பொதுநிலையினர், குடும்பம் மற்றும், வாழ்வு திருப்பீட அவையினருடன் திருத்தந்தை பிரான்சிஸ் பொதுநிலையினர், குடும்பம் மற்றும், வாழ்வு திருப்பீட அவையினருடன் திருத்தந்தை பிரான்சிஸ்  

தனிப்பட்ட, சமுதாய வாழ்வில் கிறிஸ்துவுக்குச் சான்றுகளாக வாழ…

திருஅவை என்ற குடும்பத்தின் பொதுவான நலன்கருதி, மறைமாவட்டம், பங்குத்தளங்கள், மற்றும், பொதுநிலையினர் இயக்கங்களுக்கிடையே, எப்போதும் உடன்பிறந்த உணர்வுகொண்ட ஒத்துழைப்பு அவசியம்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

அன்னையாம் திருஅவையின் இதயத்தோடு ஒத்துணர்வு கொள்வது, உடன்பிறப்பு பார்வை கொண்டிருத்தல் ஆகிய இரு உருவகங்களை மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நவம்பர் 16, இச்சனிக்கிழமையன்று, திருப்பீடத்தில் தான் சந்தித்த ஒரு குழுவினரிடம் கூறினார்.

பொதுநிலையினர், குடும்பம் மற்றும், வாழ்வு திருப்பீட அவை முதன் முறையாக நடத்திய ஆண்டு நிறையமர்வு கூட்டத்தில் கலந்துகொண்ட ஏறத்தாழ 85 பிரதிநிதிகளை, திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்பிரதிநிதிகள், வரும் ஆண்டுகளில், இவ்விரு தலைப்புகள் பற்றி சிந்திப்பது பயனளிக்கும் என்று தான் நம்புவதாகக் கூறினார்.

அன்னையாம் திருஅவையின் இதயத்து உணர்வுகளைப் புரிந்துகொண்டு பணியாற்றுவது என்பது, அதன் உலகளாவிய பண்பில் ஊன்றியிருப்பதாகும் என்று கூறியத் திருத்தந்தை, எனது மறைமாவட்டம், எனது இயக்கம், எனது இறையியல் பள்ளி, நான் உருவாக்கப்பட்ட ஆன்மீக மரபு போன்றவற்றில் நிலைத்திராமல், உலகளாவிய திருஅவையின் உணர்வில் கலந்து செயலாற்றுமாறு கூறினார்.

அன்னையாம் திருஅவை

திருஅவை, ஓர் உண்மையான அன்னையாக, தனது பிள்ளைகள் அனைவர் மத்தியிலும் நல்லிணக்கம் நிலவ வேண்டுமென்று விரும்புகின்றது என்றும், அது யாரையும் முன்னுரிமையுடன் நடத்துவதில்லை என்றும் கூறியத் திருத்தந்தை, பொதுநிலையினர், அருள்பணியாளர் மற்றும், துறவியர்க்கிடையே நிலவும் ஒத்துழைப்பிற்கு நல்ல எடுத்துக்காட்டுகளாய் அனைவரும் வாழ வேண்டும் என்று கூறினார்.

 திருஅவை என்ற ஒரே குடும்பத்தின் பொதுவான நலன்கருதி, மறைமாவட்டம் மற்றும் பங்குத்தளங்களுக்கிடையே, பொதுநிலையினர் இயக்கங்களுக்கிடையே, இளையோர் மற்றும், வயது முதிர்ந்தோருக்கிடையே எப்போதும் உடன்பிறந்த உணர்வுகொண்ட ஒத்துழைப்பு அவசியம் என்று, திருத்தந்தை கூறினார்.

உடன்பிறந்த உணர்வு

உலகில் பொதுநிலை விசுவாசிகள் தங்களின் தனித்துவத்தையும், தூதுரைப்பணியையும் உறுதிப்படுத்துவது பற்றிய சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உடன்பிறந்த உணர்வு கொண்ட கண்ணோட்டம் அவசியம் என்பதை வலியுறுத்தினார்.

பொதுநிலையினரை திருஅவையின் அமைப்பு முறைகளிலும், திட்டங்களிலும் நுழைப்பது முக்கியமல்ல, மாறாக, தனிப்பட்ட மற்றும், சமுதாய வாழ்வில், கிறிஸ்துவுக்குச் சான்றுகளாக வாழ வேண்டும் என்ற விழிப்புணர்வில் வளர்வது முக்கியம் என்பதை திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.  

குடும்பங்களில், பணித்தளங்களில், வாழும் இடங்களில் கிறிஸ்தவர்களாக வாழும்போது எதிர்கொள்ளும் இன்னல்கள் மற்றும், சவால்கள் பற்றி சிந்தித்துப் பார்க்குமாறு அழைப்பு விடுத்த திருத்தந்தை, உங்களின் தனிப்பட்ட வாழ்வு அனுபவங்கள் பற்றி நினைத்துப் பார்க்கையில், உலகம் முழுவதும் பொதுநிலை விசுவாசிகள் ஒவ்வொரு நாளும் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மேலும் நன்றாகப் புரிந்துகொள்ள முடியும் என்றும் கூறினார்.

வறுமை, சமுதாய நிலையற்றதன்மை, மதம் சார்ந்த சித்ரவதை, அடக்குமுறை, கிறிஸ்தவத்திற்கெதிரான கருத்தியல்கள் போன்றவற்றால் உலகெங்கும் துன்புறும் பொதுநிலை விசுவாசிகள் பற்றி சிந்தித்துப் பார்க்குமாறு திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.

பொதுநிலையினர், குடும்பம் மற்றும், வாழ்வு திருப்பீட அவை, “பொதுநிலையினர், தனித்துவம், மற்றும், உலகில் தூதுரைப்பணி” என்ற தலைப்பில், வத்திக்கானில், நவம்பர் 13ம் தேதி துவங்கிய ஆண்டு நிறையமர்வு கூட்டம், நவம்பர் 16, இச்சனிக்கிழமையன்று நிறைவுற்றது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 November 2019, 14:44