தேடுதல்

"ரொசாரியோ லிவாத்தினோ" என்ற ஆய்வு மையத்தின் பிரதிநிதிகளைச் சந்திக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் "ரொசாரியோ லிவாத்தினோ" என்ற ஆய்வு மையத்தின் பிரதிநிதிகளைச் சந்திக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் 

லிவாத்தினோ, நீதிபதிகளுக்கு மட்டும் எடுத்துக்காட்டு அல்ல..

38வது வயதில் கொல்லப்பட்ட இத்தாலிய நீதிபதி லிவாத்தினோ அவர்கள், தன் கிறிஸ்தவ விசுவாசத்தையும், பணியையும் ஒத்திணங்கிச் செல்லும் முறையிலும் வாழ்ந்தார். இவர் நீதியின் மறைசாட்சி

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இத்தாலியின் "ரொசாரியோ லிவாத்தினோ (Rosario Livatino)" என்ற ஆய்வு மையத்தின் ஏறத்தாழ 200 பிரதிநிதிகளை, நவம்பர் 29, இவ்வெள்ளி காலையில், திருப்பீடத்தில் சந்தித்து, ரொசாரியோ லிவாத்தினோ அவர்கள் பற்றிய தன் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்தாலிய குற்றவியல் நீதிபதி ரொசாரியோ ஆஞ்சலோ லிவாத்தினோ அவர்கள், 1990ம் ஆண்டு செப்டம்பர் 21ம் தேதி, தனது பணி காரணமாக, நீதிமன்றத்திற்குச் சென்றுகொண்டிருந்தவேளை, சுட்டுக்கொல்லப்பட்டார். 38 வது வயதில் கொல்லப்பட்ட ரொசாரியோ லிவாத்தினோ அவர்களை, அருளாளர் நிலைக்கு உயர்த்துவதற்கு மறைமாவட்டம் மேற்கொண்ட முதல்கட்ட பணிகள் நிறைவடைந்துள்ளன.

ரொசாரியோ லிவாத்தினோ ஆய்வு மையம், “நீதித்துறையின் பிரச்சனை, நீதியைப் பெறுவதற்குப் பாதைகள்” என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கை நடத்தியது. இதில் கலந்துகொண்ட 200 பிரதிநிதிகளுக்கு உரையாற்றிய திருத்தந்தை, நீதிபதி ரொசாரியோ லிவாத்தினோ அவர்கள் பற்றிய தன் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார்.

இவர், நீதிபதிகளுக்கு மட்டுமன்றி, சட்டத்துறையில் பணியாற்றும் எல்லாருக்கும் எடுத்துக்காட்டாய்த் திகழ்கிறார் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 1993ம் ஆண்டு மே 3ம் தேதி Agrigento வில், மாஃபியா குற்றக்கும்பலின் மனமாற்றத்திற்கு அழைப்பு விடுத்த புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், லிவாத்தினோ அவர்களின் பெற்றோரையும் சந்தித்தார், அச்சமயத்தில், லிவாத்தினோ, நீதியின் மறைசாட்சி என்றும் கூறினார் என்றார்.

தனது கிறிஸ்தவ விசுவாசத்தோடு ஒத்திணங்கிச் செல்லும் வகையில், லிவாத்தினோ அவர்கள் தனது பணியை ஆற்றினார் என்றும், இது, கருணைக்கொலையை சட்டமாக்குவது பற்றிய கருத்தரங்கு ஒன்றில் அவர் எடுத்துரைத்த கருத்துக்களில் தெளிவாகத் தெரிகின்றது என்றும், திருத்தந்தை கூறினார்.

லிவாத்தினோ அவர்கள், நீதித் துறையினருக்கென நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றியவேளை, சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு கொடுக்கப்பட்டிருக்கும் சிறப்புப் பணியில், நீதித்துறையினரின் இன்றியமையாதக் கடமைகளை வலியுறுத்தினார் என்றும் திருத்தந்தை கூறினார்.

கொல்லப்பட்ட லிவாத்தினோ அவர்கள், மாஃபியா குற்றக்கும்பல், சட்டத்திற்குப் புறம்பே வைத்திருக்கும் சொத்துக்களை ஆய்வுசெய்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 November 2019, 15:16