தாய்லாந்து அரசு இல்லத்தில் திருத்தந்தை உரை வழங்கியபோது... தாய்லாந்து அரசு இல்லத்தில் திருத்தந்தை உரை வழங்கியபோது... 

தாய்லாந்து அரசு இல்லத்தில் திருத்தந்தை வழங்கிய உரை

ஏழ்மை, வன்முறை, அநீதி ஆகியவற்றின் பிடியிலிருந்து நம் சகோதர சகோதரிகளை மீட்டெடுப்பதில் உறுதியுடன் உழைக்கிறார்கள், தாய்லாந்து கத்தோலிக்கர்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

பிரதமரே, அரசு அதிகாரிகளே, சமூகத் தலைவர்களே, மதத்தலைவர்களே, சகோதரர், சகோதரிகளே, இந்த வாய்ப்புக்காக உங்கள் அனைவருக்கும் நன்றி கூறுகிறேன். இயற்கை வளங்களையும், ஆன்மீக, மற்றும், கலாச்சார தொன்மை செல்வங்களையும், விருந்தோம்பல்  பண்பையும் கொண்டுள்ள நாடு இது. இன்றைய உலகம் எதிர்நோக்கும் சவால்கள் பலவும் அனைவருக்கும் பொதுவானவை, உலக அளவிலான நீதியின் அர்ப்பணத்தையும், மக்களிடையே ஒருமைப்பாட்டையும் உள்ளடக்குபவை என நீங்கள் அறிவீர்கள்.

பல்வேறு இனங்கள், மதங்கள், கொள்கைகள், எண்ணங்கள் என அனைத்தையும் மதித்து, இணக்கத்தில் வாழும் ஒரு நாடு இது. உலகமயமாக்கல் என்பது, இன்றையச் சூழலில், பொருளாதாரம் என்ற குறுகிய கண்ணோட்டத்துடன் நோக்கப்பட்டாலும், ஒன்றிப்பை மதித்து, பன்மைத்தன்மைக்கு இடமளிக்கும் ஓர் உலகை, நம் வருங்காலத்திற்கு விட்டுச் செல்ல நாம் முயன்று கொண்டிருக்கிறோம்.

சமூக அறநெறி அவை ஒன்றை உருவாக்கி, பாரம்பரிய மதங்களை அழைத்து, அவற்றின் பங்களிப்பால், உங்கள் மக்களின் ஆன்மீக எண்ணங்களை உயிரூட்டத்துடன் வைக்கும் முயற்சி குறித்து மகிழ்கின்றேன். இந்தப் பாதையில், நானும் புத்தமத முதுபெரும் தந்தையைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளேன். 'கோழையாக அல்ல, மாறாக, அன்புடனும் அமைதியுடனும்’, என உங்கள் நாட்டுப் பண்ணில் கூறப்பட்டுள்ளதுபோல், இங்குள்ள கத்தோலிக்கர்கள், சமூக முன்னேற்றத்திற்காக ஒன்றிணைந்து உழைப்பவர்களாக உள்ளனர். ஏழ்மை, வன்முறை, அநீதி ஆகியவற்றின் பிடியிலிருந்து, நம் சகோதரர், சகோதரிகளை மீட்பதில் உறுதியுடன் உழைக்கிறார்கள்.

புலம்பெயர்வோர் பிரச்சனை குறித்தும் இங்கு எடுத்துரைக்க விரும்புகிறேன்.  இப்பிரச்சனை, புறந்தள்ளப்பட்டுவிட முடியாதது. அண்மைய நாடுகளிலிருந்து மக்கள் புலம்பெயர்வதைக் கண்டுவருகிறீர்கள். இந்நாடும், புலம்பெயர்வோருக்கு, வரவேற்பும், அடைக்கலமும் அளித்துள்ளது. புலம்பெயர்தலை தூண்டிவிடும் பிரச்சனைகளுக்குரிய காரணத்தை ஆராய்ந்து, அனைத்துலக சமுதாயம் அவற்றை அகற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என ஆவல் கொள்கிறேன். ஏனெனில், குடிபெயர்வோர், மற்றும், புலம்பெயர்வோரின் மாண்பும் உரிமைகளும், மதிக்கப்பட வேண்டியவை.

அச்சத்திற்கு உள்ளாக்கப்பட்டு, உரிமைகள் மீறப்பட்டு, அடிமைகளாக்கப்படும் குழந்தைகள், மற்றும், பெண்கள் மீது, உங்கள் கவனத்தை திருப்ப விழைகிறேன். இவர்களைக் காக்க, தனிப்பட்ட நடவடிக்கைகளை எடுத்துவரும் அரசையும், தனியார் அமைப்புக்களையும் இந்நேரத்தில் பாராட்டுகிறேன். நம் குழந்தைகளை நாம் நடத்தும் விதத்தைப் பொருத்தே, வருங்காலம் அமைந்துள்ளது.

இன்றைய சமுதாயத்திற்கு, இன்முக வரவேற்பின் நிபுணர்கள் தேவைப்படுகிறார்கள். ஆம். சமுதாயத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு உதவுபவர்கள் இவர்கள். பொதுநல சேவையில் ஒவ்வொருவரும் அவரவர் வழியில், அவரவரின் திறமைக்கேற்ப செயல்படவேண்டும். இதுவே உன்னத பணி. ஞானத்திலும், அமைதியிலும், நீதியிலும் இறைவன் உங்களையும், உங்கள் குடும்பங்களையும் வழிநடத்திட வேண்டி, என் உரையை நிறைவுச் செய்கிறேன்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 November 2019, 13:27