தேடுதல்

Vatican News
புனிதர் அனைவரின் பெருவிழாவன்று  மூவேளை செப உரை புனிதர் அனைவரின் பெருவிழாவன்று மூவேளை செப உரை  (Vatican Media)

திருத்தந்தை - புனிதத்துவம், ஒரு கொடை, ஓர் அழைப்பு

எல்லாக் காலங்களிலும் வாழ்ந்த புனிதர்கள், ஒவ்வொரு நாள் வாழ்விலும் வெற்றி, தோல்விகளை அனுபவித்து, அவற்றிலிருந்து மீண்டு எழுவதற்கு ஆண்டவரில் வலிமையைக் கண்டவர்கள்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

நம் கண்களை விண்ணை நோக்கி உயர்த்தவும், இவ்வுலகின் எதார்த்தங்களை மறந்துவிடாமல், அதேநேரம், அவற்றை துணிச்சல் மற்றும், நம்பிக்கையுடன் எதிர்கொள்ளவும், புனிதர்களின் நினைவு நம்மை இட்டுச்செல்கின்றது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளியன்று கூறினார்.

புனிதர் அனைவரின் பெருவிழாவான நவம்பர் 01, இவ்வெள்ளி நண்பகலில், வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித வாழ்வு பற்றி உரையாற்றினார்.

நாம் எல்லாரும் புனிதர்களாக வாழ அழைக்கப்பட்டுள்ளோம் என்பதை, இன்று நாம் சிறப்பித்த புனிதர் அனைவரின் பெருவிழா நினைவுபடுத்துகின்றது என்று உரையைத் துவங்கிய திருத்தந்தை, எல்லாக் காலங்களிலும் வாழ்ந்த புனிதர்கள், வெறும் அடையாளங்களோ, அடையமுடியாதபடி தொலைதூரத்திலுள்ள மனிதர்களோ அல்ல, மாறாக, இம்மண்ணில் காலூன்றியவர்கள், ஒவ்வொரு நாள் வாழ்விலும் வெற்றி, தோல்விகளை அனுபவித்து, அவற்றிலிருந்து மீண்டு எழுவதற்கு ஆண்டவரில் வலிமையைக் கண்டவர்கள் என்று கூறினார்.

புனிதத்துவம்

எனவே, புனிதத்துவம் என்பது, ஒருவர் தனது சொந்த வல்லமையால் அடைய முடியாதது, மாறாக, அது, கடவுளின் அருள் மற்றும், அதற்கு நாம் சுதந்திரமாகப் பதிலளிப்பதன் கனி என்பதையும், இதனால், புனிதத்துவம் என்பது, ஒரு கொடை மற்றும், ஓர் அழைப்பு என்பதையும், நம்மால் புரிந்துகொள்ள முடிகின்றது என்று, திருத்தந்தை கூறினார்.

கடவுளின் அருளாக, அவரின் கொடையாக, நம்மால் வாங்க முடியாத ஒன்றாக உள்ள புனிதத்துவத்தை, நாம் திருமுழுக்குப் பெற்றதிலிருந்து நம்மில் வாழ்கின்ற தூய ஆவியார் வழியாக, விண்ணக வாழ்வில் பங்குகொண்டு, அதை வரவேற்கிறோம் என்றும், திருத்தந்தை கூறினார்.

கிளையானது திராட்சைச் செடியோடு இணைந்திருப்பதுபோல, நாமும் கிறிஸ்துவுக்குள் பிணைக்கப்பட்டிருக்கிறோம் என்ற உணர்வில் நாம் மேலும் மேலும் பக்குவமடைய வேண்டும், அதனால், நாம் கடவுளின் பிள்ளைகளாக, அவரில், அவரோடு வாழ இயலும் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனிதத்துவம் என்பது, இவ்வுலக வாழ்வுப் பயணத்திலேயே கடவுளோடு முழுவதும் ஒன்றித்து வாழ்வதாகும் எனவும் உரையாற்றினார். ஆயினும், இது, கிறிஸ்துவின் சீடர்கள் எல்லாருக்கும் விடுக்கப்படும் பொதுவான அழைப்பாகும், ஒவ்வொரு கிறிஸ்தவரும், தனது இறுதி இலக்கை நோக்கிய பயணத்தில், விசுவாசத்தில் பின்செல்ல வேண்டிய நிறைவை நோக்கிய பாதையாகும் என்றும் திருத்தந்தை கூறினார்.

இன்று நாம் சிறப்பிக்கும் புனிதர்களில் பலர், நம் அண்டை வீட்டில், அல்லது, நமக்கு மிக நெருக்கமாக வாழ்ந்தவர்கள், புனித வாழ்வுக்குச் சாட்சிகளாகத் திகழ்ந்தவர்கள் மற்றும், கடவுளின் பிரசன்னத்தைப் பிரதிபலித்தவர்கள் என்று மூவேளை செப உரையில் கூறியத் திருத்தந்தை, இவர்களை நோக்குகையில், அவர்களின் வாழ்வைப் பின்பற்ற ஊக்குவிக்கப்படுகிறோம் என்று கூறினார்.

01 November 2019, 14:41