தேடுதல்

Vatican News
பாங்காக்கில், பல்சமயத் தலைவர்களுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் உரை வழங்குதல் பாங்காக்கில், பல்சமயத் தலைவர்களுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் உரை வழங்குதல் 

பல்சமயத் தலைவர்களுக்கு திருத்தந்தை வழங்கிய உரை

ஏழைகள், ஒடுக்கப்பட்டோர், பூர்விக இனத்தவர், மதச் சிறுபான்மையினர் ஆகியோரின் குரல்களுக்கு செவிமடுக்கும் மதங்கள், ஒன்றிணைந்து உழைக்கவேண்டிய தேவை உள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

எனக்களித்த வரவேற்பிற்கு உங்களனைவருக்கும் நன்றி கூறுகின்றேன். 122 ஆண்டுகளுக்கு முன்னர் 1897ம் ஆண்டில் உங்கள் மன்னர் Chulalongkorn  அவர்கள், திருத்தந்தை 13ம் லியோ அவர்களை வத்திக்கானில் சந்தித்தார். கிறிஸ்தவரல்லாத ஓர் அரசுத்தலைவர் வத்திக்கானில் வரவேற்கப்பட்டது அதுவே முதன்முறையாகும். அடிமை முறையை ஒழித்தல் உட்பட, பல்வேறு நற்செயல்களை தன் ஆட்சியின்போது ஆற்றிய இம்மன்னரின் இந்த சந்திப்பு நிகழ்வு, கலந்துரையாடல் மற்றும் ஒருவருக்கொருவர் புரிந்துகொள்வதன் பாதையை நாம் தேர்ந்தெடுக்கவேண்டும் என்பதை, காட்டி நிற்கிறது. உடன்பிறந்த ஒருமைப்பாட்டுடன் நாம் பணியாற்றும்போது, அடிமைத்தனத்தின் இக்கால பல்வேறு முகங்களையும், மனித வியாபாரத்தையும் முடிவுக்குக் கொணரமுடியும்.

மதங்களிடையே ஒருவர் ஒருவருக்கு மதிப்பு, மரியாதை, மற்றும், ஒத்துழைப்பு என்பது இன்றைய மனித குலத்திற்கு அதிகம் அதிகமாக தேவைப்படுகிறது. தொழில் நுட்ப அதிவிரைவு வளர்ச்சி, உள்நாட்டு மோதல்கள், புலம்பெயர்தல், பஞ்சம், போர் என பல்வேறு சவால்களை எதிர்நோக்கும் இன்றைய உலகில், மற்றவர்களைப் பற்றிய கவலையின்றி, நல்லதொரு வருங்காலத்தை அமைக்கமுடியாது என்பதை, மனிதகுல குடும்பம் அறிந்தே உள்ளது.

வருங்காலத்தை கட்டியமைக்க...

வருங்காலத்தை கட்டியமைக்கும் பாதையில் மதங்களின் பங்களிப்பும் இன்றியமையாதது. நீதிக்கும், அமைதிக்கும், மதங்கள் பணியாற்றுவதன் வழியாக, சிறந்ததொரு வருங்காலத்திற்குரிய இளம் தலைமுறையினரின் உரிமையை நாம் உறுதி செய்யலாம். .மனித மாண்பை பாதுகாக்கவும், பொது இல்லமாகிய இவ்வுலகின் இயற்கை அழகையும் வளத்தையும் காத்திடவும், இக்காலம் நமக்கு அழைப்பு விடுக்கிறது. அச்சமின்றி ஒருவரோடு ஒருவர் கலந்துரையாடி, நமக்குள் இருக்கும் ஆன்மீக பாரம்பரியங்களைப் பகிர்ந்துகொள்வதன் வழியாக, இவ்வுலக வளர்ச்சிப் பாதையில் நாம் பங்களிக்க முடியும். நம்மிடையே வாழும் ஏழைகள், ஒடுக்கப்பட்டோர், பூர்விக இனத்தவர், மத சிறுபான்மையினர் ஆகியோரின் குரல்களுக்கு செவிமடுக்கும் நாம், ஒன்றிணைந்து உழைக்க வேண்டிய தேவை உள்ளது. மனித மாண்பை உயர்த்திப் பிடித்தல், மனச்சான்று மற்றும் மத விடுதலையை மதித்தல் என்ற பாதையை, நாம் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

தாய்லாந்தின் பாரம்பரியத்தில் முதியோர்

இந்நாட்டில் முதியோர் மதிக்கப்படுவது குறித்தும், அவர்களுக்கு சமூகத்தில் கௌரவமான இடம் வழங்கப்பட்டுள்ளது குறித்தும் மகிழ்கிறேன். இதன் வழியாக, நீங்கள் உங்கள் பாரம்பரியத்தை கட்டிக்காத்து, அதை, உங்கள் இளைய தலைமுறையினருக்கு வழங்குகிறீர்கள். இளையோர் தங்கள் கலாச்சார மரபுரிமைச் சொத்துக்களை கண்டுகொள்ள உதவுங்கள். வருங்காலத்திற்குரிய பாதையை கட்டியெழுப்புவதில் கல்வி நிறுவனங்களின் ஈடுபாடு இன்றியமையாதது. சமுதாயத்தின் பொதுநலனை ஊக்குவிப்பதில், இளையோர் வழியாக, ஆசிரியர்கள் ஆற்றிவரும் பணிக்கு, என் பாராட்டுக்களை வெளியிடுகிறேன். நாம் அனைவரும் மனித குடும்பத்தின் அங்கத்தினர்கள். ஒன்றிப்பு, ஒருவர் ஒருவருக்கு மதிப்பு, இணக்க வாழ்வு ஆகியவை நோக்கி இட்டுச்செல்லும் ஒரு கலாசாரத்தைக் கட்டியெழுப்புவதில், நாம் ஒவ்வொருவரும், நம் பங்களிப்பை வழங்கவேண்டும் என அழைப்புப் பெற்றுள்ளோம்.

தாய்லாந்து நாட்டின் வளத்திற்காகவும், அமைதிக்காவும், நீங்கள் எடுத்துவரும் முயற்சிகளுக்கு, செபத்துடன் கூடிய என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் மீதும், உங்கள் குடும்பங்கள் மீதும், இறை ஆசீரை இறைஞ்சுகிறேன். எனக்காகச் செபியுங்கள்.

22 November 2019, 14:36