தேடுதல்

மீட்புப் படை கிறிஸ்தவ சபையின் அதிபர் Brian Peddle, திருத்தந்தை பிரான்சிஸ் மீட்புப் படை கிறிஸ்தவ சபையின் அதிபர் Brian Peddle, திருத்தந்தை பிரான்சிஸ்  

Salvation Armyயின் பிறரன்பு பணிகளுக்கு திருத்தந்தை நன்றி

தன்னலமும், பிரிவினைகளும் நிறைந்த இன்றைய உலகில், தன்னையே வழங்கும் உண்மையான அன்பின் இனிய நறுமணம் அதிகம் தேவைப்படுகின்றது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மீட்புப் படை (Salvation Army) எனப்படும் கிறிஸ்தவ சபையினர், உரோம் நகரில், வீடற்றவர்கள் மற்றும், சமுதாயத்தின் விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டவர்களுக்கு ஆற்றிவரும் நற்பணிகளுக்கு நன்றி தெரிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

நவம்பர் 08, இவ்வெள்ளி காலையில், மீட்புப் படை கிறிஸ்தவ சபையின் அதிபர் Brian Peddle அவர்களை, திருப்பீடத்தில் தனியே சந்தித்து கலந்துரையாடிய பின்னர், அச்சபையின் பிரதிநிதிகளைச் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சபையினர், கிறிஸ்துவின் சீடத்துவத்திற்குச் சான்றாக வாழ்ந்து வருவதைப் பாராட்டிப் பேசினார்.

ஏழைகளுக்கு ஆதரவாகவும், மனித வர்த்தகம் மற்றும், ஏனைய நவீன அடிமைமுறைகளுக்கு எதிராகவும், இச்சபையினர் ஆற்றிவரும் பணிகள் பற்றி அறிந்திருப்பதாகத் தெரிவித்த திருத்தந்தை, கிறிஸ்தவ ஒன்றிப்பு பற்றிய தனது முதல் பாடத்தை, இக்கிறிஸ்தவ சபையினரைச் சந்தித்த நிகழ்விலிருந்து தெரிந்துகொண்டதாகக் கூறினார்.

புனிதத்துவம்

புனிதத்துவம் என்பது, கிறிஸ்தவ சபைகளையும் கடந்தது என்று, ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர், இச்சபையின் முன்னாள் அதிபர் தன்னிடம் கூறியதைக் குறிப்பிட்ட திருத்தந்தை,  புனிதத்துவம் என்பது, நன்மைத்தனம், தோழமை மற்றும் குணப்படுத்தும் நற்செயல்களில் வெளிப்படுவதாகும் என்றும் கூறினார்.

தேவையில் இருப்பவர்களுக்கு உதவிசெய்யத் தூண்டுகின்ற, கைம்மாறு கருதாத அன்பு, புளிக்காரமாக மட்டுமல்லாமல், புதிதாகத் தயாரிக்கப்பட்ட ரொட்டியின் நறுமணத்தையும் கொண்டிருக்கின்றது என்று உரைத்த திருத்தந்தை, குறிப்பாக, இளையோர், இந்த நறுமணத்தில் மூச்சுவிடவேண்டிய தேவை உள்ளது, ஏனெனில், அது, அவர்களின் அன்றாட அனுபவத்தில் குறைவுபடுகின்றது என்று கூறினார்.

தன்னலமும், பிரிவினைகளும் நிறைந்த உலகில், தன்னையே வழங்கும் உண்மையான அன்பின் இனிய நறுமணம் அதிகம் தேவைப்படுகின்றது மற்றும், அது, நம் வாழ்வின் உன்னதமான பொருளுக்கு மனங்களையும், இதயங்களையும் திறக்கின்றது என்று,  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மீட்புப் படை கிறிஸ்தவ சபையினரிடம் கூறினார்.

Salvation Army (TSA) எனப்படும் பிரிந்த கிறிஸ்தவ சபை, 131 நாடுகளில் 17 இலட்சத்திற்கு அதிகமான உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. உலகளாவிய பிறரன்பு அமைப்பாகவும் செயல்படும் இச்சபை, ஏழைகள், கைவிடப்பட்டோர், பசித்திருப்போர் ஆகியோரின் உடல் மற்றும், ஆன்மீகத் தேவைகளை நிறைவேற்றும் நோக்கத்தில், 1865ம் ஆண்டு இலண்டனில் உருவாக்கப்பட்டது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 November 2019, 15:02