நாகசாகி அமைதியின் பூங்காவில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் திருத்தந்தை நாகசாகி அமைதியின் பூங்காவில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் திருத்தந்தை 

நாகசாகி அமைதியின் பூங்காவில் திருத்தந்தை

1945ம் ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதி காலை 11 மணி 2 நிமிடங்களுக்கு, நாகசாகியின் மீது, ஏறத்தாழ பத்தாயிரம் பவுண்டு எடையுள்ள 'Fat Man' எனப்படும் புளூட்டோனிய அணு குண்டு போடப்பட்டதில், அந்நகரின் மூன்றில் ஒரு பகுதி அழிந்தது.

மேரி தெரேசா: வத்திக்கான்

நவம்பர் 24, இஞ்ஞாயிறு, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை அனைத்துக்கும் அரசராகக் கொண்டாடிய நாள். இந்நாளில், உலகில் அணுகுண்டுகளால் தாக்கப்பட்ட ஒரே நாடான ஜப்பானின் நாகசாகி, ஹிரோஷிமா நகரங்களில் பயண நிகழ்வுகளை நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்தகாலத் தவறுகளை நாம் மறுபடியும் ஆற்ற முடியாது, உலகில் அணு ஆயுதங்கள் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் வேண்டும் என்று உலக சமுதாயத்திற்கு உருக்கமுடன் அழைப்பு விடுத்தார். அமைதியின் ஆண்டவராம் இயேசுவிடம், உலகில் அமைதியும், சமய சுதந்திரமும் நிலவவும் திருத்தந்தை செபித்தார். ஆசியக் கண்டத்தில் நான்காவது முறையாக, திருத்தூதுப் பயணத்தை மேற்கொண்டுவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நவம்பர் 23, இச்சனிக்கிழமை காலையில் தாய்லாந்தில் பயண நிகழ்வுகளை நிறைவு செய்து, அங்கிருந்து ஜப்பான் நாட்டிற்குச் சென்றார். ‘சூரியன் உதயமாகும் நிலம்’ என அழைக்கப்படும் ஜப்பானில், மூன்று நாள்கள் திருத்தூதுப் பயண நிகழ்வுகளை நிறைவேற்றும் திருத்தந்தை, நவம்பர் 24, இஞ்ஞாயிறு உள்ளூர் நேரம் காலை 6.40 மணிக்கு, அதாவது இந்திய-இலங்கை நேரம் இஞ்ஞாயிறு காலை 3.10 மணிக்கு டோக்கியோ திருப்பீடத் தூதரகத்திலிருந்து இருபது கிலோ மீட்டர் தொலைவிலுள்ள டோக்கியோ Haneda விமானத்தளம் சென்று நாகசாகி நகருக்குச் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். இரண்டு மணி நேரம் பயணம் செய்து நாகசாகி விமானத்தளம் சென்றடைந்த திருத்தந்தையை, ஐந்து, அரசு மற்றும், தலத்திருஅவை அதிகாரிகள் வரவேற்றனர். இரு சிறார் திருத்தந்தைக்கு மலர்கள் கொடுத்தனர். நாகசாகி விமான நிலையத்திலிருந்து 35 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள, அந்நகர் அணுகுண்டால் தாக்கப்பட்ட இடத்திற்குச் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். இவ்விடம், நாகசாகி நகரின் அமைதியின் பூங்காவிற்குள் உள்ளது. போரின் தவறுகளை நினைவுகூரவும், அதேநேரம், அமைதிக்காக உழைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவுமென, 1955ம் ஆண்டில் இந்த அமைதியின் பூங்கா உருவாக்கப்பட்டது. இதற்கருகில், அச்சமயத்தில், அணு குண்டால் முற்றிலும் அழிக்கப்பட்ட Urakami கத்தோலிக்க பேராலயத்தின் அழிவுகள் உள்ளன. இப்பேராலயம், கிழக்கு ஆசியாவில் மிகப்பெரிய பேராலயமாக இருந்தது.

நாகசாகியில் அமைதியின் நினைவிடத்திற்குச் சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, நாகசாகி மேயர் Tomihisa Taue அவர்களும், ஆளுனரும், வரவேற்றனர். அந்த இடத்தில், அணுகுண்டால் பாதிக்கப்பட்ட இருவர், திருத்தந்தைக்கு மலர்கள் கொடுக்க, திருத்தந்தையும் அவற்றை அந்த இடத்தில் வைத்தார். திருத்தந்தை ஒரு மெழுகுதரியையும் ஏற்றி வைத்தார். அமைதியின் தூதரிடமிருந்து, அந்த மெழுகுதிரி ஏற்றப்படுவதாகக் கருதப்பட்டது. அந்த நினைவிடத்தில் சிறிதுநேரம் அமைதியாகச் செபித்த திருத்தந்தை, தனது செய்தியையும் வழங்கினார். இந்நிகழ்வின் இறுதியில், நாகசாகி அணு குண்டு வெடித்துச் சிதறியதன் அடையாளத்தைப் புகைப்படமாக வரைந்துள்ளவரின் துணைவியார் மற்றும், அவரது மகனையும் ஆசீர்வதித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இந்த அமைதியின் பூங்கா நினைவிடத்திற்கு, 120 செ.மீ. உயரமுடைய, வெள்ளியாலானத் தீபத் தூண் ஒன்றைப் பரிசாக அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இதன் அடிப்பாகத்தில் அமைதி (PAX) என இலத்தீனில் பொறிக்கப்பட்டுள்ளது.

அணு குண்டு தாக்குதல்

இரண்டாம் உலகப் போரின்போது, 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதி காலை 11 மணி 2 நிமிடங்களுக்கு, நாகசாகி நகரின் மீது, ஏறத்தாழ பத்தாயிரம் பவுண்டு எடையுள்ள 'Fat Man' எனப்படும் புளூட்டோனிய அணு குண்டை அமெரிக்க ஐக்கிய நாடு வீசியது. இதில் அந்நகரின் மூன்றில் ஒரு பகுதி அழிந்தது. அந்நேரத்தில் நாகசாகி நகரின் பேராலயத்தில் திருவழிபாட்டில் கலந்துகொண்டிருந்த இரு அருள்பணியாளர்கள், இருபது விசுவாசிகள் உட்பட ஏறத்தாழ ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் பேர், கொல்லப்பட்டனர் மற்றும், படுகாயமுற்றனர். பின்னர், இக்குண்டின் அணுக்கதிர்வீச்சின் தாக்கத்தால், மேலும் பலர் இறந்தனர். இந்த இடத்தில், பத்து மீட்டர் உயரமுடைய அமைதியின் சிலையும் உள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 November 2019, 14:24