தேடுதல்

Vatican News
அல்பேனியாவில் நிலநடுக்கம் அல்பேனியாவில் நிலநடுக்கம்  (ANSA)

அல்பேனியாவுக்கு திருத்தந்தையின் அனுதாபத் தந்தி

அல்பேனியா நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர், மற்றும் அந்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டோரை நினைவுகூர்ந்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுதாபத் தந்தியொன்றை அனுப்பியுள்ளார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அல்பேனியா நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர், மற்றும் அந்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டோரை நினைவுகூர்ந்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுதாபத் தந்தியொன்றை அனுப்பியுள்ளார்.

அல்பேனியா குடியரசின் அரசுத்தலைவர், Ilir Meta அவர்களுக்கு, திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், இத்தந்தியை, திருத்தந்தையின் பெயரால் அனுப்பியுள்ளார்.

அல்பேனிய குடியரசின் அரசுத்தலைவர், மற்றும் அந்நாட்டில் நிலநடுக்கத்தில் இறந்தோர் அனைவரின் குடும்பங்களுக்கும் திருத்தந்தை தன் ஆழ்ந்த வருத்தங்களைத் தெரிவிப்பதாக இத்தந்தியில் கூறப்பட்டுள்ளது.

இறந்தோர் அனைவரும் இறைவனின் இரக்கத்தை அடையும்படியாகவும், நிலநடுக்கத்தால் காயமடைந்தோர் அனைவருக்காகவும் திருத்தந்தை தன் செபங்களை தெரிவித்துள்ளார் என்றும், இந்த பேரிடர் வேளையில் உழைத்துவரும் அனைவரையும் இறைவன் ஆசீர்வதிக்கவேண்டுமென்றும் இத்தந்தியில் குறிப்பிட்டுள்ளது.

நவம்பர் 26, இச்செவ்வாய் அதிகாலையில் அல்பேனியாவின் தலைநகர் Tiranaவுக்கு அருகேயுள்ள ஓரிடத்தில் ஏற்பட்ட 6.4 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தால், 23 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 600க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்றும் ஊடகங்கள் கூறுகின்றன.

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் 32வது திருத்தூதுப் பயணத்தை நிறைவு செய்து, நவம்பர் 26, இச்செவ்வாய் மாலை 5 மணியளவில் உரோம் நகர் ஃபூமிச்சினோ விமான நிலையத்தை அடைந்தார் என்றும், அங்கிருந்து, புனித மேரி மேஜர் பெருங்கோவிலுக்குச் சென்று, அன்னை மரியாவுக்கு வணக்கம் செலுத்தினார் என்றும் வத்திக்கான் செய்தித்துறை அறிவித்துள்ளது.

27 November 2019, 15:07