தேடுதல்

Vatican News
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் எகிப்தின் இஸ்லாம் பெரிய தலைமைக் குரு  Ahmed AI-Tayeb அவர்கள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் எகிப்தின் இஸ்லாம் பெரிய தலைமைக் குரு Ahmed AI-Tayeb அவர்கள்   (AFP or licensors)

திருத்தந்தை பிரான்சிஸ், எகிப்தின் Ahmed AI-Tayeb சந்திப்பு

நோயாளர், ஏழைகள் மற்றும் தேவையில் இருப்பவர்களுக்கு பணியாற்றுவது, கிறிஸ்தவர்கள் மற்றும், முஸ்லிம்களின் முக்கிய பணியாகும்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நவம்பர் 15, இவ்வெள்ளி காலையில், திருப்பீடத்தில், எகிப்தின் இஸ்லாம் பெரிய தலைமைக் குரு  Ahmed AI-Tayeb அவர்கள் தலைமையிலான குழுவினரைச் சந்தித்து கலந்துரையாடினார்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் உதவி பிரதமரும், உள்துறை அமைச்சருமான Saif bin Zayed Al Nahyan, எகிப்து குடியரசின் திருப்பீடத் தூதர் Mahmoud Samy, Al-Azhar பல்கலைக்கழகத்தின் பிரதிநிதிகள் போன்றோர், Ahmed AI-Tayeb அவர்கள் தலைமையில் திருத்தந்தையைச் சந்தித்தனர்.

இச்சந்திப்பின்போது, திருப்பீட பல்சமய உரையாடல் அவையின் தலைவர் கர்தினால் Miguel Angel Ayuso Guixot அவர்களும், திருத்தந்தையின் செயலர் அருள்பணி Yoannis Lahzi Gaid அவர்களும் இருந்தனர் என்று, திருப்பீட தகவல் தொடர்பகம் அறிவித்துள்ளது.

இச்சந்திப்பில், டிஜிட்டல் உலகில் சிறாரைப் பாதுகாத்தல் என்ற தலைப்பில் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன என்றும், மனித உடன்பிறந்தநிலை ஏட்டை நடைமுறைப்படுத்துவது  குறித்த குழுவில் புதிய உறுப்பினர்கள், திருத்தந்தையிடம் அறிமுகப்படுத்தப்பட்டனர் என்றும், திருப்பீட தகவல் தொடர்பகம் மேலும் அறிவித்துள்ளது

மனித உடன்பிறந்தநிலை செயல்குழு

மேலும், "கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும்: மனித சமுதாயத்திற்கு ஒன்றிணைந்து பணியாற்றுதல்" என்ற தலைப்பில் நடைபெற்ற 11வது கலந்துரையாடலின் இறுதி அறிக்கை, இவ்வெள்ளியன்று வெளியிடப்பட்டது.

திருப்பீட பல்சமய உரையாடல் அவை, இஸ்லாமிய கலாச்சாரத்தின் பல்சமய மற்றும் பலகலாச்சார மையம் (CIID), தெஹ்ரான், இஸ்லாம் கலாச்சாரம் மற்றும், உறவுகள் நிறுவனம் (ICRO) ஆகிய மூன்றும் இணைந்து, வத்திக்கானில் நவம்பர் 11,12 ஆகிய தேதிகளில் இக்கலந்துரையாடலை நடத்தின.

மற்றவர்க்கு, குறிப்பாக, நோயாளர், ஏழைகள் மற்றும் தேவையில் இருப்பவர்களுக்கு பணியாற்றுவது, கிறிஸ்தவர்கள் மற்றும், முஸ்லிம்களின் முக்கிய பணியாகும், இதன் வழியாக, அனைத்து மனிதரிடமும் கடவுள் கொண்டிருக்கும் அன்பிற்குச் சான்றாக விளங்க முடியும் என்று, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

மனித சமுதாயத்திற்குப் பணியாற்றுவது என்பது, உலகிலுள்ள எல்லாரையும் பாகுபாடின்றி நடத்துவதாகும் எனவும், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் மற்றும், நன்மனம் கொண்ட அனைவரும், எல்லாக் காலத்திலும், எல்லாருக்கும் அடிப்படை மனித உரிமைகளை ஊக்குவிக்க அழைக்கப்பட்டுள்ளனர் எனவும் கூறப்பட்டுள்ளது. 

காலநிலை மாற்றம், மற்றும், சூழலியல் பிரச்சனைகளைக் கருத்தில்கொண்டு, அனைவரும் படைப்பைப் பாதுகாக்க அழைக்கப்பட்டுள்ளனர் எனவும், இளையோரை உண்மையான மத நம்பிக்கையாளர்களாகவும், பொறுப்புள்ள குடிமகன்களாகவும் உருவாக்க வேண்டுமெனவும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், அடுத்த கூட்டம், 2021ம் ஆண்டில் உரோம் நகரில் நடைபெறுவதற்கு, அக்கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

15 November 2019, 14:56