பேரரசர் Naruhito அவர்களுடன் கலந்துரையாடிய திருத்தந்தை பிரான்சிஸ் பேரரசர் Naruhito அவர்களுடன் கலந்துரையாடிய திருத்தந்தை பிரான்சிஸ் 

பேரரசர் Naruhito, இளையோர் சந்திப்பு

தொழில்நுட்பம் தவறாகப் பயன்படுத்தப்படுவதால், தனிமை, ஒதுக்கப்படல் போன்றவற்றால் பல இளையோர் துன்புறுகின்றனர், உண்மையான நண்பர்கள் இல்லாமலும் உள்ளனர்

மேரி தெரேசா: வத்திக்கான்

நவம்பர் 25, இத்திங்களன்று, ஜப்பானில் 2011ம் ஆண்டில் இடம்பெற்ற, நிலநடுக்கம், சுனாமி, Fukushima அணுமின் நிலையச் கசிவு ஆகிய மூன்று முக்கிய பேரிடர்களில் பாதிக்கப்பட்டவர்களைச் இச்சந்தித்தபின், டோக்கியோ நகரின் பேரரசர் மாளிகைக்குச் சென்று,  பேரரசர் Naruhito அவர்களை, ஏறத்தாழ முப்பது நிமிடங்கள் தனியே சந்தித்து கலந்துரையாடினார் திருத்தந்தை பிரான்சிஸ். மொசைக் வண்ண வேலைப்பாடுகள் நிறைந்த, “Titus வளைவு நினைவுச்சின்னத்தை” பேரரசருக்குப் பரிசுப்பொருளாக திருத்தந்தை வழங்கினார். தண்ணீரில் கரைத்து தயாரிக்கப்பட்ட இந்த கலைவண்ணம்,  இத்தாலிய கலைஞர் Filippo Anivitti (1876-1955) அவர்களின் கைவேலைப்பாடாகும். பேரரசர் Naruhito அவர்கள், 126வது பேரரசராக, இவ்வாண்டு அக்டோபர் 26ம் தேதி முடிசூட்டப்பட்டார். இந்நிகழ்வில் திருத்தந்தையின் பிரதிநிதி ஒருவரும் கலந்துகொண்டார். பேரரசர் Naruhito அவர்கள் பிரமுகர்களைச் சந்திக்கும்பொழுது, அவர்களை வாசல்வரை வந்து வழியனுப்புவது வழக்கமல்ல. ஆனால் அவர், திருத்தந்தையை வாசல்வரை வந்து வழியனுப்பியது, திருத்தந்தைமீது அவர் கொண்டிருக்கும் மதிப்பைக் காட்டுகின்றது என ஊடகங்கள் கூறின.  ஜப்பான் பேரரசரைச் சந்தித்தபின், டோக்கியோ அமலமரி பேராலயத்திற்குச் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். மரத்தால், கோதிக் கலையில், 1899ம் ஆண்டில் எழுப்பப்பட்ட இந்த ஆலயம், 1920ம் ஆண்டில் பேராலயமாக மாறியது. இரண்டாம் உலகப் போரில், 1945ம் ஆண்டில் குண்டுவெடிப்பால் இப்பேராலயம் அழிந்தது. மீண்டும், 1964ம் ஆண்டில் இப்புதிய பேராலயம் எழுப்பப்பட்டது. இங்கு, கத்தோலிக்க மற்றும், கத்தோலிக்கரல்லாத, ஏறத்தாழ 900 இளையோரைச் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அமலமரி பேராலயத்தில் இளையோர் சந்திப்பு

இச்சந்திப்பிற்கு வியட்நாம் இளையோர் தயாரிப்புக்களை கவனித்துள்ளனர். இந்நிகழ்வில், ஜப்பான் நாட்டு ஒரு கத்தோலிக்க, ஒரு புத்தமத இளையோரும், அந்நாட்டில் புலம்பெயர்ந்து வாழ்கின்ற பிலிப்பீன்ஸ் இளைஞரும், தங்களின் ஆழ்ந்த அச்சங்கள் மற்றும், ஏக்கங்களை, திருத்தந்தையிடம் பகிர்ந்துகொண்டு, அவரிடம் சில முக்கிய கேள்விகளையும் கேட்டனர். கத்தோலிக்க இளைஞரான Miki Kobayashi அவர்கள் பேசுகையில், போட்டிகள் நிறைந்த தற்போதைய நவீன அன்றாட வாழ்வில், கடவுள் எம்மோடு இருப்பதையும், அவரின் மகிமையை அனுபவிப்பதால் கிடைக்கும் மகிழ்வையும் உணரத் தவறுகின்றோம் என்று கூறினார். புத்தமத இளைஞரான Masako Kudo அவர்கள் கூறுகையில், உயர்நிலைப்பள்ளியில் தான் உடற்பயிற்சி ஆசிரியர் எனவும், பள்ளியில் மாணவர்கள், தாழ்வுமனம் அல்லது உயர்வுமனம் கொண்டவர்களாக உள்ளனர், தங்கள்மீது விருப்பமின்றி, தாழ்வான எண்ணம் கொண்டுள்ளனர், அதேநேரம், அடுத்தவரின் முயற்சிகளையும், சாதனைகளையும் ஏற்பதற்கு அவர்களால் முடியவில்லை, பிறரைவிட தாங்கள் உயர்ந்தவர்கள் மற்றும், பிறரால் அங்கீகரிக்கப்பட வேண்டுமென விரும்புகின்றனர் என்று கூறினார். பிலிப்பீன்ஸ் நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட Leonardo Cachuela அவர்கள் பேசுகையில், ஜப்பானில், குறிப்பாக, வல்லுனர்கள் மற்றும், மாணவர்கள் மத்தியில் இடம்பெறும் தற்கொலை மற்றும், பிறரால் கேலி செய்யப்படுவதால் ஏற்படும் துன்பங்கள் குறித்துப் பகிர்ந்துகொண்டார். தொழில்நுட்பம் தவறாகப் பயன்படுத்தப்படுவதால், தனிமை, ஒதுக்கப்படல் மற்றும், உண்மையான நண்பர்கள் இல்லாமல் பல இளையோர் உள்ளனர். திருத்தந்தையே, உலகெங்கும் பரவியுள்ள இந்தப் பாகுபாடு மற்றும், கிண்டல் பிரச்சனைகளுக்கு எவ்வாறு பதில் கூறுவது என்று தயவுகூர்ந்து சொல்லுங்கள் என்று என Leonardo அவர்கள் கூறினார். இந்த மூன்று இளையோரின் பகிர்வுகளுக்குச் செவிமடுத்த திருத்தந்தை, இப்பகிர்வுகளுக்கும், வருங்காலத்தின்மீது கொண்டிருக்கும் நம்பிக்கைக்கும் இளையோர்க்கு நன்றி கூறினார். ஜப்பானுக்கு நீங்கள் தேவைப்படுகின்றீர்கள், உலகுக்கு நீங்கள் தேவைப்படுகின்றீர்கள் என்று இளையோரிடம் கூறி, திருப்பீடத் தூதரகம் சென்று மதிய உணவருந்தி சிறிதுநேரம் ஓய்வும் எடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 November 2019, 15:25