தேடுதல்

Vatican News
அருள்பணி ரென்ஸோ தே லூக்காவுடன் சோஃபியா பல்கலைக்கழகத்தைப் பார்வையிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அருள்பணி ரென்ஸோ தே லூக்காவுடன் சோஃபியா பல்கலைக்கழகத்தைப் பார்வையிட்ட திருத்தந்தை பிரான்சிஸ்  (AFP or licensors)

புனித சவேரியாரைப் பின்பற்றி, ஜப்பானில் மறைப்பணியாற்ற...

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் பயிற்சி மாணவர்களுடன் எப்போதும் மிக நெருக்கமாக, எப்போதும் அணுகக் கூடியவராய் இருந்தார், அவர் எங்களோடு அமர்ந்து பேசுவார், எங்களோடு சேர்ந்து சமைப்பார், அடிக்கடி எங்களுக்குச் சமைத்துக் கொடுப்பார் – திருத்தந்தையின் முன்னாள் மாணவர்

மேரி தெரேசா: வத்திக்கான்

நவம்பர் 26, இச்செவ்வாய், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் 32வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணம் மற்றும், ஆசியக் கண்டத்திற்கு அவர் மேற்கொண்ட நான்காவது   திருத்தூதுப் பயணத்தின் நிறைவு நாள். இரு ஆண்டுகளுக்குமுன், இதே நவம்பர் 26ம் தேதியில்தான் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது 21வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணமாக, மியான்மார், பங்களாதேஷ் ஆகிய இரு ஆசிய நாடுகளுக்குத் தனது திருத்தூதுப் பயணத்தைத் துவங்கினார். ஜப்பானில் நான்காவது நாளாக மற்றும், இறுதி நாளாக, இச்செவ்வாய் உள்ளூர் நேரம் காலை 7.10 மணிக்கு, அதாவது இந்திய-இலங்கை நேரம், இச்செவ்வாய் அதிகாலை காலை 3.40 மணிக்கு தனது திருத்தூதுப் பயண நிகழ்வுகளை ஆரம்பித்தார், திருத்தந்தை பிரான்சிஸ். டோக்கியோ நகர் திருப்பீடத் தூதரகத்தில், இந்நாள்களில் தனக்கு உதவிபுரிந்த அனைவருக்கும் நன்றி சொல்லி, மொசைக் வேலைப்பாடுகளால் ஆன, தனது பாப்பிறைப் பணி இலச்சினை மற்றும், இத்திருத்தூதுப்பயண பதக்கம் ஆகியவற்றை அத்தூதரகத்திற்குப் பரிசாக அளித்து, அங்கிருந்து, டோக்கியோ நகரின் புகழ்பெற்ற இயேசு சபையினரின் சோஃபியா பல்கலைக்கழகத்திற்குச் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். உயர் மெய்யறிவின் பல்கலைக்கழகம் எனப்படும், சோஃபியா பல்கலைக்கழகம், ஜப்பானிலுள்ள மதிப்புமிக்க தனியார் கல்வி நிறுவனங்களில் ஒன்று.  கல்விக்கட்டணம் அதிகமாகவுள்ள, இங்கிலாந்து, அமெரிக்க ஐக்கிய நாடு, சிலே ஆகிய மூன்று OECD நாடுகளைத் தொடர்ந்து, ஜப்பானிலும் கல்விக்கட்டணம் அதிகம் என்று சொல்லப்படுகின்றது.

16ம் நூற்றாண்டில், 1549ம் ஆண்டில் ஜப்பானுக்கு முதன்முதலில் மறைப்பணியாளராகச் சென்ற இயேசு சபை புனிதர், பிரான்சிஸ் சவேரியாரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, இளம் இயேசு சபை அருள்பணியாளர் Jorge Mario Bergoglio, அதாவது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜப்பானுக்குச் செல்ல விரும்பிய விரும்பினார். ஆனால் அச்சமயத்தில், உடல்நலம் காரணமாக, அவர் அங்கு அனுப்பப்படவில்லை. இது பற்றி, நவம்பர் 23, கடந்த சனிக்கிழமை மாலையில் டோக்கியோவில் ஜப்பான் ஆயர்களை சந்தித்தவேளையில் நகைச்சுவையாகக் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதற்குப் பழிவாங்கும் விதமாக, அர்ஜென்டீனாவில் இயேசு சபை மாநிலத் தலைவராக, புவனோஸ் அய்ரஸ் நகரில் பணியாற்றியபோது, ஐந்து இயேசு சபை அருள்பணியாளர்களை, அர்ஜென்டீனாவிலிருந்து ஜப்பானுக்கு மறைப்பணியாற்ற அனுப்பினேன் என்று கூறினார். அச்சமயத்தில் திருத்தந்தை அனுப்பியவர்களில் ஒருவர்தான், தற்போதைய ஜப்பான் இயேசு சபை மாநில தலைவரான அருள்பணி ரென்ஸோ தே லூக்கா (Renzo De Luca) அவர்கள். இவரே, திருத்தந்தையின் ஜப்பான் திருத்தூதுப் பயணத்தில், இஸ்பானிய மொழியில், திருத்தந்தை ஆற்றிய அனைத்து உரைகளையும், ஜப்பானிய மொழியில் மொழிபெயர்த்து வழங்கினார். அருள்பணி லூக்கா அவர்கள், வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியொன்றில்,  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது முன்னாள் துறவுப் பயிற்சி கல்லூரி தலைவர், இவர், தன் மாணவர்களுடன் எப்போதும் மிக நெருக்கமாய் இருப்பார், ஒரு கட்டத்தில் துறவுப் பயிற்சி மாணவர்கள் நூற்றுக்கும் அதிகமாக இருந்தோம், நாங்கள் எல்லாரும் எப்போதும் அவரை அணுகக் கூடியவராய் இருந்தார், அவர் எங்களோடு அமர்ந்து பேசுவார், எங்களோடு சேர்ந்து சமைப்பார், அடிக்கடி எங்களுக்குச் சமைத்துக் கொடுப்பார் என, திருத்தந்தை பற்றிய தனது பசுமையான நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

26 November 2019, 14:30