நாகசாகி திருப்பலியில் திருத்தந்தை மறையுரை வழங்கியபோது... நாகசாகி திருப்பலியில் திருத்தந்தை மறையுரை வழங்கியபோது... 

நாகசாகி திருப்பலியில் திருத்தந்தை வழங்கிய மறையுரை

கல்வாரியில், பலர் ஒன்றும் பேசாமல் மௌனம் காத்தனர். ஒரு சிலர் ஏளனக் குரல் எழுப்பினர். மாசற்ற ஒரு மனிதர் துன்புறுகிறார் என்பதை, நல்ல கள்வர் மட்டும் குரல் எழுப்பிக் கூறினார்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

"இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்" (லூக்கா 23:42)

திருவழிபாட்டின் இறுதி ஞாயிறன்று, இயேசுவோடு சிலுவையில் அறையப்பட்டு, இயேசுவை அரசர் என்று அறிக்கையிட்ட குற்றவாளியின் குரலுடன் நமது குரலையும் இணைக்கிறோம். ஏனைய ஏளனக்குரல்கள் நடுவில், இயேசு செவிமடுத்த அச்சொற்களுக்கு அவர் தந்த பதில்: "நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்" (லூக்கா 23:43)

கல்வாரியில் நம்பிக்கை தரும் நிகழ்வு

பல குற்றங்களைப் புரிந்திருந்த அக்குற்றவாளியின் வாழ்வு, ஒரு நொடியில் மாற்றம் அடைகிறது. அநீதியில் ஆழ்ந்திருந்த கல்வாரிக் காட்சியை, நல்ல கள்வரின் கூற்று, நம்பிக்கை தரும் நிகழ்வாக மாற்றுகிறது. இன்று, இவ்விடத்தில், நமது நம்பிக்கையையும், உறுதியையும் நாம் புதுப்பிக்க விரும்புகிறோம். மாசற்ற மனிதர்கள் துன்புறும்போது, நம்மில் பலர், "உன்னையே காப்பாற்றிக் கொள்" என்று ஏளனமாகக் கூறி விலகிக்கொள்கிறோம்.

மனிதர்கள் எவ்வளவு தூரம் அழிவு சக்தி கொண்டவர்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த நாடு துன்புற்றுள்ளது. மாசற்ற ஆண்டவருக்கு உதவி செய்யும் வண்ணம், நல்ல கள்வரைப்போல, நாமும் குரல் எழுப்ப விழைகிறோம். "நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர்" என்று தந்தையாம் இறைவன் கூறுவதைக் கேட்க விழைகிறோம்.

புனித பால் மீகியும், அவரது தோழர்களும்

மீட்பு உண்டு என்ற உறுதியுடன், புனித பால் மீகியும், அவரது தோழர்களும், தங்கள் உயிரை, துணிவுடன் வழங்கி, சாட்சியம் பகர்ந்தனர். அவர்கள் வழியைப் பின்பற்றி, வெறுப்பு, தன்னலம், ஆகிய அனைத்தையும், அறையப்பட்ட கிறிஸ்துவின் அன்பு வெல்லும் என்று பறைசாற்ற விரும்புகிறோம். மனதைச் சோர்வடையச் செய்யும் எதிர்மறை எண்ணங்களையும், அவநம்பிக்கையையும், கிறிஸ்துவின் பாடுகள் வென்றுவிடும்.

வாழ்கின்ற இறைவனில் நம் நம்பிக்கை உள்ளது. கிறிஸ்து நமக்கு உயிரூட்டம் தந்து, வாழ்வின் முழுமைக்கு அழைத்துச் செல்கிறார். "உமது அரசு வருக" என்று ஒவ்வொருநாளும் நாம் செபிக்கிறோம். இச்சொற்களின் வழியே, நம் வாழ்வு முழுவதையும் ஒரு புகழ்ப்பாடலாக மாற்ற விழைகிறோம்.

மௌனம் காத்தல், ஏளனம் செய்தல்; இறைவாக்குரைத்தல்

கல்வாரியில், பலர் ஒன்றும் பேசாமல் மௌனம் காத்தனர். ஒரு சிலர் ஏளனக் குரல் எழுப்பினர். மாசற்ற ஒரு மனிதர் துன்புறுகிறார் என்பதை, நல்ல கள்வர் மட்டும் குரல் எழுப்பிக் கூறினார். அதுவே, அவரது நம்பிக்கை அறிக்கையானது. இத்தகைய வாய்ப்புக்கள், நம் ஒவ்வொருவருக்கும் உள்ளன: மௌனம் காக்கலாம்; ஏளனம் செய்யலாம்; அல்லது, இறைவாக்கினை உரைக்கலாம்.

நாகசாகியின் குணமாக்க இயலாத காயம்

அன்பு, சகோதரர்களே, சகோதரிகளே, நாகசாகி நகர், குணமாக்க இயலாத ஒரு காயத்தை இதயத்தில் தாங்கியுள்ளது. சிறு, சிறு துண்டுகளாக நடைபெற்றுவரும் மூன்றாம் உலகப் போரினால், மாசற்றவர்கள் உலகெங்கும் துன்புறுவதால் உருவாகும் காயம் அது.

துன்புறும் மனிதர்கள் அனைவருக்காகவும் இவ்வேளையில், நாம் இணைந்து, குரல்களை உயர்த்தி செபிப்போம். நம் மத்தியில், இன்னும் பலர், பிறர் துன்பம் கண்டு, மௌனம் காப்பதையும், ஏளனம் செய்வதையும் விடுத்து, நல்ல கள்வரைப் போல், நன்மை இவ்வுலகில் நிலவ உழைக்கும் சாட்சிகளாக வாழ்வோமாக!

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 November 2019, 12:47