ஹிரோஷிமா அமைதியின் நினைவிடத்தில் திருத்தந்தை ஹிரோஷிமா அமைதியின் நினைவிடத்தில் திருத்தந்தை 

ஹிரோஷிமா அமைதியின் நினைவிடத்தில் திருத்தந்தை

ஹிரோஷிமா மண்ணின் வரலாற்றில் அந்தப் பயங்கரமான நாளில், மரணம் மற்றும் காயங்களால் துன்புற்ற எல்லாருடனும் தோழமையுணர்வில் அமைதியின் திருப்பயணியாக இங்கு வந்துள்ளேன் - திருத்தந்தை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்

நவம்பர் 24, இஞ்ஞாயிறன்று, நாகசாகி நகரிலிருந்து ஒரு மணி 10 நிமிடங்கள் விமானப் பயணம் செய்து, உள்ளூர் நேரம் மாலை 6.40 மணிக்கு, ஹிரோஷிமா நகரின் அமைதியின் நினைவிடத்திற்குச் சென்றார் திருத்தந்தை. உலகின் முதல் அணு குண்டு போடப்பட்ட நகரம் இது. இரண்டாம் உலகப் போரின்போது, 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி காலை 8.15 மணிக்கு, அமெரிக்க ஐக்கிய நாடு, ஒன்பதாயிரம் பவுண்டுக்கும் அதிகமான எடையுள்ள 'Little Boy' எனப்படும் யுரேனிய அணு குண்டை, ஹிரோஷிமா நகருக்கு மேலே இரண்டாயிரம் அடி உயரத்திலிருந்து போட்டது. அதில் அந்நகர் முற்றிலுமாக அழிந்தது. உடனடியாக எழுபதாயிரத்திற்கு அதிகமான மக்கள் இறந்தனர். பின்னர் கதிர்வீச்சால் மேலும் எழுபதாயிரம் பேர் இறந்தனர். Genbaku கோபுரம் மட்டுமே இதில் தப்பியது. இன்று, ஹிரோஷிமா அமைதியின் நினைவு பூங்கா இடத்தில், இந்தக் கோபுரம் சாட்சியாக நிற்கிறது.  மனித சமுதாயத்தின் அழிவைக் குறித்துக் காட்டும் இவ்விடம், 1,20,000 மீட்டர் பரப்பளவில், 1954ம் ஆண்டில் எழுப்பப்பட்டது. இவ்விடத்தில், இருபது பல்சமயத் தலைவர்கள், அணுகுண்டால் தாக்கப்பட்ட இருபது பேர் மற்றும், ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். இங்கு அனைவரும் அமைதியாக சிறிது நேரம் செபித்தனர். அமைதியின் தூதராக, மெழுகுதிரி ஒன்றையும் திருத்தந்தை ஏற்றினார். அமைதியின் மணியும் ஒலிக்கப்பட்டது. பின்னர், Yoshiko Kajimoto, Koji Hosokawa ஆகிய இருவரும் திருத்தந்தையிடம் சான்று பகர்ந்தனர். இவர்கள் இருவரும், அணுகுண்டால் தாக்கப்பட்டவர்கள்.  

சாட்சியம்

Yoshiko Kajimoto அவர்கள் பேசுகையில், அணுகுண்டு வீசப்பட்டபோது எனக்கு 14 வயது. ஜன்னல் வழியாக நீலநிற ஒளி புகுந்தது. தொழிற்சாலை அழிந்தது. நான் மயங்கி விழுந்தேன். இருளாக இருந்தது. எனது நண்பர்கள் ஓவென அலறினர். வெளியே சென்று பார்த்தபோது எங்கும் இருள். அழுகிப்போன மீன் போல நாற்றம் அடித்தது. அந்நாளைத் தொடர்ந்து ஹிரோஷிமா எங்கும் வெண்புகைதான். இந்நகர் இறந்தோர் இடமாக மாறியது. 3 நாள்கள் சென்று என்னைத் தேடிவந்த என் தந்தையை தற்செயலாகச் சந்தித்தேன். அவரும் கதிர்வீச்சால் தாக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் சென்று உயிரிழந்தார். எனது தாயும், 20 ஆண்டுகள் நோயால் துன்புற்று இறந்தார். புற்றுநோயால், 1999ம் ஆண்டில் எனது வயிற்றின் மூன்றில் இரண்டு பகுதி நீக்கப்பட்டது. எனது பல நண்பர்கள் புற்றுநோயால் இறந்தனர். 74 ஆண்டுகள் சென்று இரத்த புற்றுநோயால் துன்புறுகிறேன். கடும் நோயிலும், உலகில் இத்தகைய அணுகுண்டு தாக்குதலால் மீண்டும் யாரும் துன்புறக் கூடாது என்பதற்கு சாட்சி சொல்லி வருகிறேன்.  இத்தாக்குதலால், ஹிரோஷிமா நகரின் 3,50,000 பேரில், ஏறத்தாழ, 1,40,000 பேர் உடனடியாக இறந்தனர்.

இந்த சாட்சியத்திற்குப்பின், திருத்தந்தையும் தன் செய்தியை வழங்கினார். இந்த இடம், மரணத்தையும் வாழ்வையும், இழப்பையும் மறுபிறப்பையும் விளக்குகிறது. போரின் நோக்கங்களுக்காக, அணு சக்தியைப் பயன்படுத்துவதும், கொண்டிருப்பதும், நன்னெறிக்குப் புறம்பானது. இவ்வாறு ஹிரோஷிமா அமைதியின் நினைவிடத்தில் அழுத்தமாகச் சொல்லி அங்கிருந்து ஹிரோஷிமா விமான நிலையத்திற்கு 53 கிலோ மீட்டர் தூரம் காரில் சென்று, டோக்கியோவுக்குப் புறப்பட்டார் திருத்தந்தை பிரான்சிஸ். “இம்மண்ணின் வரலாற்றில் அந்தப் பயங்கரமான நாளில், மரணம் மற்றும் காயங்களால் துன்புற்ற எல்லாருடனும் தோழமையுணர்வில் அமைதியின் திருப்பயணியாக இங்கு வந்துள்ளேன். அமைதி, ஒப்புரவு மற்றும், உடன்பிறந்த அன்பை நோக்கி, வாழ்வின் கடவுள், இதயங்களை மனமாற்றுமாறு செபிக்கின்றேன்” என்று, ஹிரோஷிமா நினைவிடத்தின் தங்கப் புத்தகத்தில் எழுதினார் திருத்தந்தை பிரான்சிஸ். இந்த அமைதியின் பூங்கா நினைவிடத்திற்கு, 120 செ.மீ. உயரமுடைய, வெள்ளியாலானத் தீபத் தூண் ஒன்றைப் பரிசாக அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இரவு உணவை விமானத்திலே முடித்து, டோக்கியோ நகர்வந்து, அந்நகர் திருப்பீடத் தூதரகம் சென்று உறங்கச் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். இத்துடன் இஞ்ஞாயிறு நிகழ்வுகள் நிறைவுற்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 November 2019, 14:27