தேடுதல்

உரோம் நகர் LUMSA பல்கலைக் கழக ஆசிரியர்கள், மாணவர்களுடன் திருத்தந்தை உரோம் நகர் LUMSA பல்கலைக் கழக ஆசிரியர்கள், மாணவர்களுடன் திருத்தந்தை 

LUMSA பல்கலைக்கழகத்தினரைப் பாராட்டிய திருத்தந்தை

பல்கலைக்கழகம் என்றால், வெறும் அறிவுத்திறனை வளர்க்கும் நிறுவனம் மட்டுமல்ல, மாறாக, ஒரு குழும உணர்வை வளர்க்கும் இடம், சிறப்பாக, ஆண்கள், பெண்கள் ஆகிய இருபாலினரிடையே உரையாடலை வளர்க்கும் ஓர் இடம் - திருத்தந்தை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

உரோம் நகரில் அமைந்துள்ள விண்ணேற்படைந்த புனித மரியாவின் பல்கலைக்கழகம், (LUMSA), தன் 80வது ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கும் வேளையில், இப்பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வாழ்த்தினார்.

தங்கள் 80ம் ஆண்டு நிறைவையொட்டி, வத்திக்கானுக்கு வருகை தந்த LUMSAவின் ஆசிரியர்களையும், மாணவர்களையும் திருப்பீடத்தில் இவ்வியாழன் காலை சந்தித்த திருத்தந்தை, கல்வித் துறையில், குறிப்பாக, பெண்கள் கல்வியில் தனி அக்கறை கொண்டிருக்கும் இப்பல்கலைக் கழகத்தின் முயற்சிகளைப் பாராட்டினார்.

அண்மைய ஆண்டுகளில் புனிதர்களாக உயர்த்தப்பட்ட திருத்தந்தை ஆறாம் பவுல், மற்றும் கர்தினால் ஜான் ஹென்றி நியூமன் ஆகிய இருவரும், பல்கலைக்கழகங்களில் நிலவவேண்டிய பண்புகள் குறித்து வெளியிட்டிருக்கும் கருத்துக்களில் கவனம் செலுத்துவது முக்கியம் என்று, திருத்தந்தை, தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

பல்கலைக் கழகம் என்றால், வெறும் அறிவுத்திறனை வளர்க்கும் நிறுவனம் மட்டுமல்ல, மாறாக, ஒரு குழும உணர்வை வளர்க்கும் இடம் என்றும், சிறப்பாக, ஆண்கள், பெண்கள் ஆகிய இருபாலினரிடையே உரையாடலை வளர்க்கும் ஓர் இடம் என்றும், திருத்தந்தை எடுத்துரைத்தார்.

இவ்வுலகில், தங்களைச் சுற்றியிருக்கும் அனைத்திற்கும், அடித்தளமாக விளங்கும் உண்மையைப் புரிந்துகொள்வது, பல்கலைக்கழகத்தில் பயிற்றுவிப்போர், மற்றும் பயில்வோரின் முதல் கடமை என்று, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் கூறிய அறிவுரையை, தன் உரையில் நினைவுகூர்ந்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மனிதர்களின் அறிவு வளர்ச்சியில் மட்டுமல்ல, மாறாக, முழு மனித வளர்ச்சியில் பல்கலைக்கழகங்கள் கவனம் செலுத்தவேண்டும் என்று கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பல்வேறு பல்கலைக்கழகங்களுக்கிடையே நிலவேண்டிய கூட்டுறவு முயற்சியும் இன்றையத் தேவை என்பதைச் சுட்டிக்காட்டினார்.

LUMSA பல்கலைக் கழகம், 'நம்பிக்கையிலும் மனிதாபிமானத்திலும்' (In fide et humanitate) என்ற விருதுவாக்கை கொண்டுள்ளது என்பதை, கூடியிருந்த மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நினைவுறுத்திய திருத்தந்தை, இந்த விருதுவாக்கு, முழு மனித வளர்ச்சியை வலியுறுத்துகிறது என்பதை எடுத்துரைத்தார்.

பிளவுகளையும் முரண்பாடுகளையும் சந்தித்துவரும் இன்றைய உலகிற்கு, நம்பிக்கையையும், ஒருங்கிணைப்பையும் கல்வி வழியே கொண்டு செல்ல LUMSA குழுமம் அழைக்கப்பட்டிருக்கிறது என்பதை தன் உரையின் இறுதியில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உரோம் நகரில், அருள் சகோதரிகளை பயிற்றுவிக்கும் ஒரு நிறுவனமாக 1939ம் ஆண்டு துவக்கப்பட்ட LUMSA, 1989ம் ஆண்டு பெண்களின் கல்விக்கென செயலாற்றும் ஒரு பல்கலைக்கழகமாக உருவெடுத்து, 1991ம் ஆண்டு முதல் ஆண்களையும் மாணவர்களாக இணைத்துக்கொண்டது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 November 2019, 14:54