தேடுதல்

பன்னாட்டு இயேசு சபை உறுப்பினர்களுடன் திருத்தந்தை பன்னாட்டு இயேசு சபை உறுப்பினர்களுடன் திருத்தந்தை 

சமுதாய நீதி, சுற்றுச்சூழல் பணியாற்றுவோருடன் திருத்தந்தை

வறியோருக்கு பணியாற்றும் இயேசுசபையின் துவக்ககால பாரம்பரியம் இன்றைய சந்ததியை அடைவதற்கு பெருமளவில் உழைத்தவர், அருள்பணி அருப்பே – திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இயேசு சபை உருவான காலத்திலிருந்து, இச்சபை, வறியோருக்கு பணி செய்வதற்கு அழைக்கப்பட்டுள்ளது என்பதை உணர்த்த, புனித இக்னேசியஸ், அந்த அம்சத்தை, சபையின் சட்டவரைவில் ஒருங்கிணைத்தார் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னைச் சந்திக்க வந்திருந்த பன்னாட்டு இயேசு சபை உறுப்பினர்களிடம் கூறினார்.

சமுதாய நீதி பணி அமைப்பு – 50 ஆண்டுகள்

இயேசு சபையின், சமுதாய நீதி மற்றும் சுற்றுச்சூழல் பணிகளின் செயலகம் உருவாக்கப்பட்டதன் 50ம் ஆண்டு நிறைவைச் சிறப்பிக்க, உரோம் நகரில் நடைபெற்று வரும் பன்னாட்டு கருத்தரங்கில் பங்கேற்கும் உறுப்பினர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நவம்பர் 7, இவ்வியாழன் காலை, திருப்பீடத்தில் சந்தித்து வாழ்த்தினார்.

இச்சந்திப்பின்போது அவர் வழங்கிய உரையில், புனித இக்னேசியஸுடன் இணைந்த முதல் தோழர்கள், சிறைகளிலும், மருத்துவ மனைகளிலும் பணியாற்றுவதை, வேறும் ஏட்டளவு சட்டமாக வைத்திராமல், அதனை, தங்கள் தினசரி வாழ்வு முறையாக மாற்றினர் என்று திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.

வறியோரில் இறைவனைச் சந்திக்க...

இந்த துவக்ககால பாரம்பரியம், இன்றைய சந்ததியை அடைவதற்கு பெருமளவில் உழைத்தவர், அருள்பணி அருப்பே என்பதை, தன் உரையில் சிறப்பாக குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்தவ நம்பிக்கையைப் பறைசாற்றுவதும், நீதியை வளர்ப்பதும் இயேசு சபையின் இன்றியமையாதப் பணிகள் என்று உணர்த்தியவர், அருள்பணி அருப்பே என்று கூறினார்.

எளிய, புறக்கணிக்கப்பட்ட ஒரு குழந்தையில் இறைவனை தியானிப்பதற்கு, ஒவ்வோர் ஆண்டும் நமது திருவழிபாடு அழைக்கிறது என்று தன் உரையில் எடுத்துரைத்த திருத்தந்தை, கிறிஸ்து பிறப்பு காட்சியை தியானம் செய்யத் தூண்டும் புனித இக்னேசியஸ், அக்காட்சியில் ஒரு பணிப்பெண்ணாக நம்மையே இணைத்துக்கொள்ளத் தூண்டுகிறார் என்பதையும் நினைவுறுத்தினார்.

சமுதாய நீதிப் பணியில் ஈடுபட்டுள்ள பலர், வறியோரை நேருக்கு நேர் சந்திக்கும் வாய்ப்பு பெற்றுள்ளதை ஒரு வரமாகக் கருதவேண்டும் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட இவ்வரத்தை அவர்கள் போற்றி பாதுகாக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இன்று நிகழும் மூன்றாம் உலகப்போர்

மனித வர்த்தகம், வேற்று இனத்தவர் மீது எழும் அச்சமும் வெறுப்பும், பல்வேறு குற்றங்கள், இனங்களின் அழிவு என்ற பல வடிவங்களில் இன்று மூன்றாம் உலகப்போர் நிகழ்ந்து வருகிறது என்பதை, எடுத்துரைத்தத் திருத்தந்தை, மனித குலத்திற்கு இழைக்கப்படும் இக்கொடுமைகளோடு, பூமிக்கோளத்தையும் நாம் சீரழித்து வருகிறோம் என்பதையும் கவலையுடன் குறிப்பிட்டார்.

எல் சால்வதோர் துறவிகளின் சாட்சிய மரணம்

எல் சால்வதோர் நாட்டின் மத்திய அமெரிக்க பல்கலைக்கழகத்தில் சாட்சிய மரணமடைந்த இயேசு சபையினரின் 30ம் ஆண்டை இவ்வாண்டு சிறப்பிக்கிறோம் என்பதை தன் உரையில் சிறப்பாக நினைவுகூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த இயேசு சபை துறவிகளின் சாட்சிய மரணம், உலகெங்கிலும் வாழும் இயேசு சபையினருக்கு பெரும் உந்து சக்தியாக இன்றும் விளங்குகிறது என்று கூறினார்.

இந்த உலகத்திற்கும், மனித சமுதாயத்திற்கும் மாற்றம் தேவை என்பதை உணரும் நாம், சிறப்பாக, இந்த மாற்றங்களை, வலுவற்ற மக்களிடம் உருவாக்கவும், அத்தகைய மாற்றங்களில் அவர்கள் அடையும் இன்னல்களில் துணை நிற்கவும் அழைக்கப்பட்டுள்ளோம் என்று வலியுறுத்திக் கூறினார் திருத்தந்தை.

இறையரசின் நம்பிக்கையை வளர்க்க...

அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பது, சமுதாய நீதிப் பணி அமைப்பின் நோக்கமல்ல, மாறாக, மாற்றங்களை உருவாக்கும் வழிகளை வளர்ப்பதும், மக்களிடையே நம்பிக்கையை உருவாக்குவதும் சமுதாய நீதிப் பணியின் நோக்கம் என்பதை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் உரையில் தெளிவுபடுத்தினார்.

இறையரசைக் குறித்த கிறிஸ்தவ நம்பிக்கையை வளர்ப்பது நம் கடமை என்று தன் உரையின் இறுதியில் குறிப்பிட்ட திருத்தந்தை, ஓர் எதிர்காலத்தையும், அதன் பல்வேறு வாய்ப்புக்களையும் உருவாக்குவதும், மாற்று வழிகளில் சிந்திப்பதும், நம்பிக்கையை விதைப்பதும் நமது குறிக்கோளாக அமையவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

தாய்லாந்தில் அருள்பணி அருப்பே

தாய்லாந்து நாட்டில் புலம் பெயர்ந்தோர் முகாமில் மக்களோடு தன்னையே ஒருங்கிணைத்துக்கொண்ட அருள்பணியாளர் அருப்பே அவர்களின் உருவத்தை நீங்கள் நினைவில் கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்தப் பயணத்திலிருந்து திரும்பும் வேளையில், அருள்பணி அருப்பே அவர்கள் முடக்குவாதமுற்றார் என்பதையும், சிறப்பாகக் குறிப்பிட்டார்.

செபிப்பதை ஒருபோதும் நிறுத்தவேண்டாம் என்று அருள்பணி அருப்பே அவர்கள் கூறியது, அவர் நமக்கு வழங்கியுள்ள அவரது உயில் என்று தன் உரையின் இறுதியில் குறிப்பிட்ட திருத்தந்தை, வந்திருந்த அனைவருக்கும் ஆசீர் வழங்கினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 November 2019, 14:48