தேடுதல்

திருத்தந்தை, லித்துவேனிய அரசுத்தலைவர் Gitanas  Nauséda சந்திப்பு திருத்தந்தை, லித்துவேனிய அரசுத்தலைவர் Gitanas Nauséda சந்திப்பு 

திருத்தந்தை, லித்துவேனிய அரசுத்தலைவர் Nauséda சந்திப்பு

பால்டிக் நாடுகளில் ஒன்றான லித்துவேனியாவில், 2011ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, ஏறத்தாழ 77 விழுக்காட்டினர் உரோமன் கத்தோலிக்கர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, லித்துவேனிய அரசுத்தலைவர் Gitanas Nauséda அவர்கள், நவம்பர் 08, இவ்வெள்ளி காலையில், திருப்பீடத்தில் தனியே சந்தித்து கலந்துரையாடினார்.

இச்சந்திப்பிற்குப்பின், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களையும், பன்னாட்டு உறவுகள் திருப்பீட அவையின் செயலர், பேராயர் ரிச்சர்ட் பால் காலகர் அவர்களையும் சந்தித்து உரையாடினார், லித்துவேனிய அரசுத்தலைவர் Nauséda.

லித்துவேனிய குடியரசுக்கும், திருப்பீடத்திற்கும் இடையே நிலவிவரும் நல்லுறவுகள், அந்நாட்டின் துன்ப வரலாற்றிலும், சவால்கள் நிறைந்த தற்போதைய சமுதாய-பொருளாதாரச் சூழல்களிலும் கத்தோலிக்கத் திருஅவை ஆற்றிவரும் பணிகள், குடும்ப முன்னேற்றம், சமுதாய நீதி, அந்நியரை வரவேற்றல் போன்ற தலைப்புகளில், இத்தலைவர்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர். 

மேலும், தேசிய மற்றும், பன்னாட்டு விவகாரங்கள், உக்ரைனில் இடம்பெறும் போர், ஐரோப்பா தற்போது எதிர்கொள்ளும் சவால்களைச் சந்திக்க, ஐரோப்பிய நாடுகள் மத்தியில் நிலவவேண்டிய ஒத்துழைப்பு போன்ற விவகாரங்களும், இச்சந்திப்புக்களில் இடம்பெற்றன என்று, திருப்பீட தகவல் தொடர்பகம் அறிவித்தது.

டுவிட்டர்

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நவம்பர் 08, இவ்வெள்ளியன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், “விசுவாசம், ஒரு பயணத்திற்கும், வெளியே சென்று செயலாற்றுவதற்கும் அழைப்பு விடுக்கிறது. இந்த வாழ்வுப் பயணத்தில் புனிதப்படுத்தும் செயல் இடம்பெறுகின்றது, இந்தப் பயணம், முன்னோக்கி இட்டுச் செல்வதால், இது மேல்நோக்கியதாகும்” என்ற சொற்கள் பதிவாகியிருந்தன

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 November 2019, 14:55