ஏழைகளுடன் உணவுண்ணும் திருத்தந்தை பிரான்சிஸ் ஏழைகளுடன் உணவுண்ணும் திருத்தந்தை பிரான்சிஸ் 

உணவு வீணாவதைத் தடுப்பது, ஒவ்வொருவரின் கடமை

போதுமான அளவு ஆரோக்கியமான உணவு இன்றி மக்கள் ஒருபக்கம் துன்புறும் வேளையில், மறுபுறமோ, உணவு வீணாக்கப்படுவது, மனிதகுல முயற்சிகளுக்கு இடையூறாக உள்ளது - திருத்தந்தை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

உணவுப்பொருள்கள் வீணாக்கப்படுவதை தடுக்கும் நோக்கத்தில் சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் (World Food Programme) WFP எனும் உலக உணவு திட்ட நிறுவனத்திற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பாராட்டுச் செய்தியொன்றை அனுப்பியுள்ளார்.

நவம்பர் 18, இத்திங்களன்று, WFP நிறுவனம் நடத்திய கூட்டத்திற்கு தன் செய்தியை அனுப்பியுள்ள திருத்தந்தை, உலகில் ஏழ்மையை நீக்கும் வழிகள் குறித்து ஆய்வு செய்யும் இக்கூட்டத்தில், உணவு வீணாக்கப்படுவதைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் விவாதிக்கவிருப்பது, வரவேற்கப்படவேண்டிய முயற்சி என்று கூறியுள்ளார்.

போதுமான அளவு ஆரோக்கியமான உணவு இன்றி மக்கள் ஒருபக்கம் துன்புறும் வேளையில், மறுபுறமோ, உணவு வீணாக்கப்படுவது, மனிதகுல உணவுத் தேவைகளை நிறைவேற்றத் தேவையான முயற்சிகளுக்கு இடையூறாக உள்ளது என்று திருத்தந்தை தன் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரச்சனைகள் குறித்த மேலோட்டமான பார்வை, அக்கறையின்மை, சுயநலம் போன்ற போக்குகளாலேயே உணவை வீணாக்கும் கலாச்சாரம் பிறக்கிறது என்ற கவலையையும், தன் செய்தியில் வெளியிட்டுள்ளத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உணவு வீணாவதைத் தடுத்து நிறுத்துவது, நிறுவனங்களின் பணி மட்டுமல்ல, மாறாக, ஒவ்வொருவரின் கடமையும் ஆகும் என்று வலியுறுத்தியுள்ளார்.

சத்துள்ள, நலமான உணவைப் பெறுவதற்கு, ஒவ்வொரு மனிதருக்கும் உரிமை உள்ளது என்பதை மனதில் கொண்டு, உணவு வீணாக்கப்படுவதை தடுத்து நிறுத்துவதன் வழியே, மனிதகுலத்தின் முன்னேற்றத்திற்கு உதவவேண்டும் என்று, திருத்தந்தை, தன் செய்தியில் விண்ணப்பித்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 November 2019, 16:06