தேடுதல்

Vatican News
திருஅவையின் உச்ச நீதிமன்றமான ரோமன் ரோட்டா நடத்திய பயிற்சி பாசறையில் கலந்துகொண்டோருடன் திருத்தந்தை திருஅவையின் உச்ச நீதிமன்றமான ரோமன் ரோட்டா நடத்திய பயிற்சி பாசறையில் கலந்துகொண்டோருடன் திருத்தந்தை  (Vatican Media)

பிரச்சனையிலுள்ள திருமணத் தம்பதியருடன் திருஅவை துன்புறுகிறது

தம்பதியரின் கவலை நிறைந்த மற்றும், கலங்கிய வாழ்வு நிலைகளைக் கண்டு, திருஅவை பாராமுகமாயும், உணர்வின்றியும் இருக்காது. திருஅவை எப்போதும் தம்பதியரின் நன்மைகளை மட்டுமே தேடுகின்றது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

திருமண வாழ்வில் இன்னல்களை எதிர்கொள்பவர்களின் நன்மையை மட்டுமே திருஅவை எப்போதும் தேடுகின்றது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  இச்சனிக்கிழமை காலையில் கூறினார்.

“திருமணத்தைப் பாதுகாத்தல் மற்றும், நெருக்கடியிலுள்ள திருமணத் தம்பதியருக்கு மேய்ப்புப்பணி அக்கறை” என்ற தலைப்பில், திருஅவையின் உச்ச நீதிமன்றமான ரோமன் ரோட்டா நடத்திய பயிற்சி பாசறையில் கலந்துகொண்ட ஏறத்தாழ நானூறு பேரை,  நவம்பர் 30, இச்சனிக்கிழமை காலையில் திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்தப் பயிற்சியின் தலைப்பு பற்றிய தன் சிந்தனைகளைத் தெரிவித்தார்..

திருமணத்தைப் பாதுகாத்தல், நெருக்கடியிலுள்ள திருமணத் தம்பதியருக்கு மேய்ப்புப்பணி அக்கறை ஆகிய இரு முக்கிய கூறுகள் பற்றி உரையாற்றிய திருத்தந்தை, இக்காலத்தில் திருமணத்தில் எதிர்கொள்ளப்படும் துன்பங்கள், உளவியல், உடலியல், சூழலியல், கலாச்சாரயியல் போன்ற பல்வேறு காரணங்களால் ஏற்படுகின்றன என்று கூறினார்.

சிலவேளைகளில், மனித இதயம் அன்புகூர்வதற்கு தன்னை மூடிக்கொள்வதும் இத்துன்பங்களுக்குக் காரணம், இந்தப் பாவம் நம் அனைவரிடமும் உள்ளது என்று கூறியத் திருத்தந்தை, இதனாலே, துன்பங்களை எதிர்கொள்ளும் தம்பதியரைச் சந்திக்கும்போது, திருஅவை முதலில் அவர்களோடு சேர்ந்து கண்ணீர் சிந்துகிறது, மற்றும், அவர்களோடு துன்புறுகின்றது என்று கூறினார். 

தம்பதியரின் கவலை நிறைந்த மற்றும், கலங்கிய வாழ்வு நிலைகளைக் கண்டு, திருஅவை பாராமுகமாயும், உணர்வின்றியும் இருக்காது, இதனாலேயே, சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கும் முறைகளில்கூட, திருஅவை, தம்பதியரின் நன்மைகளை மட்டுமே எப்போதும் தேடுகின்றது என்று கூறினார், திருத்தந்தை.

இந்த நடவடிக்கைகளை அலசி ஆராய்ந்து சரியான தீர்ப்பளிப்பதற்காக, திருஅவையின் அமைப்புகள், முதலில் தூய ஆவியாருக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகின்றன என்று கூறியத் திருத்தந்தை, திருமண அருளடையாளம்,  எவ்விதத் தயாரிப்பின்றி வழங்கப்படக் கூடாது என்று கூறினார்.

திருமண அருளடையாளத்தைப் பெறுபவர்களை, கிறிஸ்தவத் தம்பதியராகத் தயாரிக்கும், ஆயர் அல்லது பங்குத்தந்தை, அவர்கள், பங்குக் குழுக்களில், திருத்தூதுக் குழுக்களாக வாழ்வதற்கு உதவ வேண்டும் என்பதை திருத்தந்தை வலியுறுத்தினார். 

புனித பவுலடிகளாரின் நண்பர்களாகவும், உடன் உழைப்பாளர்களாகவும் இருந்த புனிதர்கள் அக்கிலா, பிரிஸ்கா தம்பதியர், திருமணத் தம்பதியருக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகள் என்று திருத்தந்தை கூறினார். திருஅவை, அதன் பங்குத்தள அமைப்பில், குடும்பங்களின் குழுமம், இக்குடும்பங்கள், இப்புனித தம்பதியர் போன்று, தன் பகுதியில், நற்செய்திக்குச் சான்றுகளாக விளங்க வேண்டும் என்று, திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.

30 November 2019, 15:27