அருள்பணி ஹூவான் அந்தோனியோ குவரெரோ சே.ச. அருள்பணி ஹூவான் அந்தோனியோ குவரெரோ சே.ச. 

திருப்பீட பொருளாதாரச் செயலகத்திற்கு புதிய தலைவர்

அருள்பணி குவரெரோ சே.ச. அவர்கள், இஸ்பெயின், பிரேசில், பிரான்ஸ் மற்றும், அமெரிக்க ஐக்கிய நாட்டில் கல்வி பயின்றார். இவர், பொருளாதாரம், மெய்யியல் மற்றும், இறையியலில் பட்டங்களைப் பெற்றுள்ளவர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இயேசு சபை அருள்பணி ஹூவான் அந்தோனியோ குவரெரோ ஆல்வெஸ் (Juan Antonio Guerrero Alves) அவர்களை, திருப்பீட பொருளாதாரச் செயலகத்தின் புதிய தலைவராக, நவம்பர் 14, இவ்வியாழனன்று நியமித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

2020ம் ஆண்டு சனவரி மாதத்தில், இப்புதிய பணியைத் துவங்கவிருக்கும், அறுபது வயது நிரம்பிய, இஸ்பானியரான அருள்பணி குவரெரோ அவர்கள், தற்போது இயேசு சபையின் உரோம் இல்லங்களுக்கு, அச்சபையின் உலகத் தலைவரின் பிரதிநிதியாகவும், அச்சபையின் பொது ஆலோசகராகவும் பணியாற்றி வருகிறார். 

இப்புதிய பணி பற்றி வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த அருள்பணி குவரெரோ அவர்கள், ஓர் இயேசு சபை துறவி என்ற முறையில், திருத்தந்தையிடமிருந்து நேரடியாக இப்பணியை பெறுவது மகிழ்ச்சியாக உள்ளது, நான் கொடுத்துள்ள பணிவு என்ற வார்த்தைப்பாடு, எதிர்பாராத பாதைகளில், நான் நுழைந்திராத இடங்களுக்கு, என்னை எப்போதும் இட்டுச் செல்கின்றது என்று கூறினார்.

இவர், இயேசு சபை உலகளாவியத் தலைவரின் பிரதிநிதி என்ற முறையில், இயேசு சபை துறவிகள் 360 பேருக்குத் தலைவராவார். இவர்கள், உலகில், 69 இயேசு சபை மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இவர்களில், 150 பேர், உருவாக்கும் பயிற்சி நிலையில் உள்ளவர்கள். மற்றவர்கள், பாப்பிறை கிரகோரியன் பல்கலைக்கழகம், பாப்பிறை விவிலிய நிறுவனம், பாப்பிறை கீழை வழிபாட்டுமுறை நிறுவனம், வத்திக்கான் வானியல் ஆய்வு மையம், சிவில்த்தா கத்தோலிக்கா இதழ், அலெத்தி மையம், இரஷ்ய இல்லம்,  பெல்லார்மினோ இல்லம், ஜேசு இல்லம், வத்திக்கான் சமூகத்தொடர்பு செயலகம், மற்றும், ஏனைய திருப்பீடத் துறைகளில் பணியாற்றுவோர் ஆவர்.  

இஸ்பெயின் நாட்டின் மெரிதா நகரில் 1959ம் ஆண்டில் பிறந்த, அருள்பணி குவரெரோ அவர்கள், தன் இருபதாம் வயதில் இயேசு சபையில் சேர்ந்தார். இஸ்பெயின், பிரேசில், பிரான்ஸ் மற்றும், அமெரிக்க ஐக்கிய நாட்டில் கல்வி பயின்ற இவர், பொருளாதாரம், மெய்யியல் மற்றும், இறையியலில் பட்டங்களைப் பெற்றுள்ளவர்.

2014ம் ஆண்டு முதல், 2017ம் ஆண்டு வரை, மொசாம்பிக்கில், இயேசு சபையினரின் திட்ட ஒருங்கிணைப்பாளராகவும், பொருளாதாரத் துறைக்கு பொறுப்பாளாராகவும் பணியாற்றியுள்ளார், அருள்பணி குவரெரோ. இவருக்கு, இத்தாலியம், ஆங்கிலம், பிரெஞ்ச், போர்த்துக்கீசியம் மற்றும், இஸ்பானிய மொழிகள் தெரியும்.

திருப்பீடத்தில் நிதித்துறையில் சீர்திருத்தத்தைக் கொணரும் முயற்சியின் ஒரு கட்டமாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2014ம் ஆண்டில், திருப்பீட பொருளாதாரச் செயலகத்தை உருவாக்கினார். நிதிசார்ந்த அறிக்கைகளை பரிசீலனை செய்வது உட்பட, திருப்பீட தலைமையகம் மற்றும், வத்திக்கான் நாட்டின் நிதி சார்ந்த நடவடிக்கைகளை மேற்பார்வையிடுவது, அருள்பணி குவரெரோ அவர்களின் பணியாகும். இப்பொறுப்பை வகித்திருந்த ஆஸ்திரேலிய கர்தினால் ஜார்ஜ் பெல் அவர்கள், இப்பணியை வகிக்கமாட்டார் என கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து, இந்த தலைமைப் பணி காலியாக இருந்தது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 November 2019, 15:18