தேடுதல்

ஜப்பானில் திருத்தந்தை பிரான்சிஸ் ஜப்பானில் திருத்தந்தை பிரான்சிஸ் 

நாகசாகி விளையாட்டு அரங்கத்தில் திருப்பலி

ஒருகாலத்தில் கத்தோலிக்கத்தை விரிவாக்குவதற்கு மேலை நாட்டவரால் பயன்படுத்தப்பட்ட நாகசாகி நகருக்கு அருகிலுள்ள Nishizaka குன்றின் உச்சியில்தான், 1597ம் ஆண்டில் 26 மறைசாட்சிகள் சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்டனர்

மேரி தெரேசா: வத்திக்கான்

நவம்பர் 24, இஞ்ஞாயிறு பகல் 2 மணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாகசாகி நகரின் விளையாட்டு அரங்கத்தில், கிறிஸ்து அரசர் பெருவிழாத் திருப்பலியை, இலத்தீனில் நிறைவேற்றினார். 1549ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி, புனித பிரான்சிஸ் சவேரியார் ஜப்பானுக்குச் சென்றதுடன் அந்நாட்டில் கிறிஸ்தவம் பரவத் தொடங்கியது. நாகசாகி, ஜப்பானில் முதன்முதலில் நற்செய்தி அறிவிக்கப்பட்ட இடமாகவும், 260 ஆண்டுகள் கிறிஸ்தவர்களுக்கெதிரான சித்ரவதைகளினின்று உயிர்பிழைத்து, 19ம் நூற்றாண்டில், உறுதியான விசுவாசத்துடன் மறைந்து வாழ்ந்த கத்தோலிக்கரின் தலைமுறைகளைக் கொண்டுள்ள நகரமுமாகும். ஒருகாலத்தில் கத்தோலிக்கத்தை விரிவாக்குவதற்கு மேலை நாட்டவரால் பயன்படுத்தப்பட்ட நகரமும் நாகசாகிதான். 1597ம் ஆண்டில் நாகசாகிக்கு அருகிலுள்ள Nishizaka குன்றின் உச்சியில்தான், 1597ம் ஆண்டில் 26 மறைசாட்சிகள் சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்டனர். ஜப்பானில் 1614ம் ஆண்டில் கிறிஸ்தவம் தடைசெய்யப்பட்டு, கிறிஸ்தவர்களுக்கெதிரான சித்ரவதைகளும் துவங்கின. இவை 260 ஆண்டுகள் நீடித்து,  1870ம் ஆண்டில் முடிவுற்றன. இந்நகரில் திருத்தந்தை நிறைவேற்றிய திருப்பலியில் மறையுரையும் ஆற்றினார். இத்திருப்பலியின் நற்செய்தி வாசகத்தில் குறிப்பிடப்பட்டிருந்த நல்ல கள்வன் பற்றிய சிந்தனைகளை வழங்கிய திருத்தந்தை, அக்கள்வனின் எண்ணமும், விசுவாச அறிக்கையும், கல்வாரியின் கொடூரங்களையும் அநீதிகளையும் சொல்லி, முழு மனித சமுதாயத்திற்கும் நம்பிக்கையின் செய்தியாக மாறுகிறது என்று சொன்னார். நாகசாகியில் அணுகுண்டால் அழிக்கப்பட்ட Urakami பேராலயத்தில், ஒரு சிலுவையும், அன்னை மரியாவின் திருவுருவமும், அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை இத்திருப்பலி மேடையில் வைக்கப்பட்டிருந்தன. அவை பற்றி குறிப்பிட்ட திருத்தந்தை, இந்த சிதைந்த திருவுருவங்கள், அணுகுண்டுக்குப் பலியானவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் சதைகளில் அனுபவிக்கப்பட்ட சொல்லமுடியாத துன்பங்களை மீண்டும் நமக்கு நினைவுபடுத்துகின்றன என்று திருத்தந்தை கூறினார்.

35 ஆயிரம் விசுவாசிகள் கலந்துகொண்ட இத்திருப்பலியில் இஸ்பானியம், கொரியம், பிலிப்பீன்ஸ் நாட்டின் தகாலோ, ஜப்பானியம், வியட்நாமியம் ஆகிய மொழிகளில் விசுவாசிகள் மன்றாட்டு செபிக்கப்பட்டது. அனைவரையும் ஆசீர்வதித்து நாகசாகி விமான நிலையம் சென்று, ஹிரோஷிமா நகருக்குப் புறப்பட்டார் திருத்தந்தை பிரான்சிஸ். “இறையாட்சி நம் பொதுவான இலக்கு. இந்த இலக்கு, நாளைய நாளைப் பற்றி மட்டுமல்ல, இன்றே அதைக் கண்டுபிடித்து அனுபவிக்க வேண்டும்” என்ற சொற்களை, தன் டுவிட்டர் செய்தியில்,  #GospelOfToday #ApostolicJourney என்ற ஹாஸ்டாக்குடன் திருத்தந்தை வெளியிட்டார்.

 

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 November 2019, 14:32