விமானத்தில் பத்திரிகையாளர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் விமானத்தில் பத்திரிகையாளர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் 

ஜப்பான் விமானப் பயணத்தில் திருத்தந்தையின் நேர்காணல்

ஆயுதங்களைப் பயன்படுத்துவது பெரும் குற்றம் என்பதைப்போலவே, அணு ஆயுதங்களை வைத்திருப்பதும் பெரும் குற்றம் என்ற கருத்தை, கத்தோலிக்கத் திருஅவையின் மறைக்கல்வியில் இணைக்கவேண்டும் – திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

நவம்பர் 26 இச்செவ்வாயன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவிலிருந்து, இத்தாலியின் தலைநகர் உரோம் நகருக்கு விமானப் பயணம் மேற்கொண்ட வேளையில், தன் வழக்கத்தின்படி, விமானத்தில் பயணம் செய்த பத்திரிக்கையாளர்களுடன் ஒரு நேர்காணலை மேற்கொண்டார்.

அணு ஆயுதங்களை வைத்திருப்பதும், பயன்படுத்துவதும், நிதிமோசடி குறித்து வத்திக்கானில் மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணைகள், முற்றிலும் வேறுபட்ட நிலையிலுள்ள இரு வேறு நாடுகளில் ஏற்பட்ட அனுபவங்கள் என்று, பல்வேறு கருத்துக்கள் இந்த நேர்காணலில் இடம்பெற்றன.

தாய்லாந்து, ஜப்பான் – வேறுபட்ட இரு நாடுகள்

பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம், சமுதாயம் என்ற பல நிலைகளில் பெரும் வேறுபாடுகள் கொண்டிருந்த தாய்லாந்து, மற்றும் ஜப்பான் ஆகிய இரு நாடுகளையும் குறித்து கருத்துக்களை வெளியிடுவது, செய்தியாளர்களின் மிகப்பெரும் சவால் என்பதை தன் நேர்காணலின் துவக்கத்தில் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தகையச் சூழலில், செய்தியாளர்கள் ஆற்றிய பணியை பாராட்டுவதாகத் தெரிவித்தார்.

நாகசாகி, ஹிரோஷிமா நகரங்களில் திருத்தந்தைக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்தும், மேற்கத்திய திருஅவையும், சமுதாயமும் கிழக்கத்திய திருஅவையிடமிருந்தும், சமுதாயத்திடமிருந்தும் கற்றுக்கொள்ள வேண்டியவை ஏதேனும் உள்ளனவா என்பது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.

கிழக்கிலிருந்து ஒளியும், மேற்கிலிருந்து ஆடம்பரமும்...

கிழக்கிலிருந்து மேற்கு கற்றுக்கொள்ளக்கூடியதைக் குறித்து முதலில் பேசிய திருத்தந்தை, lux ex Oriente, ex Occidente luxus என்ற கூற்றைப் பயன்படுத்தினார். அதன் பொருள், கிழக்கிலிருந்து ஒளியும், மேற்கிலிருந்து ஆடம்பரமும் வருகின்றன என்ற விளக்கத்தையும் வழங்கினார், திருத்தந்தை.

நாகசாகி மற்றும் ஹிரோஷிமா நகரங்களில் தான் பெற்ற அனுபவங்கள் மிக ஆழமானவை என்பதைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது பெரும் குற்றம் என்பதைப்போலவே, அவ்வாயுதங்களை வைத்திருப்பதும் பெரும் குற்றம் என்று தான் அந்நகரங்களில் கூறியதை நினைவுபடுத்தினார்.

அத்துடன், அணு ஆயுதங்களை வைத்திருப்பது பெரும் குற்றம் என்ற கருத்தை, கத்தோலிக்கத் திருஅவையின் மறைக்கல்வியில் இணைக்கவேண்டும் என்று வலியுறுத்திக் கூறியத் திருத்தந்தை, இத்தகைய ஆயுதங்களை வைத்திருக்கும் ஓர் அரசுத்தலைவர், தன் மதியற்ற நிலையால், அதனைப் பயன்படுத்தும்போது, மனிதகுலமே அழிந்துவிடும் ஆபத்து உள்ளது என்று எடுத்துரைத்தார்.

ஃபுகுஷிமா நகரம், முப்பெரும் இடர்களைச் சந்தித்த நிகழ்வைக் குறித்து பேசிய ஒரு செய்தியாளர், அணுசக்தி நிலையங்களை ஜப்பான் மூடவேண்டுமா என்ற கேள்வியை எழுப்பியபோது, திருத்தந்தை, அணுசக்தியால், இயற்கைக்கும் மனிதர்களுக்கும் இதுவரை உருவாகியுள்ள ஆபத்துக்களைக் குறித்துப் பேசினார்.

அணுசக்தி பயன்பாடு மட்டுமல்ல, மாறாக, பூச்சிக்கொல்லி மருந்துகள், மரபணு மாற்றம் செய்யப்பட்ட தாவரம், மற்றும் விலங்கு ஆகியவற்றால் விளையும் ஆபத்துக்களையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எச்சரிக்கை விடுத்தார்.

தாய்லாந்திலிருந்து, ஜப்பான் சென்ற வழியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஹாங்காங் நிர்வாகி,  Carrie Lam அவர்களுக்குத் தந்திச் செய்தி அனுப்பியதைக் குறிப்பிட்ட ஒரு பத்திரிகையாளர், அங்கு நிலவும் போராட்டங்களைக் குறித்து, திருத்தந்தையின் கருத்து என்ன என்ற கேள்வி எழுப்பினார்.

இக்கேள்விக்குப் பதில் அளித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருத்தந்தையர் மேற்கொள்ளும் விமானப் பயணங்களில், அந்த விமானம் பறந்துசெல்லும் ஒவ்வொரு நாட்டின் பொறுப்பாளருக்கும் வாழ்த்து அனுப்புவது, அப்பகுதியைக் கடந்து செல்ல விடுக்கப்படும் விண்ணப்பம் என்று குறிப்பிட்டார்.

ஹாங்காங் பகுதியில் நடைபெறும் போராட்டத்தைக் குறித்த கேள்விக்கு விடையளித்த திருத்தந்தை, அங்கு மட்டுமல்ல, சிலி, பிரான்ஸ், இஸ்பெயின், நிக்கராகுவா என்று, உலகின் பல நாடுகளில் நிகழ்ந்துவரும் போராட்டங்கள், ஊர்வலங்கள் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி, இந்தப் போராட்டங்கள் அனைத்தும், உரையாடல் வழியே நல்ல தீர்வு பெறவேண்டும் என்பது ஒன்றே திருப்பீடத்தின் நிலைப்பாடு என்பதைத் தெளிவாக்கினார்.

ஹாங்காங் மற்றும் சீனாவுக்கு இடையே, மனம் திறந்த உரையாடல் இடம்பெறுவதை தான் அதிகம் விரும்புவதாகக் கூறியத் திருத்தந்தை, தான் சீனா மீது அதிக ஆர்வம் கொண்டிருப்பதாகவும், பெய்ஜிங் செல்ல விரும்புவதாகவும் தெரிவித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 November 2019, 15:14