புத்த மத முதுபெரும் தந்தையைச் சந்தித்த திருத்தந்தை புத்த மத முதுபெரும் தந்தையைச் சந்தித்த திருத்தந்தை 

புத்த மத முதுபெரும் தந்தைக்கு திருத்தந்தையின் வாழ்த்துரை

பிரிவுகளையும், மோதல்களையும் உருவாக்கிவரும் இன்றைய உலகில், கிறிஸ்தவ, புத்த மதத்தினரின் உரையாடல் முயற்சிகள், சந்திப்புக் கலாச்சாரத்தை வளர்க்கின்றன.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

புனிதத்தன்மை கொண்டவரே, என் பயணத்தின் ஆரம்பத்தில், இந்த அரசகுல ஆலயத்திற்கு வந்திருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். மூதாதையரை வணங்குதல், ஆழ்நிலை தியானம், பற்றற்ற நிலை, கடின உழைப்பு, கட்டுப்பாடு ஆகியவற்றின் மீது எழுப்பப்பட்ட வாழ்வை மேற்கொள்ளுதல் என்ற புத்தமதக் கோட்பாட்டை, தாய்லாந்து மக்கள் பின்பற்றுகின்றனர். இதனால், நீங்கள் 'புன்முறுவலின் மக்கள்' என்ற பண்பைக் கொண்டிருக்கிறீர்கள்.

நாம் மேற்கொள்ளும் இச்சந்திப்பு, நம் முன்னோர்கள் மேற்கொண்ட சந்திப்புக்களின் தொடர்ச்சியாக உள்ளது. ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு முன், 7வது, அதிமிகு முதுபெரும் தந்தை Somdej Phra Wanarat அவர்களும், ஏனைய புத்த மதத் துறவிகளும், வத்திக்கானில், திருத்தந்தை 6ம் பவுல் அவர்களைச் சந்தித்தனர். நம் இரு மதங்களுக்கிடையே, உரையாடலையும், உறவையும் வளர்க்க, அச்சந்திப்பு உதவியது. அதைத் தொடர்ந்து, திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள், இந்த ஆலயத்திற்கு வருகை தந்து, அதிமிகு முதுபெரும் தந்தை Somdej Phra Ariyavongsagatanana அவர்களைச் சந்தித்தார்.

அண்மையில், Wat Pho ஆலயத்தின் பிரதிநிதிகள், வத்திக்கானுக்கு வருகை தந்து, என்னைச் சந்தித்தனர். பிரிவுகளையும், மோதல்களையும் உருவாக்கிவரும் இன்றைய உலகில், இத்தகைய முயற்சிகள், சந்திப்புக் கலாச்சாரத்தை வளர்க்கின்றன.

ஏறத்தாழ, 450 ஆண்டுகளுக்கு முன், இந்நாட்டில் அறிமுகமான கத்தோலிக்கச் சமயத்தை வரவேற்று, அச்சமயத்தைப் பின்பற்றுவோருக்கு, இந்நாட்டினர், சுதந்திரம் வழங்கியுள்ளனர்.

நம்பிக்கையோடும், மரியாதையோடும் நம் இரு சமயங்களுக்கிடையே உருவாகியிருக்கும் உரையாடல் பாதையில், தொடர்ந்து பயணிப்போம். கருணையோடும், பிறரன்போடும், வறியோருக்கும், இந்தப் பூமிக்கோளத்திற்கும் நாம் ஆற்றும் பணிகள் வழியே, இவ்வுலகில், உடன்பிறந்த உணர்வை வளர்க்க முயல்வோம்.

புனிதத்தன்மை கொண்டவரே, இறைவன் உமக்கு நல்ல உடன்நலனை வழங்கவும், புத்த மதத்தைப் பின்பற்றுவோரை, நீர் சிறப்பான முறையில் வழிநடத்தவும் நான் செபிக்கிறேன்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 November 2019, 13:20