ஜப்பானில் திருத்தந்தை பிரான்சிஸ் ஜப்பானில் திருத்தந்தை பிரான்சிஸ் 

ஜப்பான் அரசு - திருத்தந்தை, ‘படிப்பினைகளின் பேரரசர்’

1981ம் ஆண்டில் ஜப்பானுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொண்ட, புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களின் பாதையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தற்போது ஜப்பானுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்

நவம்பர் 23, இச்சனிக்கிழமை உள்ளூர் நேரம் மாலை 6.30 மணியளவில் டோக்கியோ விமான நிலையத்திலிருந்து திருப்பீட தூதரகத்திற்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சென்றபோது, அவ்விடத்திற்கு முன்பாக, ஏறத்தாழ 200 விசுவாசிகள் கூடிநின்று திருத்தந்தையை ஆரவாரத்துடன் வரவேற்றனர். அவர்களின் வரவேற்பில் மகிழ்ந்து,  அந்த தூதரகத்தில் ஜப்பான் கத்தோலிக்க ஆயர்களைச் சந்தித்தார் திருத்தந்தை. ‘ஜப்பான் கத்தோலிக்க சமய அமைப்பு’ என்ற பெயரில், 1941ம் ஆண்டில், அந்நாட்டு கத்தோலிக்க ஆயர் பேரவை உருவாக்கப்பட்டது. தற்போது ஜப்பானில் மூன்று உயர்மறைமாவட்டங்களும், 13 மறைமாவட்டங்களும் உள்ளன. 2017ம் ஆண்டின் நிலவரப்படி, அந்நாட்டின் ஏறத்தாழ 12 கோடியே 60 இலட்சம் மக்களில், கத்தோலிக்கர் ஏறத்தாழ ஐந்து இலட்சத்து 30 ஆயிரம் பேர், அதாவது, மொத்த மக்கள் தொகையில் கத்தோலிக்கர் 0.42 விழுக்காடாகும். பெருமளவான மக்கள், புத்த மற்றும், ஷிண்டோயிச மதங்களைச் சார்ந்தவர்கள். பிரிந்த கிறிஸ்தவ சபையினரும் உள்ளனர். இத்தகைய சூழலில், நற்செய்திப் பணியாற்றும் ஜப்பான் ஆயர்கள் சந்திப்பில், முதலில், அந்நாட்டு ஆயர் பேரவைத் தலைவர் நாகசாகி பேராயர் Joseph Mitsuaki Takami அவர்கள் முதலில் திருத்தந்தையை வரவேற்று உரையாற்றினார். அதன்பின், திருத்தந்தை ஆயர்களுக்கு இஸ்பானிய மொழியில் இருபது நிமிடங்கள் உரையாற்றினார். அதற்குப்பின், ஆயர்களிடம், நீங்கள் கேள்வி கேளுங்கள், நான் பதில் சொல்கிறேன் என, ஆயர்களுடன் ஏறத்தாழ முப்பது நிமிடங்கள் உரையாடினார், திருத்தந்தை பிரான்சிஸ். நற்செய்திக்குச் சான்று பகருங்கள் மற்றும், உயிர்கள் அனைத்தையும் காப்பாற்றுங்கள் என, ஆயர்களிடம் திருத்தந்தை கூறினார். இந்நிகழ்வுக்குப் பின், டோக்கியோ திருப்பீட தூதரகத்தில் இரவு உணவருந்தி உறங்கச் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். ஜப்பானில் இத்துடன் முதல் நாள் நிகழ்வுகள் முடிவுற்றன. அனைத்து உயிர்களையும் பாதுகாத்தல், நற்செய்தி அறிவித்தல், ஆகிய இவையிரண்டும், ஒன்றிலிருந்து மற்றதைப் பிரிக்க முடியாதது, ஒன்று மற்றதற்கு எதிரானதல்ல. மாறாக, ஒன்று மற்றதற்கு விண்ணப்பிக்கின்றது என்றும், தன் டுவிட்டர் செய்தியில் இச்சனிக்கிழமையன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதியுள்ளார்.  

திருத்தந்தையர்க்கு, ஜப்பான் மொழி எழுத்துக்களில், அந்நாட்டு கத்தோலிக்கத் திருஅவை கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்திவந்த, திருத்தந்தை, ‘படிப்பினைகளின் பேரரசர்’ என்று பொருள்படும் எழுத்துக்களை, ஜப்பான் அரசு அங்கீகரித்துள்ளது. திருத்தந்தை ஜப்பானுக்குத் திருத்தூதுப்பயணம் மேற்கொள்ளவிருந்த சில நாள்களுக்குமுன், “திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் போதிப்பதற்கு சிலவற்றைக் கொண்டுள்ளார்” என்று, ஜப்பான் அரசு சொல்லி, இவ்வாறு திருத்தந்தையை ஏற்றுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 November 2019, 14:40