தேடுதல்

Vatican News
டோக்கியோ திருப்பலியில் திருத்தந்தை வழங்கிய மறையுரை டோக்கியோ திருப்பலியில் திருத்தந்தை வழங்கிய மறையுரை  (Vatican Media)

டோக்கியோ திருப்பலியில் திருத்தந்தை வழங்கிய மறையுரை

ஒருவருக்கொருவர் உதவி செய்வது, ஆதரவாக வாழ்வது எவ்விதம் என்பதைச் சொல்லித்தரவேண்டிய இல்லங்கள், பள்ளிகள் மற்றும் சமுதாயத்தில், போட்டிகள், இலாபம், திறமை என்ற கருத்துக்களே அதிகமாகச் சொல்லித்தரப்படுகின்றன.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, இப்போது நாம் கேட்ட நற்செய்தி வாசகம், இயேசு மலை மீது வழங்கிய மறையுரை என்று அழைக்கப்படுகிறது. நாம் அனைவரும் பின்பற்ற வேண்டிய பாதையை இந்த மறையுரை விவரிக்கிறது. விவிலியத்தில், மலை என்பது, இறைவன் தன்னையே வெளிப்படுத்தும் ஓர் இடமாக உள்ளது. மலையின் சிகரம் நம்மைச் சுற்றியுள்ள அனைத்தைக் குறித்தும் புதிய கண்ணோட்டங்களை வழங்குகிறது. இயேசுவில் நாம் மனிதர்கள் அடையக்கூடிய சிகரத்தை நாம் சந்திக்கிறோம். அவரில் நாம் புது வாழ்வையும், இறைவனின் குழந்தைகளுக்கே உரிய சுதந்திரத்தையும் அறிந்துகொள்கிறோம்.

இவ்வுலகம் வகுக்கும் அளவுகோல்கள்

நாம் வாழ்வுப் பாதையில் சந்திக்கும் பல்வேறு கவலைகளால், இறைவனின் குழந்தைகளாய் வாழும் சுதந்திரத்தை இழக்கக்கூடும். நமது கவனமும், சக்தியும், பொருள்களை உருவாக்குதல், போட்டிகள், மற்றும், நுகர்வு கலாச்சாரத்தில் திசை திருப்பப்படுகின்றன. முக்கியம் எவை என்பதைக் காட்ட இவ்வுலகம் வகுக்கும் அளவுகோல்களால், வாழ்வின் உண்மையான முக்கியத்துவத்தை நாம் மறந்துவிட வாய்ப்புண்டு. அனைத்தையும் உருவாக்கி, சொந்தமாக்கிக்கொள்ள நமக்கு எழும் ஆவல், நம் ஆன்மாவைச் சிறைப்படுத்துகின்றது!

தனித்துவிடப்படும் மக்கள்

பொருளாதாரத்தில் மிகவும் முன்னேற்றம் அடைந்துள்ள ஜப்பானில், தனித்துவிடப்படும் மக்கள் பலர் உள்ளனர் என்று இளையோர் என்னிடம் கூறினர். ஒருவருக்கொருவர் உதவி செய்து, ஆதரவாக வாழ்வது எவ்விதம் என்பதைச் சொல்லித்தரவேண்டிய இல்லங்கள், பள்ளிகள் மற்றும் சமுதாயத்தில், போட்டிகள், இலாபம், திறமை என்ற கருத்துக்களே அதிகமாகச் சொல்லித்தரப்படுகின்றன.

கவலைகள் என்ற சுமை

கவலைகள் என்ற சுமையைத் தாங்குவதற்குப் பதில், நம்பிக்கை கொள்ளவேண்டும் என்பதை, ஆண்டவரின் வார்த்தைகள் நமக்கு நினைவுறுத்துகின்றன. "எதை உண்போம்? எதைக் குடிப்போம்? எதை அணிவோம்? எனக் கவலை கொள்ளாதீர்கள்... நாளைக்காகக் கவலைப்படாதீர்கள்." (மத். 6:25,31,34) என்று மூன்று முறை கூறியுள்ளார். இந்த வார்த்தைகளின் வழியே, நம்மைச் சுற்றி நடப்பனவற்றைப் பற்றி கவலைப்படாமல் இருக்கவோ, அவற்றை குறித்து பொறுப்பேற்காமல் இருக்கவோ இறைவன் நம்மைத் தூண்டவில்லை. அதற்கு மாறாக, நம் வாழ்வில் எவை முக்கியம் என்பதை நிர்ணயிக்க விடப்படும் அழைப்பு இது: "அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள். அப்போது இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்." (மத். 6:33)

நமது அடிப்படை தேவைகளான உணவு, உடை ஆகியவற்றைப்பற்றி கவலைப்படவேண்டாம் என்று ஆண்டவர் சொல்லவில்லை, மாறாக, நாம் ஒவ்வொரு நாளும் எடுக்கும் முடிவுகளை மறு ஆய்வு செய்வதற்கு அழைக்கிறார். எப்படியாவது, வெற்றி பெறவேண்டும், அனைத்தையும் தனதாக்கிக்கொள்ள வேண்டும் என்று இவ்வுலகம் சொல்லித்தரும் பாடங்களுக்கு அடிமையாகாமல் இருக்க ஆண்டவர் அழைக்கிறார்.

இவ்வுலகம், இறைவன் வழங்கியுள்ள கொடை

நம்மை நாம் அடைத்துக்கொள்ளும் 'நான்' என்ற சிறைக்கு எதிராக இருப்பது, பகிர்வுக்கும் கொண்டாட்டத்திற்கும் நம்மை அழைக்கும் 'நாம்' என்ற சொல். இன்றைய முதல் வாசகத்தில், உயிர் துடிப்புடனும் அழகுடனும் திகழும் இவ்வுலகம், இறைவன் நமக்கு வழங்கியுள்ள உன்னதக் கொடை என்று சொல்லப்பட்டுள்ளது: "கடவுள் தாம் உருவாக்கிய அனைத்தையும் நோக்கினார். அவை மிகவும் நன்றாய் இருந்தன." (தொடக்க நூல் 1:31) இந்தக் கொடையின் முதலாளிகள் நாம் அல்ல, மாறாக, இதை மற்றவருடன், நீதியோடு பகிர்ந்துகொள்ள அழைக்கப்பட்டுள்ளோம் ('இறைவா உமக்கே புகழ்', 70).

நன்றி உணர்வோடும், பரிவோடும், அனைத்து உயிர்களையும் காப்பதே, கிறிஸ்தவ சமுதாயத்திற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு. உலகில் மிகச் சிறந்தது, தூயது ஆகியவற்றை அன்பு செய்வதைவிட, குறையுள்ளது, மற்றவர்களால் அன்பு செய்யப்பட இயலாதது ஆகியவற்றை அன்பு செய்வதற்கு நாம் அழைக்கப்பட்டுள்ளோம். இயேசு தன் வாழ்வில், தொழுநோயாளரை, பார்வையற்றவரை, பரிசேயரை, பாவியை அரவணைத்தார். சிலுவையில் தன்னை அறைந்தவர்களையும், தன்னோடு சிலுவையில் அறையப்பட்டிருந்த குற்றவாளியையும் அவர் அரவணைத்தார்.

போர்க்களத்தில் பணியாற்றும் ஒரு மருத்துவமனையைப் போல, திருஅவை செயலாற்றுவதே, நற்செய்தியை உண்மையாகப் பறைசாற்றும் வழி. இறைவனோடு ஒன்றித்து, நல்மனம் கொண்டோருடன் இணைந்து, அனைத்து உயிர்களையும் பாதுகாக்கும் ஒரு சமுதாயத்தை உருவாக்க, நாம் புளிப்பு மாவாக மாறவேண்டும்.

25 November 2019, 15:16