Migliori அடுக்குமாடி கட்டடத்தில் புதிய மருத்துவ மையத்தை திறந்துவைத்த திருத்தந்தை பிரான்சிஸ் Migliori அடுக்குமாடி கட்டடத்தில் புதிய மருத்துவ மையத்தை திறந்துவைத்த திருத்தந்தை பிரான்சிஸ் 

Migliori கட்டடத்தில் ஏழைகளுக்கு புதிய மருத்துவ மையம்

வத்திக்கான் பேதுரு வளாகத்தின் தூண்களுக்கு அருகிலுள்ள Migliori அடுக்குமாடி கட்டடத்தில், ஏழைகள், மற்றும், வீடற்றவர்க்கென, இரவும், பகலும் இயங்கும் புதிய மருத்துவ மையத்தை திருத்தந்தை திறந்து வைத்தார்.

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மூன்றாவது வறியோர் உலக நாளை முன்னிட்டு, ஏழைகளுக்குகென, வத்திக்கான் புனித பேதுரு வளாகத்திற்கருகில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மருத்துவ பராமரிப்பு முகாமை, பார்வையிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 24 மணி நேரமும் இயங்கும் புதிய மருத்துவ மையம் ஒன்றையும் திறந்து வைத்தார்.

கொட்டும் மழையிலும், நவம்பர் 15, இவ்வெள்ளி மாலையில், அம்முகாமை பார்வையிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏழைகள், மற்றும், வீடற்றவர்க்கென, இரவும், பகலும், இயங்கும் மையத்தை, வத்திக்கான் பேதுரு வளாகத்தின் தூண்களுக்கு அருகிலுள்ள Migliori அடுக்குமாடி கட்டடத்தில் திறந்து வைத்தார்.

திருத்தந்தையின் புனிதத்தன்மைக்கென அர்ப்பணிக்கப்பட்டுள்ள இப்புதிய மையத்தை, உரோம் சான் எஜிதியோ பிறரன்பு குழு நிர்வாகம் செய்யவுள்ளது.

ஏழைகளுக்கு பகல் நேரத்தில் மருத்துவ உதவிகளை வழங்குவதற்கென அமைக்கப்பட்டுள்ள, Migliori அடுக்குமாடி கட்டடத்தின் கீழ்தளத்தை முதலில் பார்வையிட்ட திருத்தந்தை, அந்த கட்டடத்தின் முதல் தளத்தில், புனித ஜார்ஜ் அவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள சிற்றாலயம் சென்றார். அந்த சிற்றாலயத்தின் சூழலைத் தியானித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அழகு குணப்படுத்துகின்றது என்று கூறினார்.

அந்த கட்டடத்தின் மற்ற தளங்களையும் பார்வையிட்ட திருத்தந்தை, அம்மையத்தில் பணியாற்றும் சிலருடனும், தன்னார்வலர்களுடனும் சிறிது நேரம் உரையாடினார். தெருக்களில் வாழ்ந்த சிலருக்கு, தற்போது இம்மையத்தில் தங்க இடமும், வேலையும் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தெருக்களில் வாழ்வோர்க்கு உணவும், அவர்களின் அடக்கச்சடங்குகளுக்கும் பல ஆண்டுகளாக உதவிவரும் தன்னார்வலர்கள் பகிர்ந்துகொண்டவைகளைச் செவிமடுத்த திருத்தந்தை, புறக்கணிப்பு கலாச்சாரம் பற்றியும், மிக ஏழ்மையில் வாழ்வோர்க்கு உதவும் பொறுப்புணர்வில் வாழவேண்டிய அவசியத்தையும் சுட்டிக்காட்டினார். பரிவன்பு பற்றி இளையோர்க்கு கற்றுக்கொடுக்க வேண்டியது முக்கியம் என்பதையும் வலியுறுத்தினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 November 2019, 15:04