தேடுதல்

Vatican News
 அருளாளர் Nicolas Kitbamrung திருத்தலத்தில் ஆசிய ஆயர்கள் சந்திப்பு  அருளாளர் Nicolas Kitbamrung திருத்தலத்தில் ஆசிய ஆயர்கள் சந்திப்பு   (Vatican Media)

பாங்காக்கில் ஆசிய ஆயர்கள் சந்திப்பு

FABC என்பது, தெற்கு, தென்கிழக்கு, கிழக்கு, மற்றும், மத்திய ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பாகும். ஆசிய ஆயர்களின் இந்த அரசு-சாரா அமைப்பு, 1970ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது

மேரி தெரேசா: வத்திக்கான்

பாங்காக் நகருக்கு 34 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள புனித பேதுரு பங்குத்தள ஆலயத்திலிருந்து, Nicolas Bunkerd Kitbamrung திருத்தலம் சென்று, தாய்லாந்து ஆயர்கள், மற்றும், FABC எனப்படும் ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பினரைச் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இவ்வெள்ளி உள்ளூர் நேரம் பகல் 11 மணியளவில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதலில், தாய்லாந்து ஆயர் பேரவைத் தலைவரும், பாங்காக் பேராயருமான, கர்தினால் Francis Xavier Kriengsak Kovithavanij அவர்கள், திருத்தந்தைக்கு வரவேற்புரையாற்றினார். உலகின் முக்கிய பாரம்பரிய மதங்களின் தாய்நிலமான ஆசியாவின் சிறுமந்தையாகிய நாங்கள், திருத்தந்தையே, தங்களின் உரையைக் கேட்பதற்குக் காத்திருக்கிறோம். “FABC 2020: ஆசியாவின் மக்களாக, ஒன்றிணைந்து பயணம் மேற்கொள்ளல்” என்ற தலைப்பில், 2020ம் ஆண்டில், FABC கூட்டமைப்பு, தனது ஐம்பதாவது ஆண்டு நிறைவை பாங்காக்கில் சிறப்பிக்கவுள்ளது. இக்கொண்டாட்டம், புதியவழி நற்செய்தி அறிவிப்பிற்கு வழியமைக்கும் என்று நம்புகிறோம். பல போர்கள், புலம்பெயர்வுகள் மற்றும் மனித வர்த்தக வடுவைக் கொண்டுள்ள இப்பகுதியில், தாய்லாந்து ஆயர்களும், அமைதி மற்றும் ஒப்புரவின் கைவினைஞர்களாக இருக்க விரும்புகிறோம். திருத்தந்தையே, தங்களின் ஊக்கமூட்டும் வழிகாட்டுதல் மற்றும், வார்த்தைகளுக்கு நன்றி என்று, கர்தினால் Kovithavanij அவர்கள் உரையாற்றினார். FABC ஆசிய ஆயர்களின் அரசு-சாரா அமைப்பு, தெற்கு, தென்கிழக்கு, கிழக்கு, மற்றும், மத்திய ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பாகும். 1970ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த கூட்டமைப்பு, திருப்பீடத்தின் அங்கீகாரம் பெற்றது. ஆசிய ஆயர்களுக்கு திருத்தந்தை உரையொன்றும் ஆற்றினார். நம் மறைப்பணியை ஊக்குவித்து நடத்துபவர் தூய ஆவியார் என்று ஆயர்களிடம் திருத்தந்தை கூறினார்.

இயேசு சபையினர் சந்திப்பு

பின், தாய்லாந்தில் தூதுரைப் பணியாற்றும் இயேசு சபையினரையும் திருத்தந்தை சந்தித்து கலந்துரையாடினார். பின்னர், பாங்காக் திருப்பீட தூதரகம் சென்று மதிய உணவருந்தி ஓய்வும் எடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ். மேலும், “தன் பணியில் முத்திரைப் பதித்து, வாழ்வின் சொல்லால் மாற்றம் அடைவதற்கு தயாராய் இருப்பதே, தனது மிகச்சிறந்த செய்தியாக உள்ளது என்பதை, ஒரு மறைப்பணி திருஅவை அறிந்துள்ளது” என்ற சொற்களையும், இவ்வெள்ளி காலையில், தன் டுவிட்டர் செய்தியில், ஹாஸ்டாக் (#ApostolicJourney) குடன் வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

22 November 2019, 14:31