உணவு மற்றும் வேளாண்மை நிறுவனமான FAO தலைமையகத்தில் திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனமான FAO தலைமையகத்தில் திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் 

ஓசோன் மண்டலத்தைக் காப்பது பற்றி திருத்தந்தை

ஓசோன் மண்டலத்தை பாதிக்கும் அம்சங்களைக் குறித்து பேசும்போது, நம் பொதுவான இல்லமான பூமிக்கோளத்தைக் காக்கும் வழிமுறைகளையும் விவாதிப்பது பயனளிக்கும் – திருத்தந்தையின் செய்தி

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

நம்மைச் சுற்றியுள்ள ஓசோன் மண்டலத்தைக் காப்பதற்கு, ஐ.நா. அவை மேற்கொண்ட முயற்சி, 1985ம் ஆண்டு வியென்னா நகரில் ஒரு பன்னாட்டு ஒப்பந்தமாக வடிவெடுத்தது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஒரு பன்னாட்டு கருத்தரங்கிற்கு அனுப்பியுள்ள செய்தியில் கூறியுள்ளார்.

ஓசோன் மண்டலத்தை சிதைக்கும் பொருள்கள் என்ற தலைப்பில், நவம்பர் 4ம் தேதி முதல் 8ம் தேதி முடிய நடைபெறும் ஒரு பன்னாட்டு கருத்தரங்கிற்கு திருத்தந்தை அனுப்பியுள்ள இச்செய்தியை, இக்கூட்டத்தில் கலந்துகொள்ளும் திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், நவம்பர் 7, இவ்வியாழனன்று வாசித்தார்.

உணவு மற்றும் வேளாண்மை நிறுவனமான FAO தலைமையகத்தில் நடைபெறும் இக்கருத்தரங்கிற்கு திருத்தந்தை அனுப்பியுள்ள இச்செய்தியில், சுற்றுச்சூழல் பாதுகாப்பில், அறிவியலாளர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பொருளாதார அறிஞர்கள், என பலரும் ஈடுபட்டிருப்பது குறித்து தன் மகிழ்வை வெளியிட்டுள்ளார்.

சுற்றுச்சூழலைக் காப்பதற்கு உருவாகியுள்ள இந்தக் கூட்டுறவு முயற்சி, மனித சமுதாயத்தில் கலாச்சார மாற்றத்தையும் கொணரவேண்டும் என்று கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த மாற்றங்கள், இன்றைய தலைமுறையினரை மட்டுமல்லாமல், வருங்கால தலைமுறையினரையும் பாதிக்கும் என்று கூறியுள்ளார்.

நாம் உருவாக்க வேண்டிய கலாச்சார மாற்றங்கள், வெறும் தொழில்நுட்பத்தை மட்டும் சார்ந்ததாக இருக்கக்கூடாது என்பதை, இச்செய்தியில் வலியுறுத்தும் திருத்தந்தை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது பல சமுதாயக் கூறுகள் பிணைக்கப்பட்ட ஒரு வலை என்று குறிப்பிட்டுள்ளார்.

ஓசோன் மண்டலத்தை பாதிக்கும் அம்சங்களைக் குறித்து பேசும்போது, நம் பொதுவான இல்லமான பூமிக்கோளத்தைக் காக்கும் வழிமுறைகளையும் விவாதிப்பது பயனளிக்கும் என்றும், அத்தகைய முயற்சிக்கு தன் முழு வாழ்த்துக்களை வழங்குவதாகவும், திருத்தந்தை, தன் செய்தியின் இறுதியில் கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 November 2019, 14:55