Vatican News
பாங்காக் விண்ணேற்பு பேராலயத்தில், இளையோருக்கு, திருத்தந்தை வழங்கிய மறையுரை பாங்காக் விண்ணேற்பு பேராலயத்தில், இளையோருக்கு, திருத்தந்தை வழங்கிய மறையுரை  (ANSA)

இளையோர் திருப்பலியில் திருத்தந்தையின் மறையுரை

இளையோராகிய உங்கள் வழியே, இந்நாட்டின், மற்றும் உலகத்தின் எதிர்காலம் வருகிறது. தான் தெரிவு செய்த மக்களுக்கு இறைவன் உருவாக்கிய திட்டத்தைப் போல, உங்கள் ஒவ்வொருவருக்கும் அவர் திட்டம் வகுத்துள்ளார்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அன்பு நண்பர்களே, "ஆண்டவராகிய இயேசு வருகிறார், அவரை எதிர்கொள்ள வாருங்கள்!" நாம் இப்போது செவிமடுத்த நற்செய்தி, நாம் புறப்பட்டுச் சென்று, எதிர்காலத்தைச் சந்திக்க அழைப்பு விடுக்கிறது. இளையோருக்கே உரிய மகிழ்வோடும், ஆர்வத்தோடும், நாம் கிறிஸ்துவை நம் நடுவே வரவேற்போமாக.

இளையோர், தாய்லாந்தின், உலகின் எதிர்காலம்

இளையோராகிய உங்கள் வழியே, இந்நாட்டின், மற்றும் உலகத்தின் எதிர்காலம் வருகிறது. தான் தெரிவு செய்த மக்களுக்கு இறைவன் உருவாக்கிய திட்டத்தைப் போல, உங்கள் ஒவ்வொருவருக்கும் அவர் திட்டம் வகுத்துள்ளார்.

இறைவனின் விருந்தில் பங்கேற்க அழைப்பு பெற்றிருந்த பத்து கன்னியரைக் குறித்து, இன்றைய நற்செய்தி பேசுகிறது. அவர்களில் ஒருசிலர், இந்த விருந்தில் பங்கேற்பதற்கு சரியான முறையில் தயாராக இல்லை. துவக்கத்தில் ஆர்வமாக இருந்தவர்கள், நேரம் செல்ல செல்ல ஆர்வம் இழந்தனர். நம் ஒவ்வொருவர் வாழ்விலும் நிகழ்வதை இந்த உவமை எடுத்துரைக்கிறது. இறையரசில் பங்கேற்க நம் ஒவ்வொருவருக்கும் விடப்படும் அழைப்பைக் கேட்டு, முதலில் நாம் உற்சாகம் கொள்கிறோம். ஆனால், பிரச்சனைகளும், தடைகளும் எழும்போது, நமக்கு நெருங்கியவர்கள் துன்புறுவதைக் கண்டும் ஒன்றும் செய்ய இயலாமல் நாம் தவிக்கும்போது, நம்பிக்கை இழக்கிறோம், வெறுப்பும், கசப்பும் நம் உள்ளங்களை நிறைக்கின்றன.

திருத்தந்தையின் மூன்று கேள்விகள்

உங்களிடம் நான் மூன்று கேள்விகளைக் கேட்க விழைகிறேன். உங்கள் உள்ளங்களில் ஏற்றப்பட்ட ஒளியை, இருள் மற்றும் தொல்லைகள் நடுவே, தொடர்ந்து ஒளிரச் செய்ய விரும்புகிறீர்களா? ஆண்டவரின் அழைத்தலுக்குப் பதிலிருக்க விரும்புகிறீர்களா? அவரது விருப்பத்தை நிறைவேற்ற விருப்பமா?

நற்செய்தியின் அறிவிப்பு, உங்கள் வரலாற்றில் ஒரு சிறந்த கருவூலமாக வழங்கப்பட்டுள்ளது. நாம் கூடியிருக்கும் இந்த அழகிய பேராலயம் இதற்கு ஒரு சாட்சி. இந்த ஆலயத்தைவிட மிக அழகிய மனித சமுதாயத்தை நம் முன்னோர்கள் எழுப்பியுள்ளனர்.

முன்னோரின் நம்பிக்கையில் வேரூன்றி...

உங்கள் உள்ளங்களில் ஏற்றப்பட்டுள்ள ஒளியை தொடர்ந்து ஒளிரச் செய்வதற்கு, உங்கள் முன்னோரின், குறிப்பாக, உங்கள் பெற்றோர், தாத்தா, பாட்டி மற்றும் ஆசிரியர்கள் ஆகியோரின் நம்பிக்கையில் நீங்களும் வேரூன்றி நிற்கவேண்டும். இறந்த காலத்திலேயே தங்கிவிடாமல், எதிர்காலத்தையும், புதியச் சூழல்களையும் சந்திக்கும் துணிவை நீங்கள் கண்டுகொள்ளவேண்டும்.

சில வேளைகளில் நான், இளம் மரங்கள் உயரமாக வளர்ந்து, காற்றில் தங்கள் கிளைகளைப் பரப்பி அசைந்தாடுவதைக் கண்டிருக்கிறேன். பின்னர், புயலொன்று வீசியதும், அவை சாய்ந்துவிடுவதையும் பார்த்திருக்கிறேன். ஆணித்தரமாக தங்கள் வேர்களை ஊன்றாததால், அவை சாய்ந்துவிடுகின்றன. ஆணிவேர் ஏதுமின்றி, எதிர்காலத்தை உருவாக்க நினைக்கும் இளையோர், விரைவில் மனமுடைந்து போவதைக் காணும்போது நான் வருத்தமடைகிறேன். ஆழமாக வேரூன்றாமல், வாழ்வதால், இளையோர் எளிதில் அடித்துச் செல்லப்படுகின்றனர் (Christus Vivit, 179).

இளையோர், வேரற்ற மரங்களாக...

ஆழமான வேரில்லாதபோது, நம்மைச் சுற்றியெழும் 'குரல்களால்' அலைக்கழிக்கப்படுகிறோம். இந்தக் குரல்கள், ஆரம்பத்தில் அழகாக, கவர்ச்சிகரமாக ஒலிக்கின்றன; ஆனால், காலம் செல்ல, செல்ல, அவை, நம்மை மனத்தளர்ச்சிக்கும் வெறுமைக்கும் இட்டுச்செல்கின்றன.

அன்பு, இளம் நண்பர்களே, நீங்கள் ஒரு புதிய தலைமுறை. புதிய எதிர்நோக்குகள், கனவுகள், அதேவேளையில், கேள்விகள், ஐயங்கள் ஆகியவற்றைக் கொண்டிருந்தாலும், கிறிஸ்துவில் வேரூன்றிய இளம் தலைமுறையினர் நீங்கள். உங்கள் மகிழ்வில் நிலைத்திருந்து, எதிர்காலத்தை நம்பிக்கையுடன் சந்திக்க, உங்களை நான் உற்சாகப்படுத்துகிறேன்.

எதிர்காலத்தைக் குறித்து அச்சம் கொள்ளாமல், அதை சந்திக்க முன்வாருங்கள்! உங்கள் எதிர்காலத்தில் நீங்கள் இறைவனைச் சந்தித்து, அவர் தரும் இறையரசு விருந்தில் பங்கேற்பீர்கள்!

22 November 2019, 14:31