தேடுதல்

Vatican News
அகில உலக கத்தோலிக்கப் பல்கலைக்கழகக் கூட்டமைப்பினருடன் திருத்தந்தை அகில உலக கத்தோலிக்கப் பல்கலைக்கழகக் கூட்டமைப்பினருடன் திருத்தந்தை  (Vatican Media)

கத்தோலிக்கப் பல்கலைக்கழகக் கூட்டமைப்பினருடன் திருத்தந்தை

கலாச்சாரம் மற்றும் சமுதாய வளர்ச்சிக்குரிய தீர்வுகளை, தனி மனிதர்களும், மனித குலமும் இணைந்து கண்டுபிடிப்பதில், கத்தோலிக்கப் பல்கலைக்கழகங்கள் பொறுப்புணர்வு காட்டவேண்டியது முக்கியம் - திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

தனி மனிதர்களுக்குரிய நல ஆதரவு, மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்தவற்றில் பல்கலைக்கழகங்கள் காட்டவேண்டிய பொறுப்புணர்வு குறித்து, அகில உலக கத்தோலிக்கப் பல்கலைக்கழகக் கூட்டமைப்பினரிடம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

"நல ஆதரவு மற்றும் பல்கலைக்கழக சுற்றுச்சூழல் அமைப்பு முறையில் புதிய எல்லைகள்" என்ற மையக்கருத்துடன், உரோம் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட, உலக கத்தோலிக்க பல்கலைக்கழகக் கூட்டமைப்பின் உறுப்பினர்களை, நவம்பர் 4, இத்திங்களன்று, வத்திக்கானில் சந்தித்த திருத்தந்தை, அவர்களுக்கு வழங்கிய உரையில் இவ்வாறு கூறினார்.

கலாச்சாரம் மற்றும் சமுதாய வளர்ச்சிக்குரிய தீர்வுகளை, தனி மனிதர்களும் மனித குலமும் இணைந்து கண்டுபிடிப்பதில், கத்தோலிக்கப் பல்கலைக்கழகங்கள் பொறுப்புணர்வு காட்டவேண்டியது முக்கியமானது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எடுத்துரைத்தார்.

கல்வித்துறையில் 'ஏன்' என்ற கேள்வி மிகவும் அவசியம் என்பதை வலியுறுத்திக் கூறியத் திருத்தந்தை, எந்த ஓர் அனுபவமும், ஒருவரை பாதிக்காமல் இருப்பதில்லை என்ற நிலையில், நல்ல அனுபவங்கள் அனைவருக்கும் பயன்தரும் வகையில் பகிர்ந்துகொள்ளப்படவேண்டும் என்று கூறினார்.

அறிவு சார்ந்த விடயங்களை மட்டுமல்லாமல், நன்னெறி சார்த்தவற்றையும் கற்பிக்கும்போது, தனி மனிதர்களுக்கு மட்டுமல்ல, சமுதாயத்திற்கே அவை பயன் தருவதாக அமையும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலக கத்தோலிக்க பல்கலைக்கழகக் கூட்டமைப்பின் உறுப்பினர்களிடம் கூறினார்.

04 November 2019, 15:14