திருத்தந்தை வழங்கிய மூவேளை செப உரை 171119 திருத்தந்தை வழங்கிய மூவேளை செப உரை 171119 

திருத்தந்தை வழங்கிய மூவேளை செப உரை 171119

நமக்கு இழைக்கப்படும் தீமைகளுக்கு, மன்னிப்பின் உதவியுடனும், பகைமைக்கு, அன்பின் உதவியோடும் பதிலுரைக்கவேண்டும், அதுவே, நாம் வழங்கும் மிகப்பெரும் சான்று – திருத்தந்தை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இஞ்ஞாயிறன்று வழங்கப்பட்ட நற்செய்தியில், எருசலேமின் அழிவுகுறித்து இயேசு கூறுவது, வரலாற்றின் முடிவை அல்ல, மாறாக, வரலாற்றின் நோக்கத்தை எடுத்துரைப்பதாக உள்ளது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் நண்பகல் மூவேளை செப உரையில் கூறினார்.

மூன்றாவது உலக வறியோர் நாள் திருப்பலியை, புனித பேதுரு பெருங்கோவிலில் சிறப்பித்தத் திருத்தந்தை, அதன் பின், புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான விசுவாசிகளுக்கு வழங்கிய மூவேளை செப உரையில், இஞ்ஞாயிறன்று வழங்கப்பட்ட நற்செய்தியை மையப்படுத்தி, கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

பேரழிவுகளைப் பற்றி, இன்றைய நற்செய்தியில் கூறும் இயேசு, அதே வேளையில், நம் தலையிலுள்ள முடிகளில் ஒன்று கூட விழாது என்று உறுதி கூறுவதையும் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, எத்தைகையத் துன்பத்திலும் வீழ்ந்துவிடாது, சான்று பகர்வதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பைத் தருகிறது என்று கூறினார்.

நமக்கு இழைக்கப்படும் தீமைகளுக்கு, மன்னிப்பின் உதவியுடனும், பகைமைக்கு, அன்பின் உதவியோடும் பதிலுரைக்கவேண்டும், அதுவே நாம் வழங்கும் மிகப்பெரும் சான்று என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

தான் இவ்வாரத்தில் தாய்லாந்து, மற்றும் ஜப்பான் ஆகிய இரு நாடுகளில் மேற்கொள்ளவிருக்கும் திருத்தூதுப் பயணத்திற்காக செபிக்குமாறும் அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இம்மூவேளை செப உரைக்குப்பின், வத்திக்கான் புனித திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கத்தில் குழுமியிருந்த ஏறத்தாழ 1,500 வறியோருடன் இணைந்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உணவருந்தினார். 150க்கும் மேற்பட்ட மேசைகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விருந்தில், 50 சுய விருப்பப் பணியாளர்கள் உணவுகளைப் பரிமாறினர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 November 2019, 12:30