தேடுதல்

Vatican News
மூவேளை செப உரை மூவேளை செப உரை  (AFP or licensors)

வெளிநாட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக திருத்தந்தை

அண்மை வன்முறைகளால் பாதிக்கப்பட்ட எத்தியோப்பிய மக்களுக்காக திருப்பயணிகளுடன் இணைந்து செபித்த திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

எத்தியோப்பியாவில், அண்மைய வன்முறைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில், திருப்பயணிகளுடன் இணைந்து செபித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

எத்தியோப்பியாவில் நிகழ்நதுள்ள வன்முறைகளால், பொதுமக்களும், எத்தியோப்பிய ஆர்த்தடாக்ஸ் Tewahado திருஅவை அங்கத்தினர்களும் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து, தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திருஅவையின் தலைவர்களுக்காகவும், விசுவாசிகளுக்காகவும், மக்களின் செபத்தை வேண்டுவதாகவும், அவர்களோடு தன் அருகாமையை அறிவிப்பதாகவும் கூறினார்.

இந்த கருத்திற்காக, 'அருள்நிறை மரியே' செபத்தை இணைந்து செபிப்போம் என கூறி, புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் குழுமியிருந்த விசுவாசிகளோடு செபித்தார் திருத்தந்தை.

எத்தியோப்பியாவில் முக்கிய அரசியல் நடவடிக்கையாளருக்கும், பாதுகாப்புப் படைகளுக்கும் இடையே எழுந்த பதட்ட நிலைகளால், அக்டோபர் மாதம் இடம்பெற்ற மோதல்களில் 700க்கும் மேற்ப்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், இத்தாலியின்  Apulia பகுதியிலுள்ள மாநகராட்சியும், San Severo மறைமாவட்டமும் இணைந்து வெளிநாட்டுத் தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆதரவாக எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு, தன் நன்றியை வெளியிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மறைமாவட்ட பங்குத்தளங்களில் அவர்களுக்கு தங்குமிடங்களை வழங்கவும், நகராட்சி அலுவலகங்களில், அவர்கள் தங்கள் பெயர்களை பதிவுசெய்யவும் உதவுவதன் வழியாக, அவர்களின் வாழ்க்கைத்தரம் உயர உதவமுடியும் என பாராட்டினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

வேலை செய்வதற்குரிய அனுமதி பத்திரங்கள் இன்றி இருப்பதால், சுரண்டப்படுவதற்கு வழிவகுக்கும் நிலைகள் தற்போது மாற்றப்பட்டு, அவர்கள் மாண்புடன் வாழ்வதற்குரிய வழி கிட்டுவதற்கு உழைத்த அனைத்து அதிகாரிகளுக்கும், தன் நன்றியையும் வெளியிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்

03 November 2019, 13:10