தேடுதல்

Vatican News
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன், ஆங்கிலிக்கன் பேராயர் வெல்பி அவர்கள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன், ஆங்கிலிக்கன் பேராயர் வெல்பி அவர்கள்  (Vatican Media)

தென் சூடானுக்கு செல்ல விழையும் திருத்தந்தை,, பேராயர் வெல்பி

தென் சூடானில் அமைதி நிறைந்த அரசியல் சூழல் உருவானால், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், ஆங்கிலிக்கன் பேராயர் வெல்பி அவர்களும் இணைந்து, அந்நாட்டில் பயணம் மேற்கொள்ள, தங்கள் விருப்பத்தை தெரிவித்துள்ளனர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஆங்கிலிக்கன் சபையின் தலைவரும், கான்டர்பரி பேராயருமான ஜஸ்டின் வெல்பி (Justin Welby) அவர்களும், உரோம் நகர், ஆங்கிலிக்கன் மையத்தின் இயக்குனரான பேராயர் இயன் எர்னஸ்ட் (Ian Ernest) அவர்களும், மற்றும் ஏனைய ஆங்கிலிக்கன் சபையின் மேல்மட்ட பிரதிநிதிகளும் நவம்பர் 13, இப்புதன் பிற்பகலில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை சந்தித்து உரையாடினர்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில், உலகின் பல பகுதிகளில் நிலவும் பதட்டமானச் சூழல்களையும், குறிப்பாக பல நாடுகளில், கிறிஸ்தவர்கள் அடையும் துன்பங்களையும் குறித்து, திருத்தந்தையும், பேராயர் வெல்பி அவர்களும் விவாதித்தனர் என்று, வத்திக்கான் செய்தித்துறை கூறியுள்ளது.

தென் சூடான் நாட்டில் அடுத்த 100 நாள்களில் நாட்டு ஒற்றுமையும், அமைதியும் நிலவ ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும் என்ற சூழலில், அந்நாட்டில் அமைதி, மற்றும் ஒற்றுமை நிறைந்த அரசியல் சூழல் உருவானால், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், ஆங்கிலிக்கன் பேராயர் வெல்பி அவர்களும் இணைந்து, அந்நாட்டில் பயணம் மேற்கொள்ள தங்கள் விருப்பத்தை தெரிவித்துள்ளனர் என்று, வத்திக்கான் செய்தித்துறை அறிவித்துள்ளது.

2016ம் ஆண்டு, தென் சூடான் நாட்டின் கத்தோலிக்க, ஆங்கிலிக்கன் மற்றும் பிரெஸ்பிட்டேரியன் பிரிவுகளைச் சேர்ந்த தலைவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களையும், பேராயர் வெல்பி அவர்களையும் சந்தித்து, இவ்விரு தலைவர்களும் தங்கள் நாட்டிற்கு வரவேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

14 November 2019, 15:13