, பிறரோடு பகிர்ந்துகொள்ள அழைக்கப்பட்டுள்ளோம்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, பெனதெத்தா அவர்கள் வழங்கிய சாட்சியத்திற்கும், அவரது வாழ்வுக்கும் நன்றி கூறுகிறேன். பிறரன்பு புதல்வியரைப் பற்றி அவர் எடுத்துரைத்தார். தங்கள் அர்ப்பண வாழ்வின் வழியே மௌனமான மறைசாட்சிகளாக வாழும் அனைவருக்காகவும் நான் நன்றி கூறுகிறேன். அதேபோல், கிறிஸ்துவின் நட்பை அறிமுகம் செய்துவைக்கும் மறைக்கல்வி ஆசிரியர்களுக்கும், ஏனைய துறவியருக்கும் நன்றி.

நன்றியுணர்வோடு வாழ்வது முக்கியம்

ஆவியானவரின் சுடரொளியை நாம் கண்டுபிடிக்க உதவியவர்கள் வழியே, நாம் அழைப்பை உணர்ந்தோம். நன்றியுணர்வோடு வாழ்வது மிகவும் முக்கியம். நமக்கு கிறிஸ்துவை அறிமுகம் செய்துவைத்த அனைவரையும் நன்றியோடு நினைவில் கொள்வோம்.

பெனதெத்தா, நீங்கள் அழகால் ஈர்க்கப்பட்டு, ஆண்டவரைத் தேடிவந்ததாகக் கூறினீர்கள். நமது அன்னையின் உருவச்சிலையில் நீங்கள் கண்ட அழகு, உங்களை ஆட்கொண்டதாகச் சொன்னீர்கள். அழகைக் காண்பதற்கு, எப்போதும் விழிப்பாயிருக்கவேண்டும். அதன் வழியாக, புதிய தொடுவானங்களைக் கண்டு வியப்பதற்கு நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.

இறைவன் தரும் மகிழ்வை, வியப்பை, பகிர்ந்துகொள்ள...

உலகெங்கும் சென்று, மற்றவர் மீது இன்னும் அதிகச் சுமைகளை சுமத்த இறைவன் நம்மை அழைக்கவில்லை. மாறாக, இறைவன் தரும் மகிழ்வை, வியப்பை, பிறரோடு பகிர்ந்துகொள்ள அழைக்கப்பட்டுள்ளோம். கொள்கைகளை பிறர் மீது சுமத்துவதன் வழியாக, அல்ல, மாறாக, திருஅவை மீது ஈர்ப்பை உருவாக்குவதன் வழியே நாம் திருஅவையை வளர்க்கவேண்டும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் கூறியது முற்றிலும் உண்மை. இந்த ஈர்ப்பை உருவாக்க, புதிய எண்ணங்கள், புதிய அடையாளங்கள், கலாச்சாரமயமாதல் ஆகிய முயற்சிகளை துணிவுடன் பின்பற்றவேண்டும். இறைவார்த்தையை, புதிய வழிகளில் பகிந்துகொள்ளவேண்டும்.

தாயின் தாலாட்டைப்போல...

இன்றும், பலரது எண்ணங்களில் கிறிஸ்தவம் ஓர் அந்நிய மதமாக, கலாச்சாரமாகக் கருதப்படுகிறது என்பதை அறிந்து நான் வருந்துகிறேன். ஒரு தாய் தன் பிள்ளையைத் தாலாட்டும்போது பயன்படுத்தும் மொழியைப்போல, நமது மத நம்பிக்கையை, மக்களுக்குப் புரியும் மொழியில் நாம் பகிர்ந்துகொள்ளவேண்டும். தாய்லாந்தில் வாழும் மக்களுக்கு உரிய மொழியில், அவர்கள் புரிந்துகொள்ளும் வழியில் நற்செய்தி பறைசாற்றப்படவேண்டும்.

அன்னை மரியாவின் பார்வையில் தான் கண்ட அழகால் கவர்ந்திழுக்கப்பட்டதாக, பெனதெத்தா அவர்கள் கூறினார். அன்னை மரியாவின் பார்வையில் இருந்தவர் இயேசு. இயேசுவின் பார்வையில், அனைவரும், குறிப்பாக, சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டவர்கள் இருந்தனர். மற்றவர்கள் பார்வையில், ஒருவர், பாவியாக, வரிதண்டுபவராக, காட்டிக்கொடுப்பவராகக் தெரிந்தபோது, இயேசுவின் பார்வையில் அவர்கள், அன்புகூரப்பட்டவர்களாகத் தெரிந்தனர். கருணை நிறைந்த அந்தப் பார்வையால் நாம் கவர்ந்திழுக்கப்பட்டுள்ளோம்.

வயது முதிர்ந்தோரிடம் காணப்படும் செபம்

நமது அழைப்பிற்கும், அர்ப்பணத்திற்கும் உறுதுணையாக இருப்பது செபம். ஆழ்ந்த செபம், வயது முதிர்ந்தோரிடம் காணப்படும் செபமாக உள்ளது. அவர்கள் தங்கள் தினசரி கடமைகளை ஆற்றும் வேளையிலும், கரங்களில் செபமாலையை ஏந்தியபடி, தங்கள் கடமையையும், செபத்தையும் இணைக்கின்றனர். செபம் இல்லாமல், நம் வாழ்வின் இலக்கும், நாம் செய்யும் பணியும் பொருளற்று போகும்.

நம் உள்ளங்களில், பற்றியெரியும் ஆர்வம் இல்லாதபோது, நற்செய்தியைப் பரப்பும் பணி தடைபடுகிறது என்று, புனிதத் திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள் கூறியுள்ளார் (காண்க. Evangelii Nuntiandi, 80). துறவறத்தார் இந்த ஆர்வத்தை, இரு வழிகளில் காணமுடியும். இறைவனின் முகத்தைக் காண்பதாலும், அயலவர் முகத்தைக் காண்பதாலும் நாம் இந்த ஆர்வத்தைக் கண்டுகொள்ள முடியும்.

ஆர்வமாய் நீங்கள் மேற்கொண்டுள்ள அர்ப்பண வாழ்வுக்காக நன்றி கூறுகிறேன். நீங்கள் எண்ணிக்கையில் மிகக் குறைவாக இருப்பதை எண்ணி, மனம் தளரவேண்டாம். நீங்கள் ஒவ்வொருவரும் இறைவனின் கரங்களில் உள்ள கருவிகள் என்ற எண்ணத்தால் சக்தி பெறுங்கள், உங்கள் வாழ்வின் வழியே, இந்நாட்டின் வரலாற்றையும், மீட்பையும் இறைவன் எழுதுவார்.

எனக்காகச் செபிக்க மறவாதீர்கள். மற்றவர்களிடமும் எனக்காகச் செபிக்கும்படி கேளுங்கள்.

22 November 2019, 14:49