தேடுதல்

Vatican News
குற்றவியல் சட்ட வல்லுனர்களுக்கு திருத்தந்தை உரை குற்றவியல் சட்ட வல்லுனர்களுக்கு திருத்தந்தை உரை   (Vatican Media)

குற்றவியல் சட்ட வல்லுனர்களுக்கு திருத்தந்தை உரை

உலகளாவிய குற்றவியல் சட்ட கழகத்தில், பல்கலைக்கழக பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள், ஆய்வாளர்கள், மாணவர்கள் மற்றும், குற்றவியல் வல்லுனர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மனிதரின் மாண்பையும், உரிமைகளையும் மதிக்கும் வகையில் நீதியை பேணி வளர்ப்பதற்கு, உலகளாவிய குற்றவியல் சட்ட கழகத்தினர் ஆற்றிவரும் பணிகளுக்கு நன்றி தெரிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

உரோம் நகரில் தங்களது 20வது மாநாட்டை நடத்திவரும், உலகளாவிய குற்றவியல் சட்ட கழகத்தினரை, நவம்பர் 15, இவ்வெள்ளியன்று, திருப்பீடத்தின் ரெஜ்ஜியா அறையில் சந்தித்து, நீண்ட உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உண்மையான நீதி, புறக்கணிப்பு கலாச்சாரத்தை அல்ல, மாறாக, உரையாடலை அடிப்படையாகக் கொண்டதாகும் என்று கூறினார்.

இக்காலத்தில், சனநாயகங்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களிலிருந்து, தன்னைக் காப்பாற்றிக்கொள்ள, குற்றவியல் சட்டம் தவறியுள்ளது என்று கூறியத் திருத்தந்தை, இச்சூழலில், "சந்தையின் சிலைவழிபாடு" மற்றும், குற்றவியல் கருத்தியலின் ஆபத்துக்கள் தொடர்பாக, இரு முக்கிய கூறுகள் பற்றி சுட்டிக்காட்டிப் பேசினார்.

சந்தையின் ஆதாயங்களுக்குமுன், வலுவற்ற மனிதர், பாதுகாப்பற்றவர்களாய் உள்ளனர் என்றும், Laudato Si' அதாவது, இறைவா உமக்கே புகழ் என்ற திருமடலில் நாம் வாசிப்பது போன்று, இக்காலத்தில் சில பொருளாதாரத் துறைகள், நாடுகளைவிட, அதிக வல்லமை படைத்தவைகளாக உள்ளன என்றும் திருத்தந்தை கூறினார்.

குற்றவியல் கருத்தியலின் ஆபத்துக்கள், பொருளாதாரக் குற்றங்கள் ஏற்படுத்தும் சமுதாயச் சேதம், குற்றவியல் சட்டம் மற்றும், மனித சமுதாயத்திற்கெதிரான குற்றங்கள், சுற்றுச்சூழலை, சட்டமுறைப்படி பாதுகாத்தல், அதிகாரத்தைப் பயன்படுத்துகையில் இடம்பெறும் தவறுகள், வெறுப்புக் கலாச்சாரம் மற்றும் அரசியலுக்கெதிரான உணர்வுகள், நீதி, உரையாடல் மற்றும், சந்திப்பு, பொறுப்புணர்வுக்கு அழைப்பு ஆகிய தலைப்புக்களில் உரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ்.       

இத்துறையில் பணியாற்றுவோர், கடமையுணர்வுடன், நீதியின் மீது தாகம் கொண்டிருக்குமாறு கேட்டுக்கொண்ட திருத்தந்தை, குற்றங்கள் புரியக் காரணமானோர், குற்றங்கள் புரிந்தோர் யாராயிருந்தாலும், சட்டம் மனிதருக்குச் சேவையாற்றுவதாய் இருக்க வேண்டும் என்று கூறினார்.

நவம்பர் 13, இப்புதனன்று துவங்கிய இந்த 20வது உலக மாநாடு, நவம்பர் 16, இச்சனிக்கிழமையன்று நிறைவடைகிறது. உலகளாவிய குற்றவியல் சட்ட கழகம், குற்றவியல் வல்லுனர்களைக் கொண்ட மிகப் பழமையான அறிவியல் கழகமாகும்.

15 November 2019, 15:16